2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளா மாநிலம் பொன்னணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற இந்தியன் யூனியன்
முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் இ.அஹமத், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ரயில்வே துறை இணை
அமைச்சராக - மே 2009 இல் - பொறுப்பேற்றார்.
அவ்வாண்டின் இறுதியில் காயல்பட்டினம் வந்த மத்திய அமைச்சரிடம், காயல்பட்டினம் ரயில்வே நிலையம்
குறித்த பல்வேறு கோரிக்கைகள் நகர பிரமுகர்களால் முன்வைக்கப்பட்டது.
அன்றைய தினம், நகரில் நடந்த நிகழ்ச்சியில் - தன்னிடம் வழங்கப்பட்ட கோரிக்கையை தான் ஏற்றுக்கொண்டதாகவும், அப்பணிகளுக்கான
உத்தரவினை தான் உடனடியாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். அவர் வெளியிட்ட அறிவிப்பின் சாராம்சம் ...
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் கணணி மயமாக்கப்பட்ட முன்பதிவு மையம் மற்றும் உடனடி பயணச்சீட்டு மையம் விரைவில்
திறக்கப்படும்...
18 தொடர்வண்டி பெட்டிகள் நிறுத்துவதற்கு வசதியாக, இந்நிலையத்திலுள்ள நடைமேடை விரிவுபடுத்தப்படும்...
பயணியர் வசதிக்காக, காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் மேற்கூரை உடனடியாக அமைக்கப்படும்...
உயர் கோபுர ஒளிவிளக்குகள் நிறுவப்படும்...
அமைச்சரின் அறிவிப்பினை தொடர்ந்து - தென்னக ரயில்வே சார்பில் ஏப்ரல் 21, 2010 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் (எண்: 4-2010-14)
கோரப்பட்டதாக காயல்பட்டணம்.காம் வசம் உள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 1 கோடியே, 81 லட்ச ரூபாய் மதிப்பிலான அந்த ஒப்பந்தப்புள்ளி
கோரிக்கை - மூன்று இடங்களில் நடைபெறவேண்டிய பணிகளை இணைத்து வெளியிடப்பட்டிருந்தது.
அப்பணிகளின் விபரம் வருமாறு:
(1) திருநெல்வேலி சந்திப்பின் மூன்றாம் நடைமேடையில் கான்க்ரீட் தரை அமைப்பு, புது கட்டிடத்தில் பார்சல் அறை மேம்பாடு (Provision of
vacuum dewatered concrete flooring on platform No.3., improvements to concourse area and modification of parcel office at new
station building)
(2) காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் தற்போதுள்ள கீழ் அளவிலான நடைமேடையை - 18 பெட்டிகள்
தாங்கக்கூடிய அளவுக்கு நீட்டிக்கவும், ரயில் நிலைய கட்டிடத்தில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளவும், ரயில் நிலையத்தினை ஒட்டிய சாலையை
மேம்படுத்துதல், மேற்கூரை அமைத்தல், குடிநீர் வசதி வழங்குதல் போன்றவை (Proposed extension of existing BG low level platform to
hold 18 bogies capacity and improvements to station building, approach road, platform shelter, watering arrangements etc)
(3) குரும்பூர் ரயில்நிலையத்தில் தற்போதுள்ள நடு அளவிலான நடைமேடையை 18 பெட்டிகள் தாங்கக்கூடிய அளவுக்கு நீட்டிக்க (Proposed
extension of existing BG medium level platform to hold 18 bogies capacity)
இந்த ஒப்பந்தப்புள்ளிகள் ஜூன் 4, 2010 அன்று திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டதாக காயல்பட்டணம்.காம் வசம் உள்ள ஆவணங்கள்
தெரிவிக்கின்றன.
பொதுவாக ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதற்கு முன்னர், அப்பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் (ADMINISTRATIVE SANCTION) முதலில்
வழங்கப்படும். இதில் நிதி ஒதுக்கீடு ஒரு முக்கிய அம்சம். அதனை தொடர்ந்து - தொழில்நுட்ப ஒப்புதல் (TECHNICAL SANCTION) வழங்கப்படும்.
அதனை தொடர்ந்தே - ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.
ஜூலை 28, 2010 அன்று, பணிகளின் நிலை குறித்து அறிந்திட - தென்னக ரயில்வேயின் மூத்த மண்டல
அலுவலர்களை - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் தலைமையிலான குழுவினர்
சந்தித்தனர்.
அவ்வேளையில் - கணிணிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையம் துவக்கம், 18 மின் குழல்
விளக்குகள் நிறுவப்பட்டமை, கழிப்பறை, பயணியர் இருக்கை, சுற்றுச்சுவர் கட்டுமானம் உள்ளிட்ட - இதுவரை செய்துமுடிக்கப்பட்டுள்ள பணிகளைப்
பட்டியலிட்ட அந்த அதிகாரிகள், நடைமேடை விரிவாக்கம், நடைமேடையை ஹைலெவல் ப்ளாட்ஃபார்ம் ஆக உயர்த்தல், நடைமேடை முழுவதற்கும்
மேற்கூரை அமைத்தல், தொடர்வண்டி நிலைய நுழைவுப்பாதையில் தார் சாலை அமைத்தல், அதன் ஒரு பகுதிக்கு மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட
பணிகளுக்கென முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தொகை ஒதுக்கப்பட்டு ஆகஸ்ட் 8, 2010 முதல் முதல் பணிகள் துவக்கப்படும் என்று தெரிவித்தனர்.
பணிகளின் நடப்பு நிலையினை கண்டறிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்
தலைமையிலான குழு, செப்டம்பர் 26, 2010 அன்று காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு நேரடியாக
சென்றது.
நிலையத்தின் நடப்பு மேம்பாட்டுப் பணிகள் திருச்சியைச் சார்ந்த ஜேம்சிங் என்ற ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அவர் சார்பில்
இப்பணியைக் கண்காணித்து வந்த கண்காணிப்பாளர் ஜான் வின்ஸென்ட்டிடம் நடப்பு பணிகள் குறித்து அப்போது கேட்கப்பட்டது.
நிலையத்தின் வடகிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், நிலைய மேலாளர் அறை, பயணியர்
காத்திருப்பறை ஆகிய பகுதிகளில் டைல்ஸ் பொருத்தப்பட்டுள்ளதாகவும்,
நிலைய அலுவலகத்திற்கு நேரே தெரியும் நடைமேடையில் சுமார் 40 அடி நீளத்திற்கு மேற்கூரை அமைக்கப்படவுள்ளது என்றும்,
நிலையத்திற்குள் நுழைவதற்கான சாலை (அப்ரோச் ரோடு) தார்சாலையாக்கப்பட்டு வருவதாகவும்,
நடைமேடை இன்னும் இரண்டரை அடி உயர்த்தப்பட்டு உயர்நிலை நடைமேடையாக (ஹை லெவல் ப்ளாட்ஃபார்ம்) ஆக்கப்படும் என்றும் அப்போது
அவர் தெரிவித்தார்.
இப்பணிகள் 6 மாத கால அளவைக் கொண்டது என்றும், இரண்டு மாத பணிகள் முடிவுற்றுள்ளதாகவும், வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் அனைத்துப்
பணிகளும் செய்து முடிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் (ஜனவரி 24, 2011 முதல்) - ரயில்வே துறை இணை அமைச்சராக இருந்த, இ.அஹமத், வெளியுறவு துறை அமைச்சராக
மாற்றப்பட்டார். அதனை தொடர்ந்து - காயல்பட்டினம் ரயில் நிலைய பணிகள் தாமதப்பட துவங்கியதாக தெரிகிறது.
அஹமத் - வெளியுறவு துறை அமைச்சராகி ஓர் ஆண்டுக்கு பிறகு, ஜனவரி 30, 2012 அன்று நடந்த
காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழு ஊழியர் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் 70 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகள் இடைநின்றுபோயுள்ளது.
நிறைவேற்றப்பட வேண்டிய எஞ்சிய பணிகள் குறித்த நிலவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டுப் பெறவும், அப்பணிகள்
விரைந்து நிறைவேற்றி முடிக்கப்படாவிடில், நகர பொதுமக்கள் அனைவரையும் திரட்டி, மார்ச் மாதத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவும்
தீர்மானிக்கப்பட்டது.
மார்ச் 2012 இல் நடத்த திட்டமிடப்பட்ட ஆர்ப்பாட்டம், மே 26, 2012 அன்று நடத்தப்பட்டது.
அக்கூட்டத்தில் - காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் ரூ.70 லட்சம் செலவில் செய்ய திட்டமிடப்பட்ட மேம்பாட்டுப் பணிகள் அரைகுறையாக
நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைந்து முடிக்காவிடில், தூத்துக்குடி - நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் லீக்
கிளைகளை ஒருங்கிணைத்து, தென்மாவட்ட அளவிலான இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில் எவ்வித முன்னேற்றமும் நடைபெறவில்லை.
செப்டம்பர் 17,
2012 அன்று காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையினர் - மதுரையில் தென்னக ரயில்வே அதிகாரிகளை சந்தித்து, மீண்டும்
இக்கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஜனவரி 22, 2013 அன்று திருச்செந்தூர் வந்திருந்த தென்னக ரயில்வே அதிகாரியிடன் இக்கோரிக்கைகள்
குறித்து மீண்டும் நினைவு கூறப்பட்டு, மனு வழங்கப்பட்டது.
அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இவ்விஷயத்தில் இல்லை.
ஏறத்தாழ ஓர் ஆண்டுகள் கழித்து, இவ்வாண்டு ஜனவரி மாதம் 7ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
நடத்திய அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் - பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று, ரயில் மறியல்
போராட்டம் நடத்தப்போவதாக, முடிவு செய்யப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பினை தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான தி.மு.க.வின் ஜெயதுரை அறிக்கை ஒன்று
வெளியிட்டிருந்தார். அது ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஜனவரி 16, 2014 பதிப்பில் வெளியாகியிருந்தது.
அதில் ஜெயதுரை - தான், மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்துப்பேசியதாகவும், இப்பணி தொடர தேவையான நிதி ஒதுக்க
வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் உறுதியளித்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் - பிப்ரவரி 5 அன்று திருச்செந்தூர் வட்டாட்சியர் அழைப்பு விடுத்ததன் அடிப்படையில்,
வட்டாட்சியர் நல்லசிவன் தலைமையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தென்னக ரெயில்வே
திருநெல்வேலி மண்டல வணிக மேலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார். அப்பேச்சுவார்த்தைகளின் முடிவில், பிப்ரவரி 11 அன்று மீண்டும்
பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பிப்ரவரி 11 அன்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
பிப்ரவரி 12 அன்று வெளியிடப்பட்ட மத்திய ரயில்வே இடைக்கால பட்ஜெட் அறிவிப்பும் வந்தது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜெயதுரை தெரிவித்தது போல் - அதன் மூலமும் - காயல்பட்டினத்தில் தடைப்பட்ட
பணிகளுக்கு நிதி ஏற்பாடாகியதாக தெரியவில்லை.
இப்பணிகள் தடைப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒப்பந்ததாரர் - தனக்கு ரயில்வே துறையினால், பணம் வழங்கப்படாததால்,
பணிகளை முன்னரே - முடித்து கொண்டுவிட்டதாக (Foreclosure) கூறப்பட்டது. இப்பணிகளுக்கான நிதி இல்லை என்று கூறப்படுவதாக சில
தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது ஒரு புறம் இருக்க, காயல்பட்டினம் ரயில்வே நிலையம் சம்பந்தமான கோரிக்கைகள் அனைத்தும் - மதுரை மண்டல அலுவலகத்தில் மட்டுமே
வழங்கப்பட்டுள்ளன. மத்திய அமைச்சகம் அளவில் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இ.அஹமத் - ரயில்வே துறையில் இருந்து, வெளியுறவு துறைக்கு மாற்றப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் - மத்தியில் கூட்டணியில்
தொடர்ந்த, முஸ்லிம் லீக் கட்சி சார்பாகவோ, தி.மு.க. சார்பாகவோ - புதிதாக பொறுப்புக்கு வந்த ரயில்வே அமைச்சர்களிடம் இந்த கோரிக்கை
கொண்டு செல்லப்பட்டதாக தெரியவில்லை. இது குறித்து - முஸ்லிம் லீக் கட்சியினரிடம் விசாரித்ததில், ரயில்வே அமைச்சராக இருந்த மமதா
பானர்ஜி மாற்றலாகிய பிறகு, கோரிக்கையை எடுத்து செல்ல நிலையான சூழல் மத்தியில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இவ்விஷயத்தில் கேள்விக்குரியது - தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான தி.மு.க.வை சார்ந்த ஜெயதுரையின் பங்கு. ஜெயதுரை - 58% சதவீத
தினங்களே, பாராளுமன்ற கூட்டங்களில் கலந்துக்கொண்டதாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டிற்காக மத்திய அரசு வழங்கிய
19 கோடி ரூபாய் நிதியில், 16 கோடி ரூபாய் மட்டுமே இவர் பயன்படுத்தியதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
ரயில்வே சம்பந்தமான கேள்விகளே சுமார் 40 உட்பட - தனது பதவி காலத்தில் - ஏறத்தாழ 650 கேள்விகளை பாராளுமன்றத்தில் இவர்
எழுத்துப்பூர்வமாக எழுப்பியுள்ளார். அவற்றில் ஒன்று - ஆந்திர மாநிலத்தில் உள்ள தணுக்கு என்ற ஊரில் உள்ள ரயில் நிலையம் குறித்தது என
ஆவணங்கள் தெரிவிக்கின்றன!
ஆனால் - அவரை தேர்ந்தெடுத்த தொகுதியில் உள்ள காயல்பட்டினம் ரயில் நிலையம் குறித்து அவரோ, இந்த கோரிக்கைகளுக்கு 2010 இல் முதலில் ஒப்புதல் பெற்றுதந்த முஸ்லிம் லீகை
சார்ந்த பிற பாராளுமன்ற உறுப்பினர்களோ, பாராளுமன்றத்தில் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விஷயத்தில் தற்போது காணப்படும் தெளிவற்ற நிலை சில கேள்விகளை எழுப்புகிறது.
ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்போது - அத்துறையினால், முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகே - ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படும்.
ஏப்ரல் 2010 ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டப்போது, 3 ஊர்களுக்கான மொத்த மதிப்பீடான ரூபாய் 1.81 கோடி ஒதுக்கப்படாமல், ஒப்பந்தப்புள்ளிகள்
கோரப்பட்டதா?
அவ்வாறு ஒதுக்கப்பட்டிருந்தால், பாதியில் தன் பணியை நிறுத்திக்கொண்ட ஒப்பந்ததாரருக்கு, அவர் செய்த பணியளவிற்கு தானே பணம்
வழங்கப்பட்டிருக்கும். ஒதுக்கப்பட்ட மீதி தொகை என்னவாயிற்று?
ஏப்ரல் 2010 இல் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள்படி திருநெல்வேலி மற்றும் குரும்பூர் பணிகள் நிறைவுற்றதாக தெரிகிறது. காயல்பட்டினத்தில்
திட்டமிடப்பட்ட பணிகளில் - கட்டிடம் புனரமைப்பு, சாலை அமைத்தல், கூரை அமைத்தல் போன்ற பணிகள் நிறைவுற்றுள்ளன. காயல்பட்டினம்
ரயில் நிலையத்தின் நடைமேடையின் தற்போதைய நீளம் 270 மீட்டர். இதனை 405 மீட்டர் அளவிற்கு நீட்டிப்பதே கோரிக்கை. ஒப்பந்தப்புள்ளிகள்
தெளிவாக கூறும் - கீழ் அளவிலான நடைமேடையை - 18 பெட்டிகள் தாங்கக்கூடிய அளவுக்கு நீட்டிக்கும் பணி மட்டும் ஏன் நடைபெறவில்லை?
அதற்கான நிதி - வேறு திட்டத்திற்கு மாற்றி வழங்கப்பட்டதா?
இத்திட்டம் குறித்து காயல்பட்டணம்.காம், தென்னக ரயில்வேயிடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் முழு விபரம் கேட்டிருந்தது. சென்னை
தலைமையகத்திற்கு அனுப்பப்பட்ட கேள்விகளை, மதுரை மண்டல அலுவலகத்திற்கு மாற்றி அனுப்பி - பிப்ரவரி 7ம் தேதிக்குள் பதில்
வழங்கவேண்டும் என்று சென்னை தலைமையகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் - இது வரை, இது சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்த
பதிலும் பெறப்படவில்லை.
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:55 pm / 18.02.2014] |