சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் நாளன்று நடத்திட அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்றத்தின் 2014 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
ஜனவரி 2014 செயற்குழுக் கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் ஜனவரி மாத செயற்குழுக் கூட்டம், 24.01.2014 வெள்ளிக்கிழமை 19.00 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
உறுப்பினர் அபுல் காஸிம் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்ட அமைப்பாளர் உரை:
அடுத்து பேசிய - நடப்பு கூட்ட அமைப்பாளர் எம்.எம்.அப்துல் காதிர், மன்றத்தின் செயல்பாடுகள் அனைத்தும் இறையருளால் நல்ல முறையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.
புதிய காயலர்கள் அறிமுகம்:
சிங்கையில் வேலைவாய்ப்பு தேடி புதிதாக வந்திருக்கும் அப்துர்ரஸ்ஸாக் லுக்மான், மன்ற உறுப்பினர் சாளை ஹுமாயூன் மகன் ஷேக் ஷீத் ஆகியோர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல் - கடந்த கூட்ட நிகழ்வறிக்கையை சமர்ப்பித்து, அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை விவரித்துப் பேசினார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் டிசம்பர் 2013 மாதத்திற்கான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் மஹ்மூத் ரிஃபாய் சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதலளித்தது.
குடும்ப சங்கம நிகழ்ச்சி:
மன்றத்தின் அடுத்த - உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சி - மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் குடும்பத் திருமணத்தின் வரவேற்பு நிகழ்ச்சியாக 26.01.2014 அன்று, சிங்கப்பூர் அலோஹா சாங்கி சாலட்டில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் குடும்பத்துடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான - மன்ற ஆலோசகர் அழைப்பு விடுத்தார்.
அடுத்த கூட்ட அமைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த (பிப்ரவரி) செயற்குழுக் கூட்ட அமைப்பாளராக உறுப்பினர் சாளை ஷேக் நவாஸ் நியமிக்கப்பட்டார்.
ஆலோசகர் உரை:
தொடர்ந்து, மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் பேசினார். 2013 டிசம்பர் மாதத்தில் தான் தாயகம் சென்று வந்தபோது பங்கேற்ற நகர்நல நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கிப் பேசினார்.
இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்தமாக புதிய கட்டிடம் கட்ட வேண்டியதுள்ளதாகவும், அதற்கான நிதியாதாரத்தைப் பெருக்குவதற்கு, அனைவரும் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராவதே சிறந்தது என்றும் கூறிய அவர், இதுவரை ஆயுட்கால உறுப்பினராகாதோர், விரைவில் தமது பெயர்களை சமர்ப்பிக்குமாறு அனைத்துறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
இக்ராஃவுடன் இணைந்து தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் ஆண்டுதோறும் நடத்தி வரும் ‘சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை’ நிகழ்ச்சி குறித்து சில மன்றங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் குறித்து பேசிய அவர், இது விஷயத்தில் சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் கருத்தை தெளிவாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறினார்.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், எம்.எம்.அஹ்மத் முஹ்யித்தீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. பின்னர் அனைவருக்கும் இட்லி - வடை என தமிழக பாரம்பரிய முறைப்படி இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது.
அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
பிப்ரவரி 2014 செயற்குழுக் கூட்டம்:
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் பிப்ரவரி மாத செயற்குழுக் கூட்டம், 14.02.2014 வெள்ளிக்கிழமை 19.00 மணிக்கு மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
உறுப்பினர் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
மன்றத்தின் செயல்பாடுகள், அவற்றில் முழு ஈடுபாட்டுடன் இயங்கும் மன்ற அங்கத்தினரின் நடவடிக்கைகள் என அனைத்துமே தன்னை பெரிதும் மகிழ்விப்பதாகக் கூறிய அவர், அண்மையில் புதிதாக உறுப்பினரானோருக்கு வாழ்த்து தெரிவித்து, மன்றத்திற்கு எந்தளவுக்கு கூடுதலாக உறுப்பினர்கள் இருப்பார்களோ அந்தளவுக்கு நல்ல ஆலோசனைகள் பல வழிகளில் அதிகமாகக் கிடைக்கும் என்றும், அதனால் மன்றச் செயல்பாடுகள் இன்னும் மெருகேறும் என்றும் கூறி, உறுப்பினர்களை அதிகமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளில் நாம் அனைவரும் இறங்க வேண்டும் என்றும் கூறினார். மன்ற உறுப்பினர்கள் தமது சந்தா நிலுவைத் தொகைகளை உரிய காலத்திற்குள் செலுத்தி ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
கூட்ட அமைப்பாளர் உரை:
அடுத்து, நடப்பு கூட்ட அமைப்பாளர் சாளை ஷேக் நவாஸ் உரையாற்றினார். மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றப் பணிகளை செயற்குழு உறுப்பினர்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டுமென்றும், அதனால் தனியொருவருக்கு வேலைப்பளு அதிகப்படுவதைத் தவிர்க்கலாம் என்றும் கூறினார்.
புதிதாக சிங்கப்பூர் வரும் காயலர்கள் மன்ற அங்கத்தினரை எளிதில் அறிந்து - தேவைக்குத் தொடர்புகொள்ளும் பொருட்டு, மன்ற உறுப்பினர்களின் தொடர்பு விபரங்களடங்கிய பட்டியல் ஒன்றை ஆயத்தப்படுத்த வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
நன்றியறிவிப்பு:
கடந்த மாத செயற்குழுக் கூட்டத்தில் அறிமுகமான - மன்றத்தின் உறுப்பினர் சாளை ஹுமாயூன் மகன் ஷேக் ஷீத் தகுந்த வேலைவாய்ப்பைப் பெற்றதையடுத்து, மன்றத்தின் புதிய உறுப்பினராக அதிகாரப்பூர்வமாக இணைந்தார். தனக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட ஒத்துழைத்த - உறுதுணை புரிந்த அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.
சிறப்பழைப்பாளராக ‘ஹிஜாஸ் மைந்தன்’ :
வேலை தேடி சிங்கப்பூர் வந்திருக்கும் மற்றொரு காயலரான - ஹிஜாஸ் மைந்தன் என்றழைக்கப்படும் எழுத்தாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
23 ஆண்டு காலம் சஊதி அரபிய்யாவில் பணியாற்றிவிட்டு, சிறிது காலம் ஊரில் இருந்த நிலையில், வளைகுடா நாடுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சூழலைக் கொண்ட சிங்கப்பூருக்கு வந்திருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், சிங்கப்பூர் காயல் நல மன்றத்தில் தானும் ஓர் அங்கம் என்ற நினைப்பே தனக்கு பெரும் வியப்பையளிப்பதாகவும் கூறிய அவர், வளைகுடா மன்றங்களுடன் ஒப்பிடுகையில், குறைந்த எண்ணிக்கையிலான உறுப்பினர்களை மட்டுமே கொண்ட இம்மன்றத்தினர், தமது தாராள நன்கொடைகளால் மன்ற நிதியாதாரத்திற்கு தொடர்ந்து வலு சேர்த்து வருவதனாலேயே இம்மன்றத்தால் இந்தளவுக்கு சாதிக்க முடிந்துள்ளதாகவும், புதிதாக சிங்கை வரும் காயலர்கள் விஷயத்தில் மன்ற அங்கத்தினர் மிகுந்த தன்னார்வத்துடன் உதவியும், ஒத்துழைப்பும் அளித்து வருவது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய அம்சம் என்றும் அவர் புகழ்ந்து பேசினார்.
சிறப்பு விருந்தினர் உரை:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - ஹாஜி பாளையம் செய்யித் முஹ்யித்தீன் சிற்றுரையாற்றினார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் புகழ்ந்து பேசிய அவர், உலக காயல் நல மன்றங்கள் அனைத்தும் இடைவெளியற்ற தகவல் தொடர்பு செயல்திட்டத்துடன் இணைந்து செயல்பட்டால், நகர்நலப் பணிகள் இன்னும் விசாலமாகவும், வெற்றிகரமாகவும் செய்ய வாய்ப்பேற்படும் என்று ஆலோசனை கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மன்ற ஆலோசகர், இந்த நல்ல ஆலோசனையை இக்கூட்டம் கருத்தில் எடுத்துக்கொள்ளும் என்றும், இதற்குத் தேவையான செயல்திட்டம் வடிவமைக்கப்படும் என்றும் கூறினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய், கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசியதுடன், ஜனவரி 2014 வரையிலான வரவு - செலவு கணக்கறிக்கையையும் கூட்டத்தில் தாக்கல் செய்ய, அதற்கு ஒருமனதாக இசைவளிக்கப்பட்டது.
நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உரை:
மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் உரையாற்றினார். காயல்பட்டினத்தில், மருத்துவ உதவி கோரிய ஏழைகள் சிலருக்கு, ஷிஃபா மூலம் ரூபாய் 68 ஆயிரத்து 300 தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மன்ற ஆலோசகர், உதவி கோரும் விண்ணப்பங்கள் குறித்து Whatsapp கைபேசி மென்பொருள் மூலம் விவாதிப்பதற்காக சிறப்பு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்றும், பெறப்படும் விண்ணப்பங்களை நன்கு பரிசீலித்த பின்பே அவற்றுக்கான தொகை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.
ஷிஃபா மூலம் மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் உதவித்தொகை குறித்த முழு விபரங்களைக் கேட்டறிய வேண்டும் என்று உறுப்பினர்கள் கருத்துக் கூறினர்.
விண்ணப்பங்கள் பரிசீலனை ஒழுங்குகள்:
பல்வேறு உதவிகள் கோரி மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், துணைச் செயலாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோரால் பரிசீலிக்கப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் குறித்த பரிசீலனை நிறைவறிக்கை பரிசீலனைக் குழுவால் உடனுக்குடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும், தமது விண்ணப்பங்களின் நிலை குறித்து விண்ணப்பதாரர்களுக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மன்றத்தின் அடுத்த வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் வரை இவ்விருவருமே விண்ணப்பங்களை தொடர்ந்து பரிசீலீக்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
முதியோர் நல உதவித் திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகள்:
மன்றத்தின் - முதியோர் நல உதவித் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளதாகவும், இக்ராஃவின் வருடாந்திர நிர்வாகச் செலவினங்களுக்காக ரூபாய் 25 ஆயிரம் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
2014ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கை:
மன்றத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல், 2014ஆம் ஆண்டிற்கான மன்றத்தின் நிதிநிலையறிக்கையை சமர்ப்பித்தார்.
2013ஆம் ஆண்டு நிதிநிலைப்படி, மன்றத்தின் ஒருநாள் ஊதிய நன்கொடை திட்டம், அத்தியாவசிய சமையல் பொருளுதவித் திட்டம், பெருநாள் ஒன்றுகூடலின்போதான நன்கொடை ஆகிய வழிகளில் கூடுதலாக நன்கொடைத் தொகைகள் உறுப்பினர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டதாகவும், பெறப்பட்ட நன்கொடை நிதியிலிருந்து - பெருமளவில் கல்வி உதவித்தொகைக்காகவும், அதனையடுத்து மருத்துவ உதவிக்காகவும், அதனையடுத்து அத்தியாவசிய சமையல் பொருளுதவிக்காகவும் தொகைகள் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம்:
மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் நாளன்று, Changi Ferry Point Chalet 5இல் நடத்தப்படும் என்றும், இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர்களாக திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் இஸ்மாஈல், துணைச் செயலாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை ஆகியோரை நியமித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வருடாந்திர பொதுக்குழுக் கூட்ட நிகழ்முறை, அதனையொட்டிய விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும், விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவினராக நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல், உறுப்பினர் அப்துல் காதிர் ஆகியோரை நியமித்தும் தீர்மானிக்கப்பட்டது.
ஹிஃப்ழுல் குர்ஆன் போட்டி:
திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ்களுக்கான திருக்குர்ஆன் மனனப் போட்டி (ஹிஃப்ழுல் குர்ஆன் போட்டி) வரும் மார்ச் மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறுமென கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டின் மொத்த வரவு-செலவு கணக்குகள் அனைத்தையும் தணிக்கை செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மன்ற உறுப்பினர்களான நூருல் அமீன், முஹ்ஸின் தம்பி ஆகியோர் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
ஒருநாள் ஊதிய நன்கொடைக்கு ஆயத்தம்:
ஒருநாள் ஊதிய நன்கொடைத் திட்டத்தின் கீழ் தமது ஒருநாள் ஊதியத்தை வரும் ஏப்ரல் 01ஆம் நாளன்று வழங்கிட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் நிய்யத் (எண்ணம்) வைத்து, வருடாந்திர பொதுக்குழு நாளன்று வழங்கிடுமாறு அனைத்துறுப்பினர்களும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்ட அமைப்பாளராக ஹாஃபிழ் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாஈல் நியமிக்கப்பட்டார்.
கூட்ட நிறைவு:
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், 21.40 மணிக்கு, உறுப்பினர் ஹாஃபிழ் தைக்கா ஸாஹிப் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. நிறைவில் அனைவருக்கும், மன்றத்தின் புதிய வரவான ‘ஹிஜாஸ் மைந்தன்’ கைவண்ணத்தில் சுவை - மணமிக்க கறிகஞ்சி, சிக்கன் ஆகியன இரவுணவாகப் பரிமாறப்பட்டது.
இவ்வாறு சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
சிங்கை காயல் நல மன்றத்தின் டிசம்பர் 2013 செயற்குழுக் கூட்ட செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |