காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) நடத்திய காயல் ட்ராஃபி க்ரிக்கெட் 2014 போட்டியில், தூத்துக்குடியைச் சேர்ந்த ரமேஷ் ஃப்ளவர்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) சார்பில், “காயல் ட்ராஃபி” என்ற பெயரில், தூத்துக்குடி மாவட்ட அளவிலான டி20 க்ரிக்கெட் போட்டிகள், கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
6ஆவது முறையாக, நடப்பாண்டு போட்டிகள், “காயல் ட்ராஃபி - 2014” என்ற தலைப்பில், 2013 டிசம்பர் மாதம் 27ஆம் நாளன்று துவங்கி, இம்மாதம் ஜனவரி 05ஆம் நாள் வரை நடைபெற்றது.
இச்சுற்றுப் போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டி, இம்மாதம் 05ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 14.30 மணியளவில் நடைபெற்றது. தூத்துக்குடி ரமேஷ் ஃப்ளவர்ஸ் அணியும், ஆழ்வார்திருநகரி கவாஸ்கர் அணியும் மோதிய இப்போட்டியில், தூத்துக்குடி அணி முதலில் துடுப்பெடுத்தாடி, 20 ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களைப் பெற்றது. தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய ஆழ்வை அணி, 13.4 ஓவர்களில் 64 ஓட்டங்களை மட்டும் பெற்ற நிலையில் அனைத்து வீரர்களையும் இழந்து தோல்வியுற்றது.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. எல்.எஸ்.அப்துல் காதிர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். எம்.எம்.ஷாஹுல் ஹமீத் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்குத் தலைமை தாங்கிய - கே.எஸ்.ஸி. செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி தலைமையுரையாற்றினார். முன்னிலை வகித்த - தூத்துக்குடி மாவட்ட க்ரிக்கெட் கழக செயலாளர் சிவக்குமார் வாழ்த்துரையாற்றினார்.
திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கியதோடு, வெற்றிபெற்ற அணியினருக்கு சுழற்கோப்பை, சான்றிதழ் மற்றும் பணப்பரிசை வழங்கினார்.
சிறப்பு விருந்தினரான சட்டமன்ற உறுப்பினருக்கும், முன்னிலை வகித்த மாவட்ட க்ரிக்கெட் சங்க செயலாளருக்கும், சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாமிடம் பெற்ற அணிக்கு சுழற்கோப்பை, சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகளை, நகரப் பிரமுகர் ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் வழங்கினார். பின்னர், ஈரணி வீரர்களுக்கான தனிப்பரிசுகளும் நகரப் பிரமுகர்களால் வழங்கப்பட்டது.
இறுதிப்போட்டி குறித்து விழிப்புணர்வூட்டும் பொருட்டு முன்னதாக மேளதாளங்களுடன் நகர்வலம் நடைபெற்றது.
தகவல்:
M.ஜஹாங்கீர்
படங்கள்:
M.M.ஷாஹுல் ஹமீத் |