வரும் மார்ச் மாதம் 09ஆம் நாளன்று மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமென, பெங்களூரு காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல இறையருளால் எமது பெங்களூர் காயல் நல மன்றத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான முதல் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகைக்குப்பின், பெங்களூரில் உள்ள காயலர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.
மன்ற துணை செயலாளர் ஹாபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்றத்தின் கடந்தாண்டில் நிறைவேற்றிய செயல்திட்டங்களை நினைவு கூர்ந்த அவர் மன்றச் செயல்பாடுகளில் செயற்குழு உறுப்பினர்களிடம் இருக்கவேண்டிய கடின உழைப்பு ஈடுபாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். கடந்த ஆண்டை போன்று இவ்வாண்டும் செயற்குழு உறுப்பினர்கள் மிகசிறப்பாக செயலாற்றிடவும், கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
புதிய செயற்குழு பற்றிய கருத்து பரிமாற்றம்:
மன்ற துணைத்தலைவர் கே.கே.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மற்றும் செயலாளர் எம்.ஏன் சுலைமான் இருவரும் பணிநிமித்தமாக வேறு நகரங்களுக்கு சென்று விட்டதால், அவ்விரு பதவிகளுக்கும் மற்றும் இவ்வருடத்திற்கான புதிய செயற்குழு உருவாக்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.
விடுதியின் பராமரிப்பு செலவுகள்:
படித்து முடித்து விட்டு வேலைவாய்பிற்காக பெங்களூரு வரும் காயலர்கள் தங்குவதற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள விடுதியின் பராமரிப்பு (Maintenance, Electricity & Water) செலவிற்காக வசூலிக்கப்படும் தொகையை குடும்ப சூழ்நிலை மற்றும் ஏழ்மையின் காரணமாக செலுத்த முடியாதவர்களுக்கு, அந்த பராமரிப்பு செலவுகளை மன்றமே பொறுப்பேற்றிட தீர்மானிக்கப்பட்டது.
சாளை முஹம்மத் மொஹிதீன் உரை:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பான ஷிபா வின் செயல்பாடுகள் மற்றும் அதனை மன்றங்கள் வலுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அத்துடன் இவ்வருடமும் இம்மன்றம் மிக சிறப்பாக செயலாற்றிட பின் வரும் கல்வி / வேலை சார்ந்த ஆலோசனைகளை விவரித்து கூறினார்:-
1) Mentor & Mentee Program (MMP): கல்லூரி படிப்பை முடித்த வேலை தேடுபவர்களுக்கு, தான் பணிதேடும் தொழில்துறை (industry ), வேலை தேடல்களில் உள்ள சிக்கல்கள், கார்ப்பரேட் உலகத்தின் எதிர்பார்ப்புகள் அத்துடன் தன் துறை சார்ந்த உயர் நிலை (மேலைநாட்டு) படிப்புகள் வேலைவாய்ப்புகள் பற்றிய போதிய அறிவையும் விழிப்புணர்வையும் ஊட்டிட ஆர்வமுள்ள கல்லூரி மாணவர்களுக்கு அவர்களின் இரண்டாம் ஆண்டு முதல் அதே துறையில் போதிய அறிவும் அனுபவமிக்க (பணியிலிருக்கும்) ஒருவரை ஆலோசகராக வழிகாட்டியாக ஏற்படுத்தி அம்மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளியேறும் போது போதிய ஆற்றல் மிக்கவர்களாக இத்திட்டத்தின் மூலம் எவ்வாறு உருவாக்கலாம் என்பது பற்றி விளக்கி பேசினார்.
2) கவுன்சிலிங்: மன்றத்தில் இருந்து ஊர் செல்லும் படித்த அனுபவமிக்க மன்ற உறுப்பினர்கள் ஒரு சிறு குழுவாக, நம் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று அங்கே பயிலும் மாணவர்களுக்கு (குறிப்பாக +2 மாணவர்களுக்கு) அப்பருவத்தில் தான் கடந்து வந்த பாதையை அனுபவத்தை பகிர்ந்து மாணாக்கரின் விருப்பம் சார்ந்த துறைகள் அது தொடர்பான படிப்புகள் பற்றிய தகவலை 'கவுன்சிலிங்' மூலம் வழங்கலாம் . அது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த எதுவாக தனி குழுவை அமைத்து செயலாற்றுவது பற்றியும் ஆலோசனை வழங்கினார்.
எம் மன்றத்தின் இந்த ஆண்டிற்கான முதல் பொதுக் குழுக் கூட்டம், இன்ஷா அல்லாஹ், மார்ச் மாதம் 09 அம தேதி லால்பார்க் பூங்காவில் வைத்து மதிய உணவுக்கு பின் நடைபெறும் என்றும், இதையே அழைப்பாக ஏற்று அனைவரும் வந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கபடுகிறது.
நிறைவாக செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம் நவ்ஷாத் நன்றி நவில இக்கூட்டம் அல்லாஹ் அருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, பெங்களூரு காயல் நல மன்றத்தின் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
இப்றாஹீம் நவ்ஷாத்
பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |