காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவரும், கே.எம்.டி. மருத்துவமனையின் நிர்வாகிகளுள் ஒருவரும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களுள் ஒருவரும் - அதன் தலைவரும், நஸூஹிய்யா மகளிர் மத்ரஸாவின் நிறுவனர் தலைவருமான ஒத்தமுத்து ஹாஜி எம்.எம்.உவைஸ் என்ற உவைஸ் ஹாஜியார் காலமானார். அவருக்கு வயது 93.
அவரின் மறைவு குறித்து காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஒப்பற்ற தலைவர் ஒத்தமுத்து அல்ஹாஜ் எம்.எம். உவைஸ் அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
2001ஆம் ஆண்டு ஐக்கியப் பேரவையைத் துவக்க காரண கர்த்தாவாக விளங்கி, அதன் மூலம் செயற்கரிய பல்வேறு சாதனைகளை புரிந்து, இறுதிவரை அதன் தலைவராக திகழ்ந்தார்கள்.
காயல்பட்டணம் மருத்துவ அறக்கட்டளை துவக்கம் காண உழைத்தவர்களில் முதன்மை இடத்தை பெற்றவர்கள். அவ்வறக்கட்டளையில் துவக்க காலம் முதல் பன்னெடுங்காலம் தலைமை பொறுப்பேற்று, கே.எம்.டி. மருத்துவமனையை திறம்பட வழி நடத்தி, இன்றுவரை அதன் காப்பாளர்களில் ஒருவராக விளங்கியவர்கள்.
காயல்பட்டணம் நாட்டாண்மை முஸ்லிம் முத்துச்சாவடியின் பொறுப்பான தலைவராக இருந்து, அதற்கேற்பட்ட இடையூறுகளை கலைந்து, அதன் வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தவர்கள்.
முஹியத்தீன் மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவராகவும், அதன் தற்போதைய தலைவராகவும் விளங்கியவர்கள்.
பல்வேறு பொது அமைப்புகளில் பங்கேற்று, முதிய வயதிலும் தளராது, அயராது சீரான சிந்தனையுடன், பொறுமையின் எல்லைக்கோட்டில் நின்று பொற்புடைய பொதுப்பணியாற்றிய தன்னிகரில்லா சேவையாளர்.
ஊர் நலன், சமூக ஒற்றுமை இவைகளுக்காக தன் வாழ் நாளை அற்பணித்த தியாக சீலர், பண்பாளர். மர்ஹூம் அவர்களின் மறைவுக்கு காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்கிக்கொள்கிறது.
அன்னாரது பிரிவால் துயருறும், அவர்களது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர்கள் விட்டுச்சென்ற சீரிய பணிகளை, அவர்கள் காட்டிச்சென்ற வழியில் நின்று நிறைவேற்ற உறுதி ஏற்போம்.
எல்லாம் வல்ல இறைவன், மர்ஹூம் அவர்களது பிழைகளைபொறுத்து, ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை அருள்வானாக.
ஆமீன்.
இரங்கல் கூட்டம்
நாள் : 20.12.2013 வெள்ளி மாலை 4.30 மணி
இடம் : ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸ்
இக்கூட்டத்தில் மர்ஹூம் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு அவர்களின் மஃபிரத்துக்காக துஆ செய்யப்படும். பொதுமக்கள் திரளாக இக்கூட்ட்த்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
இவண்,
பொதுச்செயலாளர், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை,
காயல்பட்டணம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |