முன்னாள் ரயில்வே துறை இணை அமைச்சர் இ.அஹமத் உத்தரவின் பெயரில் துவக்கப்பட்ட காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளில் - நடைமேடை நீட்டிப்பு போன்ற பணிகள் நிறைவுபெறாமல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இப்பணிகளை மீண்டும் துவக்க வலியுறுத்தி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒருங்கிணைப்பில், ரயில் மறியல் போராட்டம், பிப்ரவரி 23 அன்று நடைபெறவுள்ளது.
நிலுவைப் பணிகளை மீண்டும் துவக்க வலியுறுத்தப்பட்டபோது, போதிய நிதி இல்லை என்றும், சில வசதிகள் ரயில் நிலையம் மூலம் பெறப்படும் பயணியர் சேவை வருமானம் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது என்றும் தென்னக ரயில்வே அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதிகாரிகளின் இந்த விளக்கத்தில் உண்மையுள்ளதா? தென்னக ரயில்வேயின் அதிகாரப்பூர்வ தகவல்கள், ஆவணங்கள், கையேடுகள், சுற்றறிக்கைகள் மூலம் இதனை பார்க்கலாம்.
குறுகிய இருப்புப்பாதை, அகண்ட இருப்புப்பாதையாக புதுப்பிக்கப்பட்டபின் சேவைகளைத் துவக்க செப்டம்பர் 2008இல் காயல்பட்டினம் வந்திருந்த அப்போதைய மத்திய ரயில்வே துறையின் இணையமைச்சர் ஆர்.வேலுவுடன் காயலர்கள்
திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில் உள்ள ரயில் பாதை, குறுகிய இருப்புப்பாதையில் (METRE GAUGE) இருந்து அகண்ட இருப்புபாதையாக (BROAD GAUGE) - 2007 - 2008 காலகட்டத்தில் (21 மாதங்களில்) புதுப்பிக்கப்பட்டது. இம்மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வழங்கப்படும் வசதிகள் குறித்து, காயல்பட்டணம்.காம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை, தென்னக ரயில்வேயிடம் அப்போது கேட்டிருந்தது. அதற்கான பதில்களும் பெறப்பட்டன.
ஜூலை 30, 2007 அன்று காயல்பட்டணம்.காம் - இம்மார்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் வழங்கப்படும் நடைமேடையின் நீளம் குறித்து வினவியிருந்தது. அதற்கான பதில் செப்டம்பர் 18, 2007 அன்று வழங்கப்பட்டது. அதில் - திருநெல்வேலி, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ரயில் நிலையங்களைத் தவிர காயல்பட்டினம் உட்பட அனைத்து ரயில் நிலையங்களுக்கும் 270 மீட்டர் நீளம் கொண்ட நடைமேடை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ரயில் நிலைய நடைமேடைகள் 405 மீட்டர் நீளம் கொண்டவை என்றும் தெரிவிக்கப்பட்டது.
செப்டம்பர் 19, 2007 அன்று காயல்பட்டணம்.காம் மீண்டும் சில கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தென்னக ரயில்வேயிடம் கேட்டது. அதில் - செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம் போன்ற ரயில் நிலையங்களுக்கு 405 மீட்டர் நீள நடைமேடையும், இதர ரயில் நிலையங்களுக்கு 270 மீட்டர் நீள நடைமேடையும் ஏன் வழங்கப்படுகிறது என்ற கேள்வியும் அடங்கும். அதற்கான பதில் நவம்பர் 15, 2007 அன்று பெறப்பட்டது. அதில் - இதர ரயில் நிலையங்களில் நிற்கும் ரயில்களின் கூடுதலான நீளம் 126 மீட்டர் என்று தென்னக ரயில்வே சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிப்ரவரி 8, 2009 செந்தூர் விரைவுவண்டி துவக்க நிகழ்ச்சியில் காயலர்கள்
ஒரு பெட்டி என்பது சுமார் 22 மீட்டர் நீளம் கொண்டதாகும். எனவே தென்னக ரயில்வே குறிப்பிட்ட 126 மீட்டர், 6 பெட்டிகள் கொண்டு இயக்கப்படும்
பயணியர் ரயில்களை குறிப்பதாகும் என்பது தெளிவு. திருநெல்வேலி - திருச்செந்தூர் மார்க்கத்தில், செந்தூர் விரைவுவண்டி - பிப்ரவரி 2009இல் துவக்கப்படும் வரை, பயணியர் வண்டிகள் மட்டும்தான் இயக்கப்பட்டன. அதற்கு முன்னர் நடைபெற்ற இருப்புப்பாதை மாற்றுப் பணிகளின்போது, ஸ்ரீவைகுண்டம் மற்றும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையங்களுக்கு மட்டும் 18 பெட்டிகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய 405 மீட்டர் நீள நடைமேடை வழங்கப்பட்டது, இப்பாதையில் - அந்த இரு ரயில் நிலையங்களில் மட்டும்தான் விரைவு
வண்டிகளை நிறுத்த - தென்னக ரயில்வே நிலையம் திட்டமிட்டிருந்தது என்பதை இது உணர்த்துகிறது.
பின்னர், பொதுமக்களின் தொடர் கோரிக்கையையடுத்து - காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத் ரயில் நிலையங்களிலும் செந்தூர் விரைவு வண்டி நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் - அறிவிப்பு வந்த பிறகும், அவ்வண்டிகளின் அனைத்து பெட்டிகளையும் ஏற்றுக்கொள்ளும் வகையில், நடைமேடையை நீட்ட ஏற்பாடு செய்யப்படவில்லை.
நடைமேடையின் நீளம் குறித்து - காயல்பட்டணம்.காம் இணையதளம் கேட்ட கேள்விக்கு, “ஒரு ரயில் நிலையத்தின் வருமானம், அந்த ரயில் நிலையத்தின் பிரிவு (Category) அடிப்படையில்தான் நடைமேடையின் நீளம் இருக்கும்” என்ற பதில் தென்னக ரயில்வே அதிகாரிகளால் அப்போது வழங்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மாறாக - ரயில்
நிலையத்தில் நிற்கும் வண்டியின் மொத்த நீளமே (LENGTH OF THE LONGEST TRAIN), நடைமேடையின் நீளத்தை நிர்ணயம் செய்வதாக அதிகாரிகள் வழங்கிய பதில்களில் காண முடிந்தது.
இது குறித்து இந்திய ரயில்வேயின் வேலைகள் கையேடு (INDIAN RAILWAYS WORKS MANUAL) என்ன கூறுகிறது என்று பார்க்கலாம்.
262 பக்கங்கள் கொண்ட இந்த கையேட்டின் PASSENGER AMENITIES, STATIONS AND YARDS என்ற அத்தியாயத்தின் நடைமேடைகள் குறித்த பத்தி (எண் 411) பின்வருமாறு தெரிவிக்கிறது.
411 Platforms
a) Length of Platforms : The length should be adequate to accommodate the longest train received at the station.
ஒரு ரயில் நிலையத்தில் நிற்கும் (பல ரயில்களில்) மிகவும் நீண்ட ரயிலை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நடைமேடை இருக்கவேண்டும்.
எனவே - இந்திய ரயில்வேயின் விதிமுறைகள், ஒரு ரயில் நிலையத்தின் நடைமேடையின் நீளம், அந்த ரயில் நிலையத்திற்கு வரும் அதிக நீளம் கொண்ட ரயில்வண்டியின் நீளத்திற்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும் என்றே கூறுகின்றன. அந்த ரயில் நிலையத்தின் வருமானம் அதற்கு வரைமுறையாகத் தெரிவிக்கப்படவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
ஒரு ரயில் நிலையத்தின் வருமானம் அடிப்படையில் அங்கு எந்தெந்த வசதிகள் வழங்கப்படுகின்றன என்பதனை தொடரும் செய்திகளில் காணலாம்.
[தொடரும் ...] |