ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ நகரில் வேலை தேடி வரும் காயலர்களுக்கு இலவச உணவுடன் தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்கப்படும் என அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் சார்பில் அதன் செய்தித்துறை பொறுப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அமீரக தலைநகர் அபூதபீ காயல் நல மன்றத்தின் 19ஆவது செயற்குழு கூட்டம் 14 - 02 - 2014 வெள்ளிக்கிழமை மாலை மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் S.I. முகம்மது சாலிஹ் அவர்களின் தலைமையில் மன்றத்தின் துணை தலைவர் ஜனாப்.மக்பூல் அஹமது மற்றும் செயற்குழு உறுப்பினர் ஜனாப். ஹுசைன் நூர்தீன் ஆகியோர்களின் இல்லத்தில் வைத்து கூடியது.
ஹாஃபிழ் நஹ்வி S.A. இஸ்ஹாக் லெப்பை ஆலிம் மஹ்ழரி அவர்கள் இறைமறை கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது.
வேலை தேடி வரும் காயலருக்கு உணவுடன் கூடிய இலவச விடுதி:
அமீரக நுழைவுசான்றை [VISIT / TOURIST VISA] முறையாக பெற்று வேலை தேடி வரும் காயலர்களுக்கு ஒரு நேரத்தில் ஒருவர் என்ற முறையில் அபூதபீயில் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை செய்ய மன்ற உறுப்பினர் இருவர் முன்வந்துள்ளனர்.
இவ்வாறு வேலை தேடி வரவிருக்கும் நபர், காயலில் நியமிக்கப்பட இருக்கும் அபூதபீ காயல் நல மன்ற பிரதிநிதியை தொடர்பு கொண்டு முன் அனுமதி பெற்று இங்கு இடம் காலியாக இருக்கும் பட்சத்தில் அவர்களை தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும். இச்செயற்குழு இவர்களின் பொது நலமிக்க அனுசரனையை வெகுவாக பாராட்டி அவர்களின் ஈருலக தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றிட துஆ செய்தது.
வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் நியமனம்:
நமது மன்றத்தின் சார்பாக வேலைவாய்ப்பு தகவல்கள், வேலை தேடும் நமது காயலர்களின் விண்ணப்பங்கள் சேகரிப்பு மற்றும் அனைத்து வேலை வாய்ப்பு சம்பந்தமான செயல்களை ஒருங்கிணைக்க A.M. அப்துல் ஜப்பார் [ 056 68 42 257 ] அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். காயல் சகோதர்கள் தங்களால் அறியப்படும் அமீரகத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் உதவிகளை தரப்பட்டுள்ள கைபேசியில் தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
மன்றத்தின் காயல் பிரதிநிதி நியமனம்:
ஊரில் நமது மன்றம் சம்பந்தமான அனைத்து வேலைகளை நிறைவேற்றிடவும், காயலர்கள் அவர்களின் தேவைகளுக்காக அணுகிடவும் உள்ளூர் பிரதிநிதி நியமனம் தற்போது மிக முக்கியமென்று கருதி பொதுநல மிக்க தகுந்த காயல் சகோதரரை தேர்ந்தெடுக்க தீர்மானிக்கப்பட்டு அதன் பொறுப்பை ஜனாப். S.M.B. ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரீ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காயல் கடற்கரையின் அசுத்தத்தை நீக்கும் மக்கள் புரட்சி:
நமது மன்றம், தாய்லாந்து காயல்நலமன்றம் மற்றும் காயலின் பிற நலமன்றங்களுடன் இணைந்து காயல் கடற்கரையில் குவிந்திருக்கும் குப்பைகளை நீக்கி மக்களுக்கு நமது கடற்கரையின் பாரம்பரியம், சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதின் அவசியம், மாசுபடுதலால் ஏற்படும் விளைவுகள், சுத்தமாக நடந்துகொள்ளும் விதம் ஆகியவைகளை ஓர் விழிப்புணர்வு முகாம் மூலம் தரப்பட்டு, மக்கள் புரட்சி செய்திட தீர்மானம் இயற்றப்பட்டது.
மன்றத்தின் மருத்துவ குழு அமைப்பு:
நமது மன்றத்தின் மருத்துவ உதவிகள், மனுதாரர்களின் பரிசீலனை, மற்றும் SHIFA மூலம் நிதி ஒதுக்கீடு நிறைவேற்ற மருத்துவ குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு சமீபத்தில் SHIFA வால் கோரப்பட்ட அவசர நிதிஉதவி இருப்பு சம்பந்தமான சந்தேகங்களை அவர்களிடம் கேட்டு அறிந்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது..
குழு உறுப்பினர்கள்:
1. ஜனாப் ஹபீப் ரஹ்மான் ஆலிம்,
2. ஜனாப்.மக்பூல் அஹமது,
3. ஜனாப். ஹுசைன் நூர்தீன்,
4. டாக்டர் ஹமீது யாசர், மற்றும்
5. டாக்டர் செய்யத் அஹமது.
அடுத்த செயற்குழு கூட்டம் இன்ஷாஅல்லாஹ் 14 – 03 - 2014 ஆம் தேதி வெள்ளியன்று அஸர் தொழுகைக்கு பின் நடைபெறும் என்று மன்றத்தின் தலைவர் ஹாபிஃழ் M.A ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி அவர்கள் அறிவித்து, அவர்களின் துஆ மற்றும் கப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |