ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பிப்ரவரி 21ஆம் நாளன்று பெற்றுத் தரப்படும் என ரயில் மறியல் போராட்டக் குழுவினருடன் வட்டாட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை நிகழ்வுகள் குறித்து, போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 23ஆம் நாளன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் - நகரின் அனைத்து அரசியல் கட்சியிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் இம்மாதம் 17ஆம் நாளன்று நடத்தப்பட்ட போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு, அதன் தொடர்ச்சியாக, போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பொதுப் பிரசுரமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், போராட்டக் குழுவினரை - திருச்செந்தூர் வட்டாட்சியர் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்ததன் அடிப்படையில், இன்று மதியம் 03.30 மணிக்கு, போராட்ட ஒருங்கிணைப்பாளர் மன்னர் பாதுல் அஸ்ஹப் தலைமையில், ரயில் மறியல் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் மாநில செயலாளர் காயல் மகபூப், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், காயல்பட்டினம் நகர கிளை மூத்த தலைவர் ஹாஜி வாவு சித்தீக், நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட பொருளாளர் காயல் எஸ்.இ.அமானுல்லாஹ், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் காயல் முத்துவாப்பா, அதன் நிர்வாகி ஹாஜி ஏ.எஸ்.ஜமால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.கோபால், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மகேஷ், பண்டாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பன்னீர் செல்வம், தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் நகர தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், நகர செயலாளர் எம்.எச்.எம்.ஸதக்கத்துல்லாஹ், சமத்துவ மக்கள் கட்சியின் நகர தலைவர் அப்துல் அஜீஸ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், ஜெ.அந்தோணி உட்பட, நகரின் அனைத்து கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய போராட்டக் குழுவினர் - திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்றனர்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய வட்டாட்சியர் நல்லசிவன், காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நிலுவைப்பணிகள் ஏற்கனவே ஒப்பந்தம் விடப்பட்டவையாதலால், வரும் ஜூன் மாதம் 3ஆவது வாரத்தில் அவை நிறைவேற்றி முடிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான உறுதிமொழியை தான் எழுத்துப்பூர்வமாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொள்ளாத போராட்டக் குழுவினர், ஏற்கனவே பேச்சுவார்த்தைக்கு வட்டாட்சியர் அழைத்த காரணத்தால் - போராட்ட தேதியை பிப்ரவரி 18இலிருந்து 23க்கு மாற்றியமைத்து அறிவித்துள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் போராட்டத்திற்கு ஆயத்தப்பட்டுள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகள் யாரும் நடப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளாதது ஏமாற்றமளிப்பதாகவும் கூறியதோடு, வட்டாட்சியர் உறுதிமொழி தர வேண்டியதில்லை என்றும், ரயில்வே துறை சார்பில் எழுத்துப்பூர்வ உறுதிமொழி முறையாக கிடைக்கப்பெற்றால், போராட்டக் குழுவினர் மீண்டும் அமர்ந்து கலந்தாலோசித்து முடிவெடுக்கலாம் என்றும் முடிவாகக் கூறினர்.
நிறைவில், நாளை (பிப்ரவரி 21ஆம் நாள்) மதியம் 03.00 மணிக்கு மீண்டும் ஒருமுறை வட்டாட்சியர் அலுவலகம் வருமாறும், அப்போது ரயில்வே துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழியைப் பெற்றுத் தருவதாகவும் வட்டாட்சியர் கூற, அதற்கு போராட்டக் குழுவினர் இசைவு தெரிவித்தனர்.
பின்னர், வட்டாட்சியர் மூலமாக தென்னக ரயில்வே துறைக்கும், வட்டாட்சியருக்குத் தனியாகவும் இரண்டு கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்த பின் விடைபெற்றுச் சென்றனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[செய்தி திருத்தப்பட்டது @ 08:21 / 21.02.2014] |