காயல்பட்டினம் உட்பட தமிழகத்தில் 50 இடங்களில் மின்சாரம் துணை மின் நிலையம் துவக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள தமிழக அரசு செய்தி குறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (30.12.2013) கோடநாடு முகாம் அலுவலகத்தில், மதுரை மாநகர், மகாத்மா காந்தி நகரில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கிலோ வோல்ட்
துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி (VIDEO CONFERENCING) மூலமாகத் திறந்து வைத்தார்கள். மேலும், 505 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 49 துணை மின் நிலையங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின்
சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பு ஆகியவற்றை திறந்து வைத்து, குடிசை மின்
நுகர்வோர்களுக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (CFL) வழங்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார்கள்.
மின்பாதையில் ஏற்படுகின்ற மின்சக்தி இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படுகின்ற உச்சக்கட்ட மின் தேவையை நிறைவு செய்து, சரியான மின் அழுத்தத்துடன் மக்களுக்கு சீரான மின்சாரம்
வழங்கிட புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பது இன்றியமையாததாகும் என்பதை கருத்தில் கொண்டு புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 25.4.2013
அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்கள்.
அதன் அடிப்படையில், மதுரை மாநகர், மகாத்மா காந்தி நகரில் 4 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகவும்; 505 கோடியே 11 லட்சம் ரூபாய் செலவில்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 2 எண்ணிக்கையிலான 230 கி.வோ. துணை மின் நிலையங்கள், 29 எண்ணிக்கையிலான 110 கி.வோ. துணை மின் நிலையங்கள், 18 எண்ணிக்கையிலான 33 கி.வோ. துணை மின் நிலையங்கள்;
என மொத்தம் 509 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 50 துணை மின் நிலையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று திறந்து வைத்தார்கள்.
சூரிய ஒளியானது, மனித குலத்திற்கு தூய்மையானதும், சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்றதுமான எரிசக்தி ஆதாரம் கொண்டதாகும். சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை
முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தமிழ்நாடு சூரிய சக்திக் கொள்கை-2012 அறிமுகப்படுத்தி அதன் வாயிலாக சூரியசக்தியிலிருந்து
மின் உற்பத்திப் பெருக்கத்திற்கு ஒரு புதிய பாதை வகுத்துள்ளார்கள்.
அதன்படி, புதுப்பிக்கத்தக்க மற்றும் மாசற்ற எரிசக்தியினை ஊக்குவித்து அதன்மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் 55 லட்சத்து
80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 60 கிலோ வாட் திறன் கொண்ட சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்பை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்கள்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சென்னை தலைமை அலுவலகக் கட்டட மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் உற்பத்தி மூலம், வருடத்திற்கு சுமார் 1 லட்சம் மின் யூனிட் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்ய
இயலும்.
மேலும், இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தில் பெறப்படும் மின்சாரம் மின்வாரிய தலைமை அலுவலகத்தின் தினசரி மின் தேவையின் ஒரு பகுதியினை ஈடுசெய்ய பயன்படுவதோடு விடுமுறை தினங்களில் உற்பத்தியாகும் உபரி மின்சாரம் மின்
கட்டமைப்பு தொகுப்புடன் இணைக்கப்படும்.
பொது மக்களிடையே மின் சேமிப்பினை ஊக்குவிக்கும் வகையிலும், திறன்மிக்க மின்விளக்குகளின் சந்தை விலையைக் கருத்தில் கொண்டும், ஏழை எளிய மக்களும் இத்தகைய மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும்,
தமிழகத்தில் உள்ள சுமார் 14 லட்சத்து 62 ஆயிரம் குடிசை மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு விலையில்லா திறன்மிக்க சிறுகுழல் விளக்குகளை (ஊகுடு) வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, குடிசை மின் இணைப்பு நுகர்வோருக்கு 8 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான விலையில்லா சிறுகுழல் விளக்கு (CFL) வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, முதற்கட்டமாக 7 லட்சம் குடிசை மின் இணைப்பு நுகர்வோர்களுக்கு
விலையில்லா 9 வாட் சிறு குழல் (CFL) விளக்குகளை வழங்குவதன் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறன் மிக்க சிறுகுழல் விளக்குகளை (CFL) வழங்கினார்கள். இந்த
திட்டத்தின் பயனாக மட்டுமே சுமார் 40 மெகா வாட் மின்சாரத்தை சேமிக்க இயலும்.
மொத்தத்தில் 519 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான மின் திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்து, மின் விநியோகத்தை துவக்கி வைத்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் திரு நத்தம் ஆர். விசுவநாதன், தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., எரிசக்தித் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் லக்கானி,
இ.ஆ.ப., தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு கு. ஞானதேசிகன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவக்கப்பட்ட இடங்களில் காயல்பட்டினமும் ஒன்றென காயல்பட்டினம் மின்வாரிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
மற்றும்
ஏ.எஸ். புஹாரி, காயல்பட்டினம். |