காயல்பட்டினம் நகராட்சியில் - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மனுக்களை பொது தகவல் அலுவலர் (சுகாதார ஆய்வாளர்) மற்றும் மேல்
முறையீட்டு அதிகாரி (ஆணையர்) ஆகியோரிடம் நேரடியாக வழங்க சமீபத்தில் சிலரால் முயற்சி செய்யப்பட்டது. அவ்வேளையில் அதிகாரிகள், அம்மனுக்களை நேரடியாக பெற முடியாது எனவும், பதிவு தபால் மூலம் அனுப்பும்படியும் கூறியுள்ளனர் என தெரிகிறது.
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான மத்திய அரசின் வழிகாட்டு கையேடு - இம்மனுக்களை நேரிலும் வழங்கலாம் என தெரிவிக்கின்றது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள Guide on Right to Information, 2005 என்ற புத்தகத்தில் இருந்து ...
இவ்வாறு மனுக்களை வழங்க முயற்சித்த காயல்பட்டினம் ஹாஜி அப்பா
தைக்கா தெருவை சார்ந்த சமூக ஆர்வலர் M.S.H முத்து இஸ்மாயில், இது குறித்து - பிப்ரவரி 17 திங்கட்கிழமை - தூத்துக்குடி மாவட்ட
ஆட்சியகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்தில் - புகார் மனுவினை மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் IAS யிடம் வழங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் - அக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் எம்.காந்திராஜிடம் இது குறித்து வினவியுள்ளார் என தெரிகிறது. தான் புதிதாக
பொறுப்பேற்றுள்ளதாகவும், இது குறித்து தான் விசாரிப்பதாகவும், ஆணையர் அப்போது - மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார். அவ்வேளையில் -
நேரில் கொடுக்கும் மனுக்களையும் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர், ஆணையரை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
சமூக ஆர்வலர் முத்து இஸ்மாயில் சமர்ப்பித்த மனுவில் - நகராட்சி வளாகத்தில் உள்ள தகவல் பலகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வழங்கவேண்டிய அதிகாரிகளின் பெயர், அழிக்கப்பட்டுள்ளது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
|