தற்போது பயன்பாட்டில் உள்ள குடும்ப அட்டை, வரும் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை செல்லும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
தற்போது நடைமுறையிலுள்ள குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள உள்தாளில், 2013ஆம் ஆண்டிற்கான கலங்களுடன் 2014ஆம் ஆண்டிற்குப் பயன்படுத்தும் வகையில் உள்தாள் அச்சடிக்கப்பட்டுள்ளது. இக்குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து அரசு ஆணைகள் பிறப்பித்துள்ளது.
எனவே, குடும்ப அட்டைகளில் ஏற்கனவே 2014ஆம் ஆண்டிற்கு பயன்படுத்தும் வகையில் உள்தாள் இணைக்கப்பட்டுள்ளதால், குடும்ப அட்டைதாராகள் தங்கள் குடும்ப அட்டையைப் பயன்படுத்தி, 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |