மக்களவைத் தேர்தலையொட்டி இடதுசாரிகள், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை முறைப்படி அறிவித்தன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜகவை தேர்தலில் வீழ்த்தப்போகும் மாற்று அணி என்று அவர்கள் தங்களைக் குறிப்பிட்டனர்.
டெல்லியில் இன்று ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள், சமாஜ்வாதி, அதிமுக உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுடனான சந்திப்பில் பேசிய மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், மாபெரும் ஊழல்களுக்கும், கடுமையான விலைவாசி அதிகரிப்புக்கும் காரணமான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை வீழ்த்துவதற்காக 11 கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படும் என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியை ஒத்தக் கொள்கையை உடையதுதான் பாஜக என்று குறிப்பிட்ட அவர், ஒரு நாணயத்தின் இன்னொரு பக்கம்தான் பாஜக என்றும், நாட்டுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய வகுப்புவாத அரசியல்களின் பிரதிநிதியாக பாஜக விளங்குகிறது என்றும் சாடினார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் பாஜகவுக்கு மாற்றாகவே 11 கட்சிகள் கொண்ட இக்கூட்டணி அமையும் என்றும் காரத் குறிப்பிட்டார். மேலும், தங்களுடன் மதசார்பற்றக் கட்சிகள் இணையலாம் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அதேவேளையில், தங்களது பிரதமர் வேட்பாளர் விவகாரம் குறித்து தேர்தலுக்குப் பின்னரே பேசுவது என மூன்றாவது அணி முடிவு செய்துள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறும்போது, "இந்த மூன்றாவது மாற்று அணி மேலும் விரிவடையலாம். இன்று 11 கட்சிகள் உள்ள இந்த அணியில், பின்னாளில் 15 கட்சிகள் இடம்பெறக் கூடும்" என்றார்.
மூன்றாவது அணி முயற்சி தோல்வியைத் தழுவினால், மீண்டும் பாஜகவுடன் இணைய வாய்ப்புள்ளதா என்று ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரிடம் கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிவித்தார்.
தகவல் மற்றும் புகைப்படம்:
தி இந்து
|