எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவின் அளப்பெரும் கிருபையால் சஊதி அரபிய்யா – ஜித்தா, காயல் நற்பணி மன்றத்தின் 31 வது பொதுக்குழு மற்றும் 14 ஆம் ஆண்டு துவக்க நிகழ்வுகள் ஜித்தா ஹஜ் விமான நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள இஸ்திராஹா காலித் எனும் பெரியதோர் வெளி ஓய்வரங்கில் சிறப்பாக நடந்தேறியது. அந்நிகழ்வு குறித்த அம்மன்றத்தின் அறிக்கை:
கடந்த 07-02-2014 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணி முதல் இரவு 07:00 மணி வரை வெகு விமரிசையாக நடைபெற்ற ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் இனிய இந்நிகழ்வின் ஆரம்பமாக நிகழ்ச்சிக்கு வந்தவர்களை வரவேற்றல்;
வரவேற்பு:
ஏற்கனவே அறிவித்தபடி காலை 07:30 மணியில் இருந்தே உறுப்பினர்கள் ஜித்தா, ஷரஃபியா,ஆர்யாஸ் உணவகம் முன் வருகை தர, அங்கு ஏற்பாடு செய்யப்பட்திருந்த வாகனத்தில் நிகழ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டனர், மன்ற நிர்வாகிகள் மற்றும் வாகனமுள்ளோர் தமது வாகனங்களில் முற்கூட்டியே வந்து சேர்ந்தனர். மக்காவிலிருந்து ஏற்பாடு செய்யப்படிருந்த வாகனம் மூலம் தனி உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களும் சகோ.எம்.எ.செய்யது இப்ராஹிம் தலைமையில் திரளாக வந்து சேர்ந்தனர். ராபிக், யான்பு மற்றும் மதீனாவில் இருந்தும் ஏராளமான உறுப்பினர்கள் தனியாகவும் குடும்பத்துடனும் வந்திருந்தனர். வருகை தந்த அனைவர்களையும் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர், சகோ.குளம் எம்.எ.அஹ்மத் முஹ்யித்தீன், சகோ.பிரபு எஸ்.ஜே.நூர்த்தீன் நெய்னா, சகோ. முஹம்மது ஆதம், சகோ. எம். டபிள்யூ. ஹாமித் ரிஃபாய் ஆகியோர் அகமகிழ வரவேற்றனர்.
காலை உணவு:
வந்திருந்தோர் அனைவருக்கும் சுவைமிக்க காலை உணவு பசியாற இட்லி, சாம்பார், சட்னி, உளுந்துவடை, உப்புமா பஃபே முறையில் பரிமாறப்பட்டு, தேயிலை மற்றும் காப்பியுடன் உபசரிக்கப்பட்டது. வந்திருந்தோர் முகமலர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உற்சாகமாக உரையாடி, நலம் விசாரித்துகொண்டிருந்தனர். மறுபுறம் அமைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் உறுப்பினர்கள் தம் வருகையை பதிவு செய்து சந்தா செலுத்தி கொண்டிருந்தனர்.
விளையாட்டு போட்டிகள் :
முதலாவதாக வெளியரங்க விளையாட்டு போட்டிகள் விசாலமான மைதானத்தில் சிறுசுகளின் ஆரவாரத்துடன் ஆரம்பமானது. துள்ளிக்குதித்து வந்த சிறுவர்கள், சிறுமியர்கள், மழலைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் போட்டிகளில் கலந்துகொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை அதற்காக நியமிக்கபட்ட குழுவினர் சகோ.அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப், சகோ.ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ், சகோ.சீனா எஸ்.ஹெச்.மொஹுதூம்முஹம்மது, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மன்றத் தலைவர் சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் போட்டிக்குழுவிற்கு சில ஆலோசனைகள் வழங்கி சிறு குழுக்களாக பிரித்து போட்டிகளை துவக்கி வைத்தார்.
பெனால்டி கிக்:
பெரியவர்களுக்க வெளி விளையாட்டரங்கில், முதலாவதாக கால்பந்து பெனால்டி கிக் போட்டி 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு வழமையான உற்சாகத்துடன் நடைபெற்றது. யான்பு , மக்கா, மதினா, ஜித்தா என்ற பெயரில் போட்டிகுழுக்கள் கலந்து கொண்டன. விளையாட்டு போட்டிகள் நமதூரில் ஐக்கியவிளையாட்டு சங்கத்திற்கு உரித்தான பின்னணி இசையுடன் மைதானத்தில் நடைபெற்றபோது காயல் மண்ணில் இருந்தது போன்ற எண்ணம் மனதில் ஏற்பட, மகிழ்ச்சியை உணரமுடிந்தது. போட்டியில் கலந்து கொண்ட பெரியவர்கள் காயல் தெருக்களில் விளையாடும் சிறார்களாக மாறி கள்ள விளையாட்டு - நசுவினி ஆட்டம் ஆடமுற்பட்டது உண்மையான காயல் விளையாட்டை கண்முன் கொண்டுவந்தது. போட்டியில் பங்கு பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமுடன் பள்ளிப்பருவத்திலே துள்ளி விளையாடும் சிறுவர்களாக மாறினர். பெனால்டி கிக் வெற்றியை மக்கா அணி தட்டிச்சென்றது.
வாலிபால்:
அடுத்து வாலிபால் விளையாட்டு நடைபெற்றது. இவ்விளையாட்டும் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு யான்பு , மக்கா, மதினா, ஜித்தா என்ற பெயரில் விளையாடின. மிகுந்த ஆரவாரத்துடனும், சப்தத்துடனும் நடந்தேறிய வாலிபால் போட்டி விறு விறுப்பாக இருந்தது. இப்போட்டியின் வெற்றி வாய்ப்பும் மக்கா அணிக்கே கிட்டியது.
குட்டீஸ் போட்டிகள்:
மறுபுறம், குட்டீஸ்களுக்கான வெளி விளையாட்டரங்கில் மழலைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இசை நாற்காலி, சாக்கு ஓட்டம், முறுக்கு கடித்தல், வாளி உடைத்தல், பலூன் உடைத்தல், வளையம் சுற்றல், ஓட்டபந்தயம் என அனைத்து போட்டிகளிலும் மழலைகளும், சிறுவர்களும், சிறுமியர்களும் மிகுந்த சந்தோசத்துடனும் சுறு சுறுப்புடனும் கலந்துகொண்டனர். சிறார்களின் விளையாட்டுக்களை தாய்மார்கள் கண்டு ரசித்தனர். குழந்தைகளுக்கான அனைத்து போட்டிகளையும் சகோ.அரபி ஷுஅய்ப், சகோ.முஹம்மது ஷமீம் மற்றும் சகோ.புஹாரி ஸாலிஹ் ஆகியோர் முன்னின்று அழகுற நடத்தினர்.
மங்கையர்களுக்கான போட்டி:
விசாலாமான உள்ளரங்கில் மங்கையர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறியது. வாளியில் பந்து போடுதல், அரிப்பால் தண்ணீர் அள்ளி ஊற்றுதல், இசைப்பந்து, சைகை மொழி அறிதல், கிளாசில் பந்து போடுதல், பலூன் காற்றின் மூலம் கிளாசை தள்ளுதல் போன்ற போட்டிகளும் காயல் தமிழ், வினாடி வினா போன்ற பொழுபோக்கு நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெற்றது. மங்கையர்களுக்காண போட்டிகளை சகோதரிகள் அருமையாக நடத்தினர். மங்கையர் மற்றும் மழலைகள் மகிழ்ச்சி பெருக்கால் திளைத்தனர்.
ஜும்ஆ தொழுகை:
ஜும்ஆ தொழுகை நேரமானதால் மதியம் 12:௦௦ மணிக்கு போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, தொழுகைக்கு இடைவேளை விடப்பட்டு அருகில் இருந்த பள்ளிக்கு சென்று அனைவரும் தொழுதுவிட்டு வந்தனர்.
காயல் களரி சாப்பாடு:
ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டு, சுவைமிகுந்த காயல் மண்ணுக்கு சொந்தமான களரி சாப்பாட்டு பரிமாறப்பட்டது. முதலில் பெண்கள், மழலைகள் பந்தியும், பின்பு ஆண்கள் பந்தியுமாக நடைபெற்றது. களறி கறி, புளியாணம், கத்தரிக்கா என காயலை நினைவுபடுத்தி அதன் அதீத மனத்தால் மீண்டும் காயல் மண்ணுக்கே அனைவரையும் இழுத்துச்சென்றது. சுவைமிக்க களரி சாப்பாடு சகோ.கத்தீப் லெப்பைத்தம்பி தலைமையில் சிறப்புற தயார் செய்யப்பட்டிருந்தது. உணவு ஏற்பாடு, பரிமாறுதல் சகோதரர்கள் ஷாமீரான் சாஹிப், சட்னி முஹம்மது உமர், முஹம்மது ஆதம் ஆகியோர் கொண்ட குழுவினர் சிறப்பாக செய்தனர்.
கலந்தாலோசனை:
ஒருபுறம் வெளியரங்க போட்டிகள் ஜும்ஆ இடைவேளைக்கு பிறகு ஆரம்பமாகி நடந்து கொண்டிருக்க; மறுபுறம் கருமமே கண்ணாயினர் என்ற ரீதியில் மன்ற நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகளின் கலந்தாலோசனை கூட்டம் உள்ளரங்கில் நடைபெற்றது.
நம் நகரின் மருத்துவ கூட்டமைப்பான ஷிஃபா விலிருந்து வந்திருந்த மருத்துவ மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு தேவைப்படும் ஐந்து பயனாளிகளுக்கு உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. நகரின் மருத்துவ தேவைகள் மற்றும் ஏனைய நகர் நலசெய்திகள் குறித்தும் கருத்துக்கள் பரிமாறிக்கொண்டனர்.
இப்பொதுக்குழு நிகழ்சிகளுக்கு யான்புவிலிருந்து சகோ.ஆதம் சுல்தான், தம்மாமிலிருந்து சகோ.எம்.எ.அஹ்மது காசிம், ரியாதிலிருந்து சகோ.நுஸ்கி ஆகியோர் சிறப்பு பிரதிநிதிகளாக வருகை தந்திருந்தனர்.
கயிறு இழுக்கும் போட்டி:
ஜித்தா, மக்கா, மதீனா, யான்பு காயலர்கள் கலந்து கொண்ட கயிறு இழுக்கும் போட்டி, மக்கா அணி - ஜித்தா அணி என அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெற்ற கயிறு இழுக்கும் போட்டியில் இரு அணியினரும் தங்கள் பலம் முழுவதும் வெளிக்கொணர்ந்து இழுத்ததில் மக்கா அணி முதலில் வென்றாலும், நம் காயல் மரபு சொல்படி நசுவியதில் அங்கே குழந்தைதனம் தெரிய, இறுதியாக மனம் இறங்கிய நடுவர் மீண்டும் வாய்ப்பு கொடுத்து ஆடியதில் இறுதியாக ஜித்தா அணி வெற்றி கிரிடத்தை பறித்துசென்றது.
பெரியவர்களுக்காக, சிறு பந்தை தரையில் அடித்து துள்ளவிட்டு சரியாக வாளிக்குள் போடுதல், மற்றும் கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும் ஆப்பிலை பின்புறம் கைகளை கட்டியவாறு கடித்தல் போன்ற குதுகலமான விளையாட்டுக்களும் நடைபெற்றன.
காயல் மரபு சொல் விளையாட்டு:
அசர் தொழுகைக்குப்பின் சிப்ஸ் மற்றும் பால் சுவையுடன் உள்ளரங்க போட்டி ஆரம்பமானது. காயல் பிரத்யோக மற்றும் மரபு சொல் விளையாட்டு படம் பார்த்து – காயல் தமிழ் பேசு என்ற ஒரு அழகான தொகுப்பை காணொளி காட்சி மூலம் திறையிட்டு காட்டி, 4 பேர்கொண்ட 6 குழுக்களாக பிரிக்கப்பட்ட குழுவிடம் நம்பர் ஸ்லைட் காட்டி, நம்பர் ஒன்று தெரிவு செய்த பின், அங்கே படம் இரண்டோ, மூன்றோ சேர்ந்தார் போல் திரையில் தோன்றும், அதை வைத்து நம் காயல் தமிழ் சொல் கூற வேண்டும். உதாரணமாக முதல் படத்தில் நம்பர் 5 அடுத்து ஒரு அறை, அதனை அடுத்து ஒரு அட்டை பெட்டி, இப்போது கூறும் காயல் தமிழ் சொல் அஞ்சரை பெட்டி, இது போன்று ஏராளம். காயல் சகோதரர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டதில் நேரம் சென்றதே தெரியவில்லை. இப்போட்டியினை அருமையாக தயாரித்து நடத்தியவர்கள் சகோ.சீனா-எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது, சகோ.ஒய். எம் முஹம்மது ஸாலிஹ்.
பொதுக்குழு கூட்டம்:
மஃக்ரிப் தொழுகைக்கு பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவை சகோ. எம்.எம். மீரான் மூசா தலைமை ஏற்று நடத்த, சகோ.எஸ்.எம்.முஹம்மது லெப்பை கிராத் ஓதி தொடங்கி வைத்தார். ஹாஜி எம். சுல்தான், ஹாஜி எஸ்.டி. பாரூக் சகோ. ஆதம் சுல்தான் மற்றும் மருத்துவர் முஹம்மது ஜியாது அபூபக்கர் ஆகியோர் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். பொதுக்குழு நிகழ்வை சகோ. எம்.டபிள்யூ.ஹாமித் ரிஃபாய் தொகுத்து வழங்கினார்.
காயல் சங்கமத்தின் இடைவிடாத உற்சாக விளையாட்டினால் நேரமின்மையை கருத்தில் கொண்டு சில அறிவிக்கபட்ட போட்டிகள் நடத்தமுடியவில்லை மேலும் பொதுக்குழு மிக சுருக்கமாக நடைபெற்றது. நிதிநிலை அறிக்கையை சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம் அன்றையதினம் வசூலான அதிகமான சந்தா தொகைதனை எடுத்துரைத்தார். செயலர் சகோ.எம்.ஏ.செய்து இப்ராஹிம் இதுவரை நாம் வழங்கிய மொத்த தொகையின் நிதி நிலை அறிக்கைதனையும் இம்மன்றம் ஆற்றிய பல சேவைகளையும் பட்டியலிட்டு கூறியதோடு இன்னும் தொடர்ந்து சேவைகள் செய்திட தங்களின் மேலான ஒத்துழைப்பு மிக அவசியம் இதனால் நம் ஊர் ஏழை மக்களின் தேவை அறிந்து உதவி செய்வதினால் அவர்கள் நமக்காக துஆ செய்கின்றார்கள். அந்த துஆ நம்மை மேன்மேலும் வளரச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை. என்று இரத்தின சுருக்கமாக கூறி அமர்ந்தார்.
வாழ்த்துரை:
இந்த மாமன்றத்தின் நல்ல நோக்கம், குறிக்கோள், கோட்பாடு மற்றும் இவர்கள் ஆற்றிவரும் பணிகள், சொல்லி மாளாது அப்படி சேவைகள் ஆற்றி வருகின்றார்கள் என்பதை இங்கு வந்து காணும்போது நன்றாக உணரமுடிகிறது. அதுபோல் ஊரில் கொடிய நோய்க்கு காரணியாக இருக்கும் நட்சுக்காற்றை பரப்பும் ஆலையத்துக்கு எதிராக KEPA எடுக்கும் முயற்சியையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. எனவே நம் மக்களுக்காக ஆற்றி வரும் இம்மன்றத்தின் பல சேவைகளுக்கு எங்கள் யான்பு சகோதரர்களும் தோள் கொடுப்பார்கள் என்று தனது வாழ்த்துரையை நிறைவு செய்தார். சகோ. எம்.ஏ.ஆதம் சுல்தான்.
சிறப்புரை:
சிறப்புரை ஆற்ற மேடை ஏறிய உலக காயல் நல மன்றங்களின் கல்வி கூட்டமைப்பான இக்ராஃவின் தலைவரும், இம்மன்றத்தின் தலைவருமான சகோ.குளம் எம்.ஏ.அஹமது முஹைதீன் தனது உரையில், முன்னாள் நண்பர்களின் அயராத உழைப்பால் உருவான இம்மன்றம் தனது 14 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது. அன்று முதல் இன்று வரை தனது பல சேவைகளால் நம் வறியவர்களின் துஆக்களை பெற்று வளர்ந்து வருகின்றது. எனவே நம் சந்தாக்களோடு நன்கொடைகளையும் தந்துதவி நம் மக்களுக்கு மேலும் சேவை புரிந்திட நாம் முன் நிற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டதோடு, மன்றம் துவங்க பாடுபட்ட நல்லுள்ளங்களுக்கும், குடும்ப சங்கம விழாவாக நடைபெற்ற இப்பொதுக்குழுக்கு அயராது பாடுபட்டு உழைத்த அன்பு சகோதரர்கள் அனைவர்களுக்கும், உணவு மற்றும் தின்பண்டம், பரிசுப்பொருட்கள், இஸ்திராஹா இவைகளுக்கு அனுசரணை வழங்கிய நண்பர்களுக்கும், வாகன உதவி செய்தவர்களுக்கும், இப்பொதுக்குழுவிற்கு பல இடங்களில் இருந்து வந்து கலந்து கொண்ட அனைவர்களுக்கும் தனது நன்றி கலந்த பாராட்டுக்களை உணர்ச்சி பெருக்குடன் கூடிய நன்றிவுரையாக நிறைவு செய்தார்.
பரிசளிப்பு விழா:
தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், ஆண்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மங்கையரின் சார்பாக அவர்களின்குழந்தைகள் வந்து பரிசுகளை மிக குதூகலத்துடன் வாங்கி சென்றனர்.
இறுதியாக குலுக்கல் முறையில் பம்பர் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. மெகா குலுக்கலில் அதிர்ஷ்டசாலியாக மதீனா மூவன் பிக் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு நாள் தங்கும் அரியதோர் வாய்ப்பை சகோ எம்.எம். அபூபக்கர் ஸித்தீக் பெற்றுக்கொண்டார். நம் அன்பு அழைப்பினை ஏற்று குடும்பத்துடன் வருகை தந்த சிறப்பு விருந்தினர் ஹாஜி சுல்தான் அவர்கள், ஹாஜி. எஸ்.டி. முஹம்மது ஃபாரூக் மற்றும் சகோ. மருத்துவர் எம்.எ.முஹம்மது ஜியாத், சகோ. எஸ்.எஸ். ஜாபர் சாதிக், சகோ. எஸ்.எச்.அப்துல்காதர், சகோ. எம்.எம்.மீரான் மூசா, யான்பு சகோ.ஆதம் சுல்தான், சகோ.எம்.எ.முஹம்மது இபுராஹீம் மற்றும் மக்கா, சகோ.சீனா-எஸ்.ஹெச்.மொகுதூம் முஹம்மது, சகோ.ஒய். எம் முஹம்மது ஸாலிஹ், சகோ.எம்.ஏ.செய்து இப்ராஹிம் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சிக்கு புனித உம்ரா கடமைதனை நிறைவேற்ற குடும்பத்துடன் வந்திருந்த ஹாஜி முஹம்மது சுல்தான், ஹாஜி எஸ்.டி.முஹம்மது ஃபாரூக், மற்றும் ஹாங்காங்வாழ் காயல் சகோதரர்கள் . எம்.எஸ்.செய்யிது மீரான், எம்.எஸ்.முஹம்மது இஸ்மாயில், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் சகோ.ஐ.எல்.நுஸ்கி, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் மூத்த உறுப்பினர் சகோ.எம்.ஏ.அஹ்மது காசிம் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பொதுக்குழுவை சிறப்பித்தனர்.
சகோ. எஸ். எஸ். ஜாபர் சாதிக் பிரார்த்திக்க 'துஆ' கஃப்பாராவுடன் பொதுக்குழு, இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
காயலர்கள் சங்கமம் ஒருங்கிணைப்பை சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹிய்யதீன், சகோ. எம்.எம்.மூசாசாஹிப், சகோ.பிரபு எஸ்.ஜே.நூர்தீன்நெய்னா, சகோ.சொளுக்கு, செய்யது முஹம்மத் சாஹிப், சகோ.அரபி முஹம்மது ஷுஅய்ப், சகோ.எம்.எஸ்.எல்.முஹம்மதுஆதம், சகோ.சட்னி எஸ்.எ.முஹம்மதுஉமர்ஒலி, சகோ.எம்.என். முஹம்மது ஷமீம், சகோ.நஹ்வி எ.எம்.ஈசா ஜக்கரியா ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
தகவல்:
எஸ்.ஹெச்.அப்துல்காதர்,
துணைச்செயலாளர்
புகைப்பட உதவி:
சட்னி எஸ்.எ. முஹம்மது உமர் ஒலி,
எஸ்.எம். முஹம்மது உமர்,
காயல் நற்பணி மன்றம் – ஜித்தா
(மக்கா, மதீனா, யான்பு) |