சஊதி அரபிய்யா - ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சர்வதேச கட்டுரைப் போட்டியில் காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவி சிறப்பு நிலை பரிசு பெற்றுள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பு:-
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் முப்பெரும் விழா 23.12.2013 அன்று சஊதி அரபிய்யாவின் தலைநகரமான ரியாத் நகரிலுள்ள ஃபத்ஹாவில் ரமத் ஹோட்டல் உள்ளரங்கில் நடைபெற்றது.
புரட்சிக் கவி பாரதியின் விழா, உலகலாவிய கவிப்பெரும் விழா மற்றும் அமைப்பின் அங்கத்தினரான மறைந்த அப்பாஸ் ஷாஜஹான், கல்யாண், திருமாவளவன் ஆகியோரது நினைவு விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பங்கேற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகளும், விருதுகளும் வழங்கப்பட்டன.
சர்வதேச கவிதை மற்றும் கட்டுரைப் போட்டியில் ஆஃப்ரிக்கா, இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகள் என பல நாடுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் பங்கு பெற்றிருந்தனர். இதில் ரியாத் இண்டர்நேஷனல் ஸ்கூல் சார்பாக பங்கெடுத்த அப்பள்ளியின் 06ஆம் வகுப்பு மாணவி - காயல்பட்டினம் ‘எட்டுக்கடை’ நவாஸ் என்பவரின் மகள் ஆலியா ஹைருன்னிஸா, ‘மனித நேயம்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரை சிறப்புக் கட்டுரையாகத் தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு நினவுக் கேடயம் வழங்கப்பட்டது. மாணவியின் சார்பாக நினைவுப் பரிசை, அப்பள்ளியின் ஆசிரியை பெற்றுக்கொண்டார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சூப்பர் இபுறாஹீம் (ரியாத்).
தொகுப்பு:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |