உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் கடந்த 26.12.2013
ஆம் தேதி நடைபெற்றது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
இறையருளால் இக்ராஃ கல்விச் சங்க செயற்குழுக் கூட்டம், 26.12.2013 வியாழக்கிழமை இரவு 07.10 மணியளவில், காயல்பட்டினம் கீழ நெய்னா
தெருவில், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரே அமைந்துள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இக்ராஃ தலைவரும், ஜித்தா காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஜி குளம் எம்.ஏ.அஹமது முஹ்யித்தீன் கூட்டத்திற்குத் தலைமை
தாங்கினார். காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப்,
சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகரும் - இக்ராஃ கல்விச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
ரியாத் காயல் நல மன்ற தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவர்
வரவேற்புரையாற்றினார்.
இக்ராஃவின் கடந்த செயற்குழுக் கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்து, இக்ராஃ செயலாளர்
கே.ஜெ.ஷாஹுல் ஹமீது விளக்கிப் பேசினார். அவரது உரையின் உள்ளடக்கம் வருமாறு:-
கடந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட படி, கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் தேதியன்று காலை 09.00 மணி முதல் மதியம் 01.00
மணி வரை - இக்ராஃ ஜகாத் நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியருக்கு இக்ராஃ அலுவலகத்தில்
நேர்காணல் நடைபெற்றது.
விண்ணப்பித்த மொத்த மாணவ-மாணவியர் எண்ணிக்கை 48
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 25
அவற்றுள் மாணவர்கள் 22; மாணவியர் 3.
இக்ராஃ மூலம் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட மொத்த ஜகாத் தொகையான ரூபாய் 2 லட்சத்து 40 ஆயிரத்து 600 - விண்ணப்பதாரர்களுக்கு பிரித்து
வழங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு பல்துறை பொறியியல் படிப்புகள், பி.டெக்., பி.சி.ஏ., எம்.எஸ்.ஸி., பிஹெச்.டி., ஏசி
டெக்னீசியன், ஃபிட்டர் போன்ற படிப்புகளுக்கும், மாணவியர்களுக்கு பிசியோதெரபி, எம்.காம். உள்ளிட்ட படிப்புகளுக்கும் இந்த உதவித்தொகை
வழங்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், இக்ராஃவுக்கு சொந்த இடம் தேர்ந்தெடுப்பதற்காக பார்க்கப்பட்டுள்ள இடம் குறித்த விரிவான தகவல்களை
அரசுத்துறையினரிடமிருந்து ஆலோசனையாகப் பெற்றிட தீர்மானிக்கப்பட்ட படி ஆலோசனை பெறப்பட்டுள்ளது.
இக்ராஃவின் அரசுப் பதிவை புதுப்பித்து, கோப்புகளை சீரமைக்கும் பணி நிறைவுற்றுள்ளது.
வருமான வரி தொடர்பாக கணக்குத் தணிக்கையாளர் மூலம் கணக்குகளை தணிக்கை செய்யும் பணி நிறைவுற்றுள்ளது.
வரி விலக்கு கோரும் 12 ஏ சலுகைக்கான இக்ராஃவின் விண்ணப்பத்திற்கு இதுவரை அரசுத்தரப்பிலிருந்து பதில் ஏதும் பெறப்படவில்லை.எனவே
தொடர்ந்து அதைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி ஆடிட்டரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நமது ஆடிட்டர்
அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற்று, கல்லூரிகளில் இரண்டாம், மூன்றாமாண்டு பயிலும் மாணவ-மாணவியருக்கு பெரும்பாலும்
உதவித்தொகைகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. அழைக்கப்பட்டபோது வருகை தராத மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட arrears வைத்துள்ள ஒரு சில
மாணவ-மாணவியருக்கு மட்டும் இதுவரை தொகை வழங்கப்படவில்லை.
நடப்பு 2013-2014 கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவ-மாணவியருக்கு இதுவரை கல்வி உதவித்தொகை வழங்கப்படவில்லை. இக்ராஃ
அலுவலக இடமாற்றப் பணிகள், ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013’ நிகழ்ச்சி ஏற்பாட்டுப் பணிகள் , அரசு மற்றும் இதர தனியார்
நிறுவனங்கள் வழங்கிடும் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம்,அது குறித்த வழிகாட்டுதல் போன்ற பணிகளில் முனைப்புடன்
செயல்பட்டமையால், நடப்பாண்டு கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க இயலவில்லை.
நடப்பாண்டில் ஏற்கப்பட்டுள்ள மொத்த விண்ணங்கள் 48. அவற்றுள், இதுவரை 31 பேருக்கு மட்டுமே அனுசரணை பெறப்பட்டுள்ளது.
(இவ்வாறு தெரிவிக்கப்பட்டதும்,
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் 3,
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில் 2,
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) சார்பில் 3,
தக்வா அமைப்பின் சார்பில் அதன் செயலர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் 1,
ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் 3
என மொத்தம் 12 புதிய அனுசரணைகளுக்கு கூட்டத்திலேயே அந்த அமைப்புகளின் பொறுப்பாளர்களால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.)
ஆக, ஏற்கனவே பெறப்பட்ட 31 அனுசரணைகளுடன், நடப்பு கூட்டத்தில் பெறப்பட்ட 12 அனுசரணைகளையும் சேர்த்து மொத்தம் 43 அனுசரணைகள்
பெறப்பட்டுள்ளதாகவும், இன்னும் 5 பேருக்கு மட்டுமே நடப்பாண்டில் அனுசரணை பெற வேண்டியுள்ளதாகவும் கூட்டத்தில்
தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலான அனுசரணைகள் தற்போது கிடைக்கப் பெற்று விட்டபடியால் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ள - கல்லூரிகளில்
முதலாமாண்டு பயிலும் மாணவ-மாணவியருக்கு டிசம்பர் (இம் மாத) இறுதிக்குள் உதவித்தொகை வழங்கி முடிக்கப்படும் என - இக்ராஃ நிர்வாகி
ஏ.தர்வேஷ் முஹம்மத் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஒவ்வோர் ஆண்டும் கல்வி உதவித்தொகைக்கான அனுசரணை பெறுவதில் காணப்படும் சிரமத்தைக் களைய பல்வேறு ஆலோசனைகள் கூட்டத்தில்
பெறப்பட்டது:-
உலக காயல் நல மன்றங்களின் சுமையை அதிகரிக்க வேண்டாம் எனவும், உள்நாட்டிலேயே ஏராளமானோர் சொந்தத் தொழில் செய்து நன்கொடை
வாரி வழங்கும் அளவுக்கு நன்றாக இருப்பதாகவும், எனவே அவர்கள் மூலமும் கல்வி உதவித்தொகை பெறும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்றும்
ஜித்தா காயல் நற்பணி மன்ற செயலாளர் சட்னி எஸ்.ஏ.செய்யித் மீரான் கூறினார்.
கல்வி உதவித்தொகைக்கு அனுசரணையளிக்க - நகர பெண்களுக்கு ஊக்கமளிக்கலாம் என ஹாஜி எஸ்.இப்னு ஸஊத், ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல்
நஜீப் ஆகியோர் கூறினர்.
உள்நாட்டில், வெளியூர்களிலுள்ள காயல் நல மன்றங்களின் முறையான அனுமதியை முன்னரே பெற்று, அவற்றின் ஒன்றுகூடல் நிகழ்வுகளின்போது
இக்ராஃ சார்பில் முகாமிட்டு இக்ராஃவின் சேவைகளை விளக்கிக் கூறி கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்கு அனுசரணையளிக்க
ஊக்கப்படுத்தலாம் என்றும், வெளியூர்களிலுள்ள காயலர்களை நேரில் சந்தித்தும் அனுசரணை கோரலாம் என்றும், நகரில் பெண்களுக்கான
ஒன்றுகூடல் நிகழ்ச்சியை பகுதி வாரியாக நடத்தியும், அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள்
மூலமும் அனுசரணை கோரலாம் என்றும் ஹாஜா அரபி (ஹாங்காங்) கூறினார். இக்கருத்தை ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், ஹாஜி
எஸ்.இப்னு ஸஊத் ஆகியோர் வழிமொழிந்தனர்.
நகரிலுள்ள பெண்கள் தைக்காக்களின் சார்பில் இக்ராஃவிற்கென பிரதிநிதிகளை அமைத்துக்கொண்டு, அவர்கள் மூலம் பெண்களிடையே இது தொடர்பாக
ஊக்கமளிக்கலாம் என ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் கூறினார்.
அதனைத் தொடர்ந்து கல்வி உதவித்தொகை அனுசரணைகளை சேகரிப்பதற்காக, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால் தலைமையில், ஹாஜி
என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.எம்.இஸ்மாயில் நஜீப் ஆகியோரடங்கிய துணைக்குழு நியமிக்கப்பட்டது.
அடுத்து இக்ராஃவின் இதுகாலம் வரையிலான பணிகள் குறித்த தகவல்கள், எதிர்கால திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை
கோரல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை உள்ளடக்கி பிரசுரம் மற்றும் பவர் பாய்ண்ட் ப்ரசென்டேஷன் ஆகியவற்றை ஆயத்தம் செய்வதற்கு,
ஜெ.செய்யித் ஹஸன்,
எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்,
எம்.எம்.செய்யித் இப்றாஹீம்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
ஆகியோரடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
உள்நாட்டு காயல் நல மன்றங்களின் ஒன்றுகூடலின்போது இக்ராஃ சார்பில் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள - அதன் துணைச் செயலாளர்
எஸ்.கே.ஸாலிஹ் நியமிக்கப்பட்டார். அவருடன், அவ்வப்போது இக்ராஃவின் உறுப்பினர்கள் ஓரிருவர் உடன் செல்லவும், இதற்கான செலவினங்களை
இக்ராஃ நிர்வாகச் செலவின் கீழ் செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
அடுத்து இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக, இதுவரை பெறப்பட்டுள்ள தொகை விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஓராண்டுக்கு மொத்த தேவை ரூபாய் 3 லட்சம்.
நடப்பாண்டில் பெறப்பட்டுள்ள தொகை ரூபாய் 1 லட்சத்து 90 ஆயிரம் மட்டும். பற்றாக் குறை ரூபாய் ஒரு இலட்சத்து பத்தாயிரம் வரை.
செலவினங்கள் விபரம் கூட்டத்தில் விளக்கப்பட்டது.
கத்தர் காயல் நல மன்றம் சார்பில், இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து ஆண்டுதோறும்
நடத்தப்படும் - நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டியின் வடிவமைப்பில், அம்மன்றத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்
குறித்து, அதன் உள்ளூர் பிரதிநிதியும், இக்ராஃ கல்விச் சங்க துணைச் செயலாளருமான எஸ்.கே.ஸாலிஹ் கூட்டத்தில் விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழமைபோல் வழங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
ஒரேயொரு முறை ரூபாய் 15 ஆயிரம் தொகை செலுத்தி, இக்ராஃ கல்விச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களாவதற்கு இதுவரை 105 பேர் இசைவு
தெரிவித்துள்ளதாகவும், அவர்களுள் 42 பேர் ஏற்கனவே தொகையை அளித்துவிட்டதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதோடு, ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்ட படி, இத்தொகை - இக்ராஃவுக்கான சொந்த இடம் வாங்கி கட்டிடப் பணிகள் மேற்கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதுவரை காயல் நல மன்றங்கள் மூலமாக பெறப்பட்ட ஆயுட்கால உறுப்பினர்களின் எண்ணிக்கை வாசிக்கப்பட்டது.அதில்
தாய்லாந்து காயல் நல மன்றம் மூலமாக - 30
ரியாத் காயல் நல மன்றம் மூலமாக - 9
சிங்கப்பூர் காயல் நல மன்றம் மூலமாக - 16
காயல்பட்டினம் ஐக்கியப்பேரவை , ஹாங்காங் மூலமாக- 10
ஜித்தா காயல் நல மன்றம் மூலமாக - 14
கத்தார் காயல் நல மன்றம் மூலமாக - 10
ஓமன் காயல் நல மன்றம் மூலமாக - 2
அடுத்து இக்ராஃ சொந்த இடத்திற்காக பரிசீலிக்கப்பட்டுள்ள இடத்தில், 5 ஆயிரம் சதுர அடியில் 1000 சதுர அடி நில உரிமையாளரால் ஏற்கனவே
தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்ட தகவல் தற்போது அறிய வந்துள்ள விபரம் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, இதுகுறித்த அடுத்தகட்ட நடவடிக்கை
குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.
4 ஆயிரம் சதுர அடியையே போதுமாக்கிக் கொள்ளலாம் என, சிங்கப்பூர் காயல் நல மன்ற துணைத்தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் கூறினார். அதே
கருத்தை பலரும் வழிமொழிந்தனர். இக்ராஃவின் வருங்காலத் திட்டங்களைக் கருத்திற்கொண்டே 5 ஆயிரம் சதுர அடி வாங்க தீர்மானிக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், தற்போதுள்ள சூழலைக் கருத்திற்கொண்டு 4 ஆயிரம் சதுர அடி நிலத்தைப் போதுமாக்கிக் கொள்ளலாம் என
பெருவாரியானோர் கருத்து தெரிவித்ததன் அடிப்படையில் இறுதி முடிவு செய்யப்பட்டது.
அடுத்து கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்துவது குறித்து நீண்ட கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. நிறைவில், இக்ராஃவுடன் இணைந்து
ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்புடன் இணைந்து
கலந்தாலோசித்து, இந்நிகழ்ச்சியை வடிவமைக்க தீர்மானிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பத்தாம் - பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சியை வழமை போல நடப்பாண்டிலும் நடத்தவும்,
அரசு பொதுத்தேர்வுக்கு சில மாதங்களுக்கு முன்பே அதனை நடத்தி முடிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அடுத்து ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்துவதற்கு இக்ராஃவிற்கு பெருந்தொகை செலவிடப்படுவதைச்
சுட்டிக்காட்டி, “இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தித்தான் ஆக வேண்டுமா?” என இக்ராஃ தலைவரும் - ஜித்தா காயல் நற்பணி மன்றத் தலைவருமான
ஹாஜி குளம் எம்.ஏ. அஹ்மத் முஹ்யித்தீன் கேள்வியெழுப்பி, இதுகுறித்து இக்கூட்டத்திலேயே பேசி முடிவெடுக்க கேட்டுக்கொண்டார். இதே
கருத்தினை ஜித்தா காயல் நற்பணி மன்றச் செயலர் சட்னி எஸ்.ஏ செய்யது மீரான் மற்றும் இக்ராஃ செயற்குழு உறுப்பினர் வாவு
எம்.எம்.மொஹுதஸிம் ஆகியோர் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இதனால் ஏற்பட்டுள்ள பலன்கள் என்ன என்பது குறித்த விவாதங்கள்-
கருத்துக்கள் பரிமாறப்பட்டது.
இந்நிகழ்ச்சி மிகவும் பயனளித்ததாக மாணவ-மாணவியரும், அவர்கள் தம் பெற்றோரும் கருதியதை தான் நேரில் கேட்டறிந்ததாகவும், எனவே
அவர்கள் நலனுக்காக இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்றும் இக்ராஃ மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத்
அபூபக்கர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் பரிசளிப்பு விழாவின்போது, மொத்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெறுவோரை ஊக்கப்படுத்துவதைக் காட்டிலும் கட்-ஆஃப் (சிறப்புத்
தகுதி) மதிப்பெண் அதிகளவில் பெறுவதற்கு மாணவ-மாணவியரை ஊக்கப்படுத்த வேண்டியது மிகவும் அவசியம் என்று ரியாத் காயல் நல மன்ற
தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் கூறினார்.
இந்த நிகழ்ச்சி குறித்து கருத்து தெரிவித்த இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மது, மாணவ-மாணவியர்களை motivate செய்வதற்காக நடத்தப்படும்
நிகழ்ச்சி இது என்றும், இதனால் மாணவர்கள் பலன் பெற்று வருகின்றனர் என்றும், இதனை மாணவ-மாணவியர்கள் எழுத்து மூலமாகவே
தெரிவித்துள்ளனர் என்றும், சென்ற வருடத்தைப் போன்று இவ்வருடமும் இந்நிகழ்ச்சிக்கு அனுசரணை செய்த கல்லூரி இதற்கு ரூபாய் ஒரு இலட்சம்
தருவதாக கூறியதாகவும், ஆனால் நிகழ்ச்சி முடிந்த பின் அவர்கள் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே தந்ததாகவும், எனவேதான் இந்த வருடம் இந்த
நிகழ்ச்சி செலவினங்களில் நிதி பற்றாக்குறை (Deficit) ஏற்பட்டுள்ளதாகவும், வரும் காலங்களில் செலவினங்களை குறைத்து, இதர
அனுசரணையாளர்களை பெற்றும் இந்த நிகழ்ச்சியை மட்டுமின்றி, கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியையும் வருடா வருடம் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட
வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து பேசிய இக்ராஃ செயற்குழு உறுப்பினரும், தி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் நிர்வாகியுமான எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ்,
இக்ராஃவில் அங்கம் வகிக்கும் அனைத்து மன்றங்களாலும் கலந்தாலோசனைக்குப் பின் தீர்மானிக்கப்பட்டு - அதனடிப்படையில் ஆண்டுதோறும்
நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துவதா, வேண்டாமா என்பதை இந்தக் கூட்டத்திலேயே முடிவெடுக்க வேண்டும் என்பதைத்
தவிர்த்து, இக்ராஃவில் அங்கம் வகிக்கின்ற - இணைந்து செயல்பட்டு வருகின்ற காயல் நல மன்றங்களுக்கு இக்கருத்தை சுற்றுக்கு விட்டு, அவர்களின்
கருத்துக்களையும் கேட்டறிந்து அவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்தடுத்த கூட்டங்களில் இதுகுறித்து முடிவு
செய்வதே பொருத்தமாக இருக்கும் என கூறினார்.
இதனை இக்ராஃவின் முன்னாள் தலைவரும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மது ஹஸன் வழி
மொழிந்தார்.
அதனைத்தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டோரின் கருத்துக்களும் கேட்கப்பட்டன.
இவ்வாறு கூட்ட நடவடிக்கைகள் அமைந்திருந்தன. நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மகளிர் பிரிவு:
இக்ராஃவின் செயல்திட்டப் பணிகளில் பெண்களின் ஒத்துழைப்பையும் பெற்றிடுவதற்காகவும், பெண்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்திடவும்
மகளிர் பிரிவு (பெண் தன்னார்வலர்கள் உட்பட) ஒன்றைத் துவக்கி செயல்படுத்த இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – வெளியூர்களில் முகாமிடல்:
இக்ராஃவின் வருடாந்திர கல்வி உதவித்தொகைக்கான அனுசரணை சேகரிப்பு உள்ளிட்ட - இக்ராஃவின் செயல்திட்டங்களை விளக்கி நிதியாதாரத்தைப்
பெருக்கிட, உள்நாட்டு காயல் நல மன்றங்கள் நடத்தும் ஒன்றுகூடல் நிகழ்ச்சிகளில் - இக்ராஃவின் பிரதிநிதியாக அதன் துணைச் செயலாளர்
எஸ்.கே.ஸாலிஹ் மற்றும் கூடுதலாக ஓரிருவரை அவ்வப்போது அனுப்பி வைக்கவும், அதற்கான செலவினத்தை இக்ராஃவின் பொது நிதியிலிருந்து
செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - துணைக்குழு:
கல்வி உதவித்தொகை அனுசரணைகளை சேகரிப்பதற்காக, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் அவர்கள் தலைமையில், ஹாஜி
என்.எஸ்.இ.மஹ்மூது, ஹாஜி ஏ.எம்.இஸ்மாயில் நஜீப் ஆகியோரடங்கிய துணைக்குழுவையும்,
இக்ராஃவின் இதுகாலம் வரையிலான பணிகள் குறித்த தகவல்கள், கல்வி உதவித்தொகைக்கு அனுசரணை கோரல் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை
உள்ளடக்கி பிரசுரம் மற்றும் பவர் பாய்ண்ட் ப்ரசென்டேஷன் ஆகியவற்றை ஆயத்தம் செய்வதற்கு,
ஜெ.செய்யித் ஹஸன், எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், எம்.எம்.செய்யித் இப்றாஹீம், எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் ஆகியோரடங்கிய
குழுவையும் இக்கூட்டம் நியமிக்கிறது.
தீர்மானம் 4 - சொந்த இடம்:
இக்ராஃவிற்கு 5 ஆயிரம் சதுர அடியில் சொந்த இடம் வாங்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதை மாற்றி - நடப்பு சூழலைக் கருத்திற்கொண்டு, ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்ட அதே இடத்தில் 4 ஆயிரம் சதுர அடியை மட்டும் போதுமாக்கிக் கொண்டு, அதனை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி:
ஆண்டுதோறும் இக்ராஃவுடன் இணைந்து கல்வி வழிகாட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள காயல்பட்டினம்-சென்னை வழிகாட்டு மையம் (KCGC)
அமைப்புடன் இணைந்து, அதுகுறித்து கலந்தாலோசித்து, நிகழ்ச்சியை வடிவமைக்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 6 - ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியை நடத்தல்:
தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சியை, அவ்வமைப்புடன் இணைந்து இக்ராஃ கல்விச்
சங்கம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இதை இக்ராஃ தொடர்ந்து நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்க, இக்ராஃவில் அங்கம்
வகிக்கின்ற - இணைந்து செயல்பட்டு வருகின்ற காயல் நல மன்றங்களுக்கு இக்கருத்தை சுற்றுக்கு விட்டு, அதிகாரப்பூர்வமாக அவர்களிடமிருந்து
பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்தடுத்த கூட்டங்களில் இதுகுறித்து முடிவெடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக நன்றியுரைக்குப் பின், துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இரவு 09:45 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!
இக்கூட்டத்தில் கே.எம்.என்.மஹ்மூது ரிபாய் (சிங்கப்பூர் காயல் நல மன்றம்), எஸ்.ஹெச்.ஷமீமுல் இஸ்லாம் (KCGC), ஹாஃபிழ்
பி.எம்.முஹம்மது ஸர்ஜூன், எம்.எம்.செய்யது இபுறாஹீம் (KCGC), எம்.என்.சிராஜுதீன் (SHIFA), ஓய்.எம்.முஹம்மது ஸாலிஹ் (ஜித்தா
காயல் நல மன்றம்), ஜே.செய்யது ஹஸன் (RIDA FOUNDATION), எம்.எஸ்.செய்யிது முஹம்மது (தாய்லாந்து காயல் நல மன்றம்) ஆகியோரும்
சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது,
மக்கள் தொடர்பாளர், இக்ராஃ கல்விச் சங்கம்,
காயல்பட்டினம். |