காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றாமலிருக்கும் தென்னக ரயில்வேயைக் கண்டித்து நடத்தப்படவுள்ள போராட்டம் குறித்து, இன்று (பிப்ரவரி 17ஆம் நாள்) திங்கட்கிழமை இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த - நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக்கமிட்டிகள் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, போராட்டத்தை ஒருங்கிணைக்கும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
ரயில் மறியல் போராட்டம்:
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் நடைமேடையை விரிவாக்கவும், உயர்த்தவும், மேற்கூரையமைக்கவும், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டு, பணிகளும் துவக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனைக் கண்டித்து, இம்மாதம் (பிப்ரவரி) 18ஆம் தேதியன்று காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில், ரயில் மறியல் போராட்டம் நடத்த, ஜனவரி 07ஆம் தேதி நடைபெற்ற நகரின் சர்வகட்சியினர் – பொதுநல அமைப்பினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
விளக்கப் பொதுக்கூட்டம்:
அதன் தொடர்ச்சியாக, ‘ரயில் மறியல் போராட்டம் ஏன், எதற்கு?’ எனும் தலைப்பில், விளக்கப் பொதுக்கூட்டத்தை, வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இரவு 07.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்திடுவதென, கடந்த ஜனவரி மாதம் 26ஆம் நாளன்று - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகத்தில் மீண்டும் நடைபெற்ற சர்வ கட்சியினர் பொதுநல அமைப்பினர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.
வட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை:
இந்நிலையில், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வருமாறு, திருச்செந்தூர் வட்டாட்சியர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், இன்று மதியம் 03.00 மணியளவில், வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
காயல்பட்டினம் நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் பங்கேற்ற இக்கூட்டத்தில், இம்மாதம் 11ஆம் தேதி இதே அலுவலகத்தில் மறு கூட்டம் நடத்தப்படும் என்றும், அக்கூட்டத்தில் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறும், அனைவரும் கோரியது போல உறுதியான அறிவிப்பை தொடர்வண்டித் துறை அதிகாரிகள் அக்கூட்டத்தில் எழுத்துப்பூர்வமாக வழங்கிட ஆவன செய்வதாகவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.
மீண்டும் கலந்தாலோசனை:
எனினும், வட்டாட்சியரால் தெரிவிக்கப்பட்ட படி மறுகூட்டம் நடத்தப்படாததால், இம்மாதம் 13ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 05.00 மணியளவில், அடுத்தகட்ட நடவடிக்கை முடிவெடுப்பதற்காக கலந்தாலோசனைக் கூட்டம், முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதர் மன்ஸிலில், கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ என்ற ஹாஜி காக்கா கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மதிமுக தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், நகர்மன்ற உறுப்பினர் இ.எம்.சாமி, முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
பின்னர், கூட்டத்தில் பங்கேற்றோரிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு, நிறைவில் பின்வருமாறு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-
தீர்மானம்:
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்தும், நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரியும் 18.02.2014 செவ்வாய்க்கிழமையன்று காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற - நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், அனைத்து ஜமாஅத்தினர், பொதுநல அமைப்பினர், புறநகர் ஊர் நலக் கமிட்டியினர் பங்கேற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, போராட்டக் குழுவினரை 05.02.2014 அன்று அழைத்துப் பேசிய திருச்செந்தூர் வட்டாட்சியர் அவர்கள், 11.02.2014 அன்று மறுகூட்டம் நடத்தி, அதில் - மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றிட ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றுத் தருவதாக வாக்களித்திருந்தார்.
வட்டாட்சியர் உறுதியளித்த படி மறுகூட்டம் நடத்தப்படாததால், ரயில்வே நிர்வாகத்தைக் கண்டிக்கும் போராட்ட விளக்க பொதுக்கூட்டத்தை 17.02.2014 திங்கட்கிழமையன்று (இன்று) இரவு 07.00 மணிக்கு காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தவும், இப்பொதுக்கூட்டத்தின்போது போராட்ட தேதியை அறிவிக்கவும் இக்கூட்டம் ஒருமனதாக தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நன்றியுரை, துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
பிரசுரம்:
அதன் தொடர்ச்சியாக, பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து பின்வருமாறு பொதுப்பிரசுரம் நகரெங்கும் வினியோகிக்கப்பட்டுள்ளது:-
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத் |