காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் வீரர் - அண்மையில் காலமான எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் நினைவாக, தனியார் நிறுவனமான பி.எச்.எம்.ரெஸ்டாரண்ட் அனுசரணையில், “மர்ஹூம் ஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி”யை, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு போட்டிகள் இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) துவங்கியது. துவக்க ஆட்டத்தில், நாசரேத் Acession கால்பந்து அணியும், தூத்துக்குடி ஃப்ரெண்ட்ஸ் கால்பந்து அணியும் மோதின.
ஆட்டத்தின் முதற்பாதியில் ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் கடைசி நேரத்தில் தூத்துக்குடி அணி ஒரு கோல் அடித்து 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
முன்னதாக ஆட்டத்தின் இடைவேளையின்போது, துவக்கப் போட்டியில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்ட - ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் கோல் காப்பாளர் கேப்டன் ஹபீப், வீரர் மோகன் ஆகியோருக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டதோடு, ஈரணி வீரர்களும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
ஜனவரி 13ஆம் நாள் (இன்று) மாலையில் நடைபெறவுள்ள போட்டியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணியும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) அணியும் களம் காணவுள்ளன.
சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பாக..
தகவல் & படங்கள்:
‘PHM’ ஷேக்னா |