பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் கணித ஆசிரியர் மீராஸாஹிப், இயற்பியல் ஆசிரியர் முஜீபுர் ஆகிய இருவரும், பள்ளி நிர்வாகத்திற்கெதிராக செயல்பட்டதாக மாவட்ட கல்வி அலுவலகத்தால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அவர்களை மீண்டும் பணியிலமர்த்தக் கோரி, அப்பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவர்கள், இன்று காலை 09.30 மணிக்கு தமது வகுப்புகளைப் புறக்கணித்து, பள்ளியின் வெளிப்பகுதி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அவ்விடம் விரைந்து வந்த ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் மாணவர்களை அமைதிப்படுத்தினார்.
போராட்டம் குறித்து மாணவர்களிடம் விபரம் கேட்டபோது, ஆசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதால் தமது பாடங்கள் பாதிக்கப்படுவதாகவும், அரசுத் தேர்வு நெருங்கும் நிலையில் தாம் இருப்பதால் ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறும் கோருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் காவல்துறையினர் முன்னிலையில், பள்ளி தலைமையாசிரியர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொதுநல ஆர்வலர்கள், மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்ற அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நிறைவில், எஞ்சிய வகுப்பு நாட்களில் மாணவர்களின் பாடங்களுக்குப் பாதிப்பேற்படாதவாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடுகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, வகுப்புகளுக்குச் சென்றனர்.
மாணவர்களின் இப்போராட்டம் காரணமாக, பள்ளி வளாகம் சில மணி நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.
படங்களில் உதவி:
செய்யித் இப்ராஹீம்
[செய்தி திருத்தப்பட்டது @ 21:05 / 26.02.2014] |