பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு இணையதளம் மூலம் மருத்துவ உதவிகளை சேகரித்து வழங்கி வரும் “மைக்ரோ காயல் அறக்கட்டளை"யின் சார்பில் ஏழை-எளிய மக்கள் 200 பேருக்கு - மருத்துவ உதவி பெறுவதற்கான காயல் மெடிக்கல் கார்ட் (KMC) வழங்க அதன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அல்லாஹ்வின் பேரருளாலும், நம் காயல் நல்லுள்ளங்களின் பேராதரவாலும் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வரும் ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை’ இம்மாத இறுதியில் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்வதை முன்னிட்டு, கலந்தாலோசனைக் கூட்டம் கடைபள்ளி எதிரில் உள்ள அலுவலகத்தில் - இம்மாதம் 04ஆம் தேதி இரவு 08:30 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை' யின் அங்கத்தினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளையின் வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் அங்கத்தினர்கள் 'ஸ்கைப்' மூலம் இக்கூட்டத்தை கலந்து கருத்து பரிமாறவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்ட நிகழ்வுகள்:
ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தக்வாவின் தலைவர் ஹாஜி வாவு சம்சுதீன் (தாய்லாந்து) அவர்கள் முன்னிலை வகித்தார். ‘மைக்ரோகாயல்’ செயலாளர் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் கூட்ட நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ இறைமறை வசனங்களையோதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார்.
செயலாளர் உரை:
‘மைக்ரோகாயல் அறக்கட்டளை’ துவங்கப்பட்டது நாள் முதல் கடந்த இரண்டு வருடங்களாக செய்து வரும் சேவைகளையும், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புடன் இணைந்து கடந்த நான்கு மாதங்களாக செய்து வரும் மருத்துவ உதவிகளையும் சாளை முஹம்மத் முஹ்யித்தீன் விளக்கிப் பேசினார்.
5 இலட்சம் வரை நிதி திரட்டி 20 பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கி தனது சேவையை துவங்கிய இவ்வமைப்பு, இறையருளால் தனது இரண்டாம் வருடத்தில் 13 இலட்சம் வரை நிதி திரட்டி நாற்பதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு (அதாவது கடந்த இரண்டு வருடத்தில் 18 இலட்சம் வரையிலான நிதியுதவி) உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். புதிதாக துவக்கப்பட்டு மிகச்சிறப்பாக இயங்கி வரும் 'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' மூலம் கடந்த நான்கு மாதத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை ’ தனது இணைய தளம் மூலம் நிதி திரட்டி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' மற்றும் KMT யுடன் இணைந்து, வெள்ளோட்ட (Pilot) முறையில் ஐம்பது குடும்பங்களுக்கு நமதூரில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' திட்டம் பயனாளிகளை முழுமையாக சென்றடைந்து அதனை கடந்த மூன்று மாதங்களாக அவர்கள் முறையாக பயன்படுத்தி வருவதாக கூறினார். அதிலும் குறிப்பாக ஒரு காலத்தில் நல்ல நிலையில் இருந்து வயதான காலத்தில் எவ்வித அடிப்படை வருமானமுமின்றி ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டு அடிப்படை மருத்துவ உதவிகளுக்கு கூட சிரம பட்டு கொண்டிருந்த ஒரு தம்பதியினருக்கு (குழந்தை பாக்கியமற்ற) இத்திட்டம் சென்றடைந்து அதன் மூலம் தாங்கள் பயன்பெருவதாக தன்னிடம் அவர்கள் மனமுருகி கூறியதை பகிர்ந்து கொண்டார்.
வரும் ஏப்ரல் முதல் இருநூறு குடும்பங்களுக்கு 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அதற்காக போதிய நிதி திரட்டும் வேலைகள் முடக்கிவிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.
‘மைக்ரோகாயல் அறக்கட்டளை’க்கு பகுதி நேர அலுவலக நிர்வாகிய தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரியான சகோ. பாஸித் மற்றும் & புதிய பொருளாளராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள சகோ. முஹம்மத் இப்ராஹிம் (48) அவர்களையும் வரவேற்று அறிமுகப்படுத்தி பேசினார்.
மைக்ரோகாயல் அறக்கட்டளை தலைவர் உரை:
அடுத்ததாக பேசிய அறக்கட்டளையின் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை’யின் மக்கள் நல சேவைகள் இறையருளால் பன்மடங்கு பெருகி வருவதாக கூறினார். அதிலும் குறிப்பாக தான் KMT யிலும் அங்கத்தினர் என்ற முறையில், 'காயல் மெடிக்கல் கார்டை (KMC)' பயன்படுத்தி வரும் ஏழை எளிய மக்கள் முகத்தில் ஒரு சந்தோசத்தை காண முடிந்தடையும் இதற்காக பங்களிப்பு செய்த அனைவருக்கும் அவர்கள் துஆ செய்து வருவதாக கூறினார். அது மட்டுமன்றி பலரும் தங்களுக்கும் KMC கார்ட் வழங்கும்படி கேட்டுக்கொண்டதாக அவர் கூறினார்.
இத்திட்டம் அடிப்படை மருத்துவ உதவிகளுக்கு கூட சிரம பட்டு கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு மிக பயனுள்ள திட்டமாக இருப்பதினால் வசதியுள்ள நம் சகோதரர்கள் ஓரிரு குடும்பங்களை (அதாவது ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு ஐந்தாயிரம் மட்டும்) தத்தெடுத்து உதவ முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்.
இத்திட்டத்தை மெருகூட்டி, வலிமைப்படுத்தும் வகையில் கலந்து கொண்டாரின் கருத்துப் பரிமாற்றம் அமைந்திருந்தது.
சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் உரை:
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்கள், இளம் சக்தியையும் நவீனத்தையும் மூலாதாரமாக கொண்டு செயல்பட்டு வரும் மைக்ரோகாயல் குறுகிய காலத்தில் நல்ல பல மருத்துவ உதவிகளை வழங்கிவருவதாக கூறினார். அத்துடன் ஷிஃபா துவங்குவதற்கு மைக்ரோகாயல் முக்கிய பங்கு ஆற்றியதை நினைவு கூர்ந்தார்.
இளைஞர்களை ஊக்குவித்து சுயமாக அவர்களே சமூக பொறுப்புகளை சுமக்கும் நிர்வகிக்கும் வண்ணம் வழி வகுத்து தேவையான ஆலோசனைகளை வழங்கி அவர்கள் ஒற்றுமையுடன் என்றும் செயல் பட வழிவகுக்க வைப்பதே இக்கால பெரியவர்களின் பணியென்றார். இதே அணுகுமுறையை சிங்கப்பூர் காயல் நலமன்றம் நடைமுறை படுத்தி, இளைஞர்களிடம் பொறுப்புகள் வழங்கப்பட்டு அவர்கள் மிகசிறப்பாக இயங்கி வருவதை சுட்டி காட்டினார்.
ஷிஃபா துவங்குவதற்கு முன்னரே தனது இணையதளம் மூலம் மக்கள் நல மருத்துவ உதவிகளை அளப்பரிய வண்ணம் செய்து வரும் மைக்ரோ காயலும் மற்ற காயல் நலமன்றங்கள் போல் ஷிஃபாவில் அங்கம் வகிப்பதில் கருத்து வேற்றுமை கொள்ள தேவையில்லை என்பதனை தனது சிங்கப்பூர் காயல் நல மன்றம் கூட்டத்தில் சுட்டி காட்டியதை பகிர்ந்து கொண்டார்.
தக்வா தலைவர் உரை:
இக்கூட்டத்தில் முன்னிலை வகித்த தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் ஹாஜி வாவு சம்சுதீன் அவர்கள் தனதுரையில், குறுகிய காலத்தில் அளப்பரிய மருத்துவ உதவிகளை மைக்ரோ காயல் செய்துவந்துள்ளது தனக்கு வியப்பையும் சந்தோசத்தையும் தருவதாக கூறினார். மேலும் எளிய மக்களுக்கு 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' மிகவும் பயனுள்ள திட்டமாக இருப்பதினால், தனது காயல் நலமன்றத்தினருடன் கலந்தாலோசித்து இத்திட்டதிற்கு தங்களது பங்களிப்பையும் பெற்றிட முயற்சிப்பதாக கூறினார்.
'ஷிஃபா' மற்றும் மைக்ரோ காயலின் மருத்துவ சேவைகளில் ஒரு சிலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அது பற்றி சிறு விளக்கத்தை தருமாறு கேட்டுகொண்டார்.
அதற்கு பதிலளித்த சாளை முஹம்மத் முஹ்யித்தீன் அவர்கள், காயல் நல மன்றங்கள் தங்கள் பகுதியில் வாழும் காயலர்களை ஒருங்கிணைத்து அதில் உறுப்பினர்களாக இணைந்துள்ளவர்களிடம் நிதி திரட்டி தங்களால் இயன்ற உதவிகளை செவ்வென செய்து வருகின்றது. ஆனால் மைக்ரோ காயலோ, உலகளாவிய காயலர்களை அதாவது காயல் நலமன்றங்களே இல்லாத (Ex :ஆஸ்திரேலியா, வட தென் அமெரிக்க) வெளியூர் / வெளி தேசங்களில் வாழும் காயலர்களை ஒருங்கிணைத்து உறுப்பினர்களாக கொண்டு , காயலர்கள் அல்லாத பங்களிப்பாளர்களிடமும் தனது இணைய தளம் மூலம் நிதி திரட்டி சேவை செய்து வரும் அமைப்பு.
'ஷிஃபா' தொடங்குவதற்கு முன்னர் நடைபெற்ற ஆரம்ப ஆலோசனை கூட்டங்களில் உலக காயல் நல மன்றங்கள் கேட்டு கொண்டதற்கிணங்க, மிகச்சிறப்பாக இயங்கி கொண்டிருக்கும் மைக்ரோ காயலும் மற்ற காயல் நல மன்றங்கள் எப்படி தனி ஒரு அமைப்பாக 'ஷிஃபா' வில் அங்கம் வகிகின்றதோ அது போன்று மைக்ரோ காயலும் அங்கம் வகித்து, 'ஷிஃபா' மூல பெறப்படும் விண்ணப்பங்களுக்கு நிதி திரட்டி அவர்கள் மூலமே அனைத்து மருத்துவ உதவிகளையும் மருத்துவ முகாம்களையும் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், 'ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன்' துவங்கிய கடந்த நான்கு மாதத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 7.5 இலட்சம் வரை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அதில் 3.5 இலட்சம் ‘மைக்ரோகாயல் அறக்கட்டளை ’ தனது 'உலகளாவிய உறுப்பினர்கள்' மூலம் (இணைய தளம்) நிதி திரட்டி 'ஷிஃபா' வாயிலாக மருத்துவ உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கியுள்ளதாக அவர் கூறினார். மேலும் 'ஷிஃபா' வுடன் இணைந்து 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' வழங்கியதையும் மற்றும் 'இலவச அக்யூபங்சர் மருத்துவ முகாமை' நடத்தியததையும் அவர் நினைவு கூர்ந்தார்.
வட்டியில்லா நிதித்திட்டம் ‘ஜன்சேவா’ :
வட்டியில்லா நிதித்திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதை அடிப்படை செயல்திட்டமாகக் கொண்டு செயல் பட்டு வரும் ‘ஜன்சேவா கூட்டுறவு சங்கம்’ அதன் கிளையை நமதூரில் முயற்சிகள் எடுத்து வருகின்றது. அதற்காக மைக்ரோ காயலின் உதவியை நாடியது. இதுகுறித்த அறிமுகம் மற்றும் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு 'ஜன்சேவா' வுடன் இணைந்து மைக்ரோ காயலும் ஏற்பாடு செய்திருந்தது. அது குறித்த தகவலை அறங்காவலர் ஜெ.செய்யித் ஹஸன் விளக்கி கூறினார். அதன் பின்னர் அது தொடர்பான கருத்து பரிமாற்றம் நடந்தது.
முடிவில் சில காலங்களுக்கு மருத்துவ உதவி திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுக்கபட்டது. அதனைத் தொடர்ந்து, பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - 200 பேருக்கு 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' வழங்கல்:
'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' மிகவும் பயனுள்ள திட்டமாக இருப்பதினால் வரும் நிதியாண்டில் ஜகாத் பெறத் தகுதியான (குறிப்பாக அநாதைகள், விதவைகள், ஊனமுற்றவர்கள், முஅத்தின்கள், புதிதாக இஸ்லாமைத் தழுவியவர்கள், அடிப்படை வருமானமில்லாதோர் - No breadwinners என) இருநூறு குடும்பத்தினருக்கு KMC அட்டையை வழங்கிட இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்காக நிதியுதவி திரட்டும் முயற்சியை பிப்ரவரி முதல் முடுக்கிவிட தீர்மானிக்கபட்டுள்ளது.
தீர்மானம் 2 – மருத்துவம் தொடர்பான சேவைகளை மட்டும் செய்தல்:
மருத்துவம் தொடர்பான (அதாவது அதிகமான மருத்துவ நிதி திரட்டல், அதிகமானோருக்கு 'காயல் மெடிக்கல் கார்ட் (KMC)' மருத்துவ அட்டை வழங்கல் மற்றும் பயனுள்ள மருத்துவ முகாம்களை நடத்தல் போன்ற) உதவி திட்டங்களில் மட்டும் தற்போது கவனம் செலுத்தலாம் என்று முடிவெடுக்கபட்டது.
தீர்மானம் 3 – ‘மைக்ரோகாயல்’ அமைப்பை அறக்கட்டளையாகப் பதிவு செய்தல்:
‘மைக்ரோகாயல்’ அமைப்பை, 'மைக்ரோகாயல் அறக்கட்டளை - MICROKAYAL TRUST’ என பெயர் மாற்றம் செய்து, வரும் ஏப்ரல் மாத்திற்குள் அரசுப் பதிவு செய்வதெனவும், இதற்கான பொறுப்பை புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாக அலுவலர் சகோ. பாசித் அவர்களிடம் வழங்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு கஃப்பாரா துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
சாளை முஹம்மத் முஹ்யித்தீன்
ஒருங்கிணைப்பாளர் - ‘மைக்ரோகாயல்’ |