இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்றிரவு 22.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75.
நிலத்தடியிலிருந்து மீத்தேன் வாயு எடுக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக, அவர் பட்டுக்கோட்டை சென்றிருந்தபோது, அத்திவெட்டி என்ற ஊரில் உடல்நலக் குறைவால் காலமானார். இறுதிச் சடங்குகள், நாளை (டிசம்பர் 31) மாலை 16.00 மணியளவில், கரூர் மாவட்டம் - சுருமான்பட்டியிலுள்ள வானகம் கிராமத்தில் நடைபெறுகிறது.
தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில், 1938ஆம் ஆண்டு கோ.நம்மாழ்வார் பிறந்தார். இயற்கை அறிவியலாளர்களுள் ஒருவரான இவர், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண்மை இளங்கலை பயின்று முடித்தார். 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்து, ஆய்வகங்களில் நிலவும் களப்பணியில் ஈடுபடாது செய்யப்படும் பயனில்லாப் பணிகளுக்கு எதிராக குரல் கொடுத்து மூன்றாண்டுகளில் வெளியேறினார். பசுமைப் புரட்சி, நிலச்சீர்திருத்தம், தொழில்மயமாக்கம், சூழல் பாதுகாப்பு தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர்.
தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்து வந்த அவர், குடும்பம் அமைப்பு உட்பட 250 மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராகவும் இருந்துள்ளார். இயற்கை விதையைத் தவிர்த்துவிட்டு, மரபணு மாற்ற விதைகள் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக அவர் தீவிரமாக தொடர் போராட்டத்தை நடத்தினார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பைத் துவக்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்தவர். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழையும் அவர் நடத்தி வந்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் இவர் காட்டிய முனைப்பைக் கருத்திற்கொண்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், இவருக்குச் "சுற்றுச் சூழல் சுடரொளி' விருதை வழங்கியது.
கரூர் மாவட்டம், சுருமான்பட்டி கிராமத்தின் கரட்டு மேடான பகுதியில், வானகம் என்ற பெயரில் இயற்கை வழி வேளாண்மை குறித்து, செய்முறை விளக்கங்களுடன் பொதுமக்களுக்கு அவர் விழிப்புணர்வூட்டி வந்தார். மாதந்தோறும் 3 நாட்கள் வானகத்தில் நடத்தப்படும் முகாமில், பெருமளவில் விவசாயம் செய்வோர், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருவோர் உட்பட ஏராளமானோர் இம்முகாமில் பங்கேற்று, இயற்கை வழி வேளாண்மை - எளிய வாழ்க்கை முறை குறித்து பாடங்களைப் பெற்றதோடு, நடைமுறையிலும் அவற்றைக் கடைப்பிடிக்கத் துவங்கினர்.
கடைசியாக, கடந்த நவம்பர் மாதம் 12, 13, 14 தேதிகளில் மாதாந்திர முகாம் நடத்தப்பட்டது. அதில், எழுத்தாளர்களும் - சமூக ஆர்வலர்களுமான காயலர்கள் சிலரும் பங்கேற்று வந்தனர்.
மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்கெதிரான - நம்மாழ்வாரின் நடைப்பயணம் காரணமாக, டிசம்பர் மாத முகாம் நடத்தப்படவில்லை.
ஜனவரி மாதம் 02, 03, 04 தேதிகளில் மீண்டும் முகாம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாமிலும் காயலர்கள் சிலர் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், இன்று அவர் காலமானதால், நவம்பர் மாதம் நடத்திய முகாமே அவரது கடைசி முகாமாகிப் போனது.
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 23:05 / 30.12.2013]
|