கத்தர் காயல் நல மன்ற ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், மலேஷிய காயல் நல மன்றம் (க்வாமலாய்), ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோசியேஷன் அமைப்புகள் இணைந்து, இம்மாதம் 22ஆம் நாளன்று நடத்திய நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் - KAYAL WALKATHON 2014 நிகழ்ச்சி, 23ஆம் நாளன்று நடத்திய நீரிழிவு நோய் பரிசோதனை இலவச முகாம் ஆகியவற்றில் திரளான பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். விபரம் வருமாறு:-
KAYAL WALKATHON - 2014:
காயல்பட்டினத்தில், நீரிழிவு (சர்க்கரை) நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், கத்தர் காயல் நல மன்றம் செயல்திட்டம் வகுத்து ஒருங்கிணைக்க, காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், மலேஷிய காயல் நல மன்றம், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்புகள் இணைந்து, இம்மாதம் 22ஆம் நாள் சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், நீரிழிவு நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் - KAYAL WALKATHON 2014 நிகழ்ச்சியை இணைந்து நடத்தின.
நூல் வெளியீடு:
மலேஷிய காயல் நல மன்ற உறுப்பினர் காதர் சாமுனா கிராஅத் ஓதினார். கத்தர் காயல் நல மன்ற உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு, நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் - நீரிழிவு நோய் விழிப்புணர்வு நூலை வெளியிட, ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
அடுத்தடுத்த பிரதிகளை மலேஷிய காயல் நல மன்றத்தைச் சேர்ந்த தோல்சாப் மூஸா நெய்னா, ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் வழங்க, டாக்டர் பாவநாசகுமார், டாக்டர் ஹில்மீ ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேடையில் அங்கம் வகித்த அனைவருக்கும் சால்வை அணிவித்தும், அளித்தும் கண்ணியப்படுத்தப்பட்டது. நடைப்பயணம் மற்றும் முகாம் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் முஹம்மத் முஹ்யித்தீன் (கத்தர்) - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்குக்கும், ஷிஃபா அமைப்பின் செயலர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத் டாக்டர் பாவநாசகுமாருக்கும், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் துணைத்தலைவர் எம்.எஸ்.சதக்கு மீரான் டாக்டர் ஜாஃபர் ஸாதிக்குக்கும், ஷிஃபா அமைப்பின் நிர்வாகி கண்டி ஸிராஜ் டாக்டர் ஹில்மீக்கும், மலேஷிய காயல் நல மன்ற உறுப்பினர் காதர் சாமுனா - முகாம் ஆலோசகர் நெய்னா முஹம்மதுக்கும் சால்வை அணிவித்தனர்.
நடைப்பயணம் துவக்கி வைப்பு:
KAYAL WALKATHON 2014 – நடைப்பயணத்தை, டாக்டர் பாவநாசகுமார் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
பேண்டு வாத்தியங்கள் முழங்க, துவக்கமாக நகரப் பிரமுகர்களும், அதனையடுத்து பள்ளி மாணவர்களும் அணிவகுத்துச் சென்றனர்.
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க நுழைவாயிலில் துவங்கிய பயணம், தைக்கா தெரு, மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, கி.மு.கச்சேரி தெரு, ஸீ-கஸ்டம்ஸ் சாலை வழியாக கடற்கரையைச் சென்றடைந்தது. குறுக்கத் தெருவில், 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா சார்பில் மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது.
நீரிழிவு நோய் விழிப்புணர்வு ஓவியப்போட்டி:
நடைப்பயணத்தை முன்னிட்டு, முன்னதாக காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிக் மேனிலைப்பள்ளி, எல்.கே.மெட்ரிக் மேனிலைப்பள்ளி, காயல்பட்டினம் - ஆறுமுகநேரி (கே.ஏ.) மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவ-மாணவியருக்கு, நீரிழீவு நோய் விழிப்புணர்வூட்டும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
மாணவ-மாணவியர் பங்கேற்பு எண்ணிக்கையின் அடிப்படையில், பள்ளிகள் வாரியாக பரிசுக்குரியோர், ஓவிய ஆசிரியர் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ். மாமா உள்ளிட்ட நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பரிசளிப்பு விழா:
கடற்கரையில் நடைப்பயணத்தின் நிறைவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், கடற்கரை நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த நடைப்பயண நிறைவிட மேடைக்கருகில் அவர்களது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நடைப்பயணத்தில் அதிகளவில் பங்கேற்றமைக்காக சென்ட்ரல் மேனிலைப்பள்ளிக்கு முதற்பரிசும், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளிக்கு இரண்டாம் பரிசும் வழங்கப்பட்டது.
நடைப்பயணத்தில் பங்கேற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்ற அனைவருக்கும் கோதுமை ப்ரெட் சான்ட்விச் சிற்றுண்டியாக வழங்கப்பட்டது.
நீரிழிவு நோய் பரிசோதனை இலவச முகாம்:
மறுநாள், 23.02.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி முதல் 11.00 மணி வரை காயல்பட்டினம் ரிஸ்வான் சங்கம், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம் (பெரிய சதுக்கை), கோமான் மேலத் தெரு பெண்கள் தைக்கா மற்றும் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) ஆகிய இடங்களில் நீரிழிவு நோய் பரிசோதனை இலவச முகாம் நடத்தப்பட்டது.
இதில் முகாம் வாரியாக பங்கேற்ற பொதுமக்களின் எண்ணிக்கை விபரம்:-
நடைப்பயணம் மற்றும் முகாம் ஏற்பாடுகளை, ஒருங்கிணைத்த கத்தர் காயல் நல மன்றம் சார்பில் முஹம்மத் அஸ்லம், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் முஹம்மத் முஹ்யித்தீன், உள்ளூர் பிரதிநிதி எஸ்.கே.ஸாலிஹ், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் செயலாளர் ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், அதன் நிர்வாகி கண்டி ஸிராஜ், பொதுநல ஆர்வலர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில் கலாமீ யாஸர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர். காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான எஸ்.ஏ,சாமு ஷிஹாபுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், ரிஸ்வான் சங்க நிர்வாகிகளான எம்.எஸ்.ஸதக்கத்துல்லாஹ், ஏ.எஸ்.அஷ்ரஃப், அல்அமீன் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் கே.எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன், கோமான் ஜமாஅத் நிர்வாகிகள், இளைஞர் ஐக்கிய முன்னணி சார்பில் உ.ம.ஷாஹுல் ஹமீத், ஏ.எல்.நிஸார் உட்பட பலர் துணைப்பணியாற்றினர்.
படங்கள்:
வீனஸ் ஸ்டூடியோ
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத் |