மின்னொளியில் நடத்தப்பட்ட ஃபுட்ஸல் பாங்காக் கால்பந்து இறுதிப் போட்டியில், பாங்காக் பால் பஸ்டர் அணி கோப்பையை வென்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பாங்காக் ஃபுட்ஸல் கோப்பைக்கான ஐவர் கால்பந்துப் போட்டி FIFA விதிமுறைகள் படி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு போட்டிகள் இம்மாதம் 03, 04, 05 தேதிகளில் - மாலை 17.00 மணி முதல் இரவு 22.00 மணி வரை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் - நகரிலேயே முதன்முறையாக மின்னொளியில் - ஐவர் போட்டிக்காகவே வடிவமைக்கப்பட்ட குறுங்களத்தில் - பாங்காக் சாக்கர் புகாரீ, எம்.ஏ.சி.இப்றாஹீம் ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
முதல் இரு நாட்களில் லீக் போட்டிகளும், மூன்றாம் நாளன்று அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளும் நடத்தப்பட்டன. சுற்றுப்போட்டியின் முதல் சுற்று லீக் முறையிலும், இரண்டாவது சுற்று நாக் அவுட் முறையிலும் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற அணிகளைக் கொண்டு காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டன.
(01) பாங்காக் பால் பஸ்டர்ஸ்
(02) காலரி பேர்ட்ஸ்
(03) ஸ்பானிஷ் சாக்கர்
(04) ஹார்டி பாய்ஸ்
(05) கேபி ஹார்ட் ராக்கர்ஸ்
(06) பிஸ்மி கிஃப்ட் சென்டர்
(07) எல்.கே.கய்ஸ்
(08) சி-யுனைட்டெட்
(09) கே-யுனைட்டெட் ‘ஏ’
(10) கே-யுனைட்டெட் ‘பி’
(11) கே-யுனைட்டெட் ‘சி’
(12) யுனைட்டெட் ஃபைவ்ஸ்
என மொத்தம் 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில், அணிக்கு 5 வீரர்கள் - 3 மாற்று வீரர்கள் என்ற நிர்ணயப்படி வீரர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
ஜனவரி 05ஆம் நாளன்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், சி-யுனைட்டெட் அணியும் - காலரி பேர்ட்ஸ் அணியும் மோதின. இதில் காலரி பேர்ட்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணியும், ஸ்பானிஷ் சாக்கர்ஸ் அணியும் களம் கண்டன. இதில், பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணி 5-2 என்ற கோல் கணக்கில் வென்று, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இறுதிப்போட்டியில், பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணியும், காலரி பேர்ட்ஸ் அணியும் களம் கண்டன. பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணிக்காக
சாக்கர் புகாரீ (அணி தலைவர்),
இப்றாஹீம் (கோல் காப்பாளர்),
வாவு,
ஸாலிஹ்,
அனஸ்,
ஷேக்,
ஹபீப்,
வாவு மொகுதூம்
ஆகியோர் விளையாடினர்.
காலரி பேர்ட்ஸ் அணிக்காக
யாஸர் அரஃபாத்,
பஷீர் அஹ்மத் (அணி தலைவர்),
நவ்ஃபல் (கோல் காப்பாளர்),
ராஸிக் ஹுஸைன்,
இஸ்மாஈல்,
ரிஃபாய்,
ஃகாலித்,
காதர்
ஆகியோர் விளையாடினர்.
தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு, ஈரணி வீரர்களையும் - சுற்றுப்போட்டியை நடத்திய சன் மூன் ஸ்டார் நிறுவன அதிபர் ஹஸன் அறிமுகம் செய்து வைத்தார்.
ஆட்டத்தின் முதற்பாதியில், 3-1 என்ற கோல் கணக்கில் பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணி முன்னிலையிலிருந்தது.
இரண்டாவது பாதியில், காலரி பேர்ட்ஸ் அணியின் பஷீர் அஹ்மத் என்ற வீரர் அற்புதமாக ஆடி 2 கோல்களை அடிக்க, 3-3 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிவுற்றது.
பின்னர், சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. இதில் பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அவ்வணியின் சாக்கர் புகாரீ, ஷேக், அனஸ் மற்றும் ஹபீப் ஆகியோர் தமதணிக்காக கோல் அடித்தனர். காலரி பேர்ட்ஸ் அணிக்காக பஷீர் அஹ்மத், ஃகாலித், இஸ்மாஈல் ஆகியோர் கோல் அடித்தனர்.
பின்னர் பரிசளிப்பு விழா துவங்கியது. எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், ஸலாஹுத்தீன், முபாரக் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர் ஹஸன் அஃப்ரிதி கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட - தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் வீரர் மோகன் ஆகியோருக்கு - முறையே எஸ்.எம்.எஸ்.ஹஸன், வாவு எம்.எஸ்.ஷாஹுல் ஹமீத் ஆகியோர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில், சிறந்த வீரருக்கான பணப்பரிசு, பாங்காக் பால் பஸ்டர் அணியின் ‘மாஷாஅல்லாஹ்’ ஷேக் என்ற வீரருக்கும், அதிக கோல் அடித்த வீரருக்கான பரிசு - 7 கோல்களை அடித்திருந்த காலரி பேர்ட்ஸ் அணி வீரர் பஷீர் அஹ்மதுக்கும், அதற்கடுத்து அதிகபட்சமாக 5 கோல்கள் அடித்தமைக்காக வாவு, பஷீர் அஹ்மத், இஸ்மாஈல் ஆகியோருக்கும் வழங்கப்பட்டது. சிறந்த கோல் காப்பாளருக்கான பரிசு காலரி பேர்ட்ஸ் அணியின் நஃவ்பல் என்ற வீரருக்கு வழங்கப்பட்டது.
பின்னர், இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பெற்ற காலரி பேர்ட்ஸ் அணி வீரர்களுக்கான தனிப் பரிசுகள் மற்றும் எம்.ஏ.சி.இப்றாஹீம் அனுசரணையிலான சுழற்கோப்பையை, சன் மூன் ஸ்டார் நிறுவன அதிபர் எஸ்.எம்.எஸ்.ஹஸன் வழங்கினார்.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற பாங்காக் பால் பஸ்டர் அணி வீரர்களுக்கான தனிப் பரிசுகள் மற்றும் சன் மூன் ஸ்டார் நிறுவனத்தின் அனுசரணையிலான சுழற்கோப்பையை, சிறப்பு விருந்தினர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் வழங்கினார்.
இச்சுற்றுப் போட்டியில் 40 வயதைத் தாண்டிய வீரர்கள் பலரும் விளையாடியமை குறிப்பிடத்தக்கது. அனைத்து போட்டிகளிலும் - இஸ்மாஈல், ஜமால், நெய்னா ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர். ஒலி-ஒளி ஏற்பாடுகள் எஸ்.எம்.சவுண்ட் சர்வீஸ் நிறுவனத்தால் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் அனைவருக்கும், போட்டி நடைபெற மைதானத்தைத் தந்துதவிய ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகத்திற்கும், போட்டி ஏற்பாடுகளை இணைந்து செய்து தந்த கலாமீ யாஸர் அரஃபாத், ஹிட்லர் ஸதக், யாஸீன், மீராலெப்பை, ஸ்பானிஷ் சாக்கர்ஸ் அணியினர், போட்டி நிரலை தயாரிக்க உதவிய ஜியாஉல் ஹக், ஸூஃபீ ஹுஸைன், அபுல் மஆலீ ஆகியோருக்கு விழா நிறைவில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவில், நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு ஆர்வலர்கள் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
‘சாக்கர்’ புகாரீ
[செய்தி திருத்தப்பட்டது @ 23:42 / 12.01.2014] |