தமிழக அரசின் சார்பில், மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சிப் பகுதிகளிலும் வெவ்வேறு வகையான குடிநீரை ஆய்வு செய்து, ஆய்வறிக்கைகளின் படி - பொதுமக்கள் உடல் நலனைக் காப்பதற்கான மேல் நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்குடன், இந்தியாவிலேயே முதன்முறையாக குடிநீர் பாதுகாப்பு வாரத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதற்கான சிறப்புக் கூட்டம், காயல்பட்டினம் நகராட்சியில், இம்மாதம் 24ஆம் நாள் 15.00 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
அரசின் இத்திட்டம் குறித்து, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நிலைய நீர் உதவி வல்லுநர் கணபதி சுப்பிரமணியன் விளக்கிப் பேசினார். அவரது உரைச் சுருக்கம்:-
காயல்பட்டினத்திலுள்ள 18 வார்டுகளிலிருந்தும், கிணறுகள், அடிபம்புகள் ஆகியவற்றின் (சுத்திகரிக்கப்படாத) சுமார் 250 மாதிரிகளை ஆய்வு செய்வதற்காக, ஜெயா, சிலுவை மேரி, சகாய மாதுரி ஆகிய மூன்று ஆசிரியையர் பயிற்சிக்குப் பின் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இம்மாதம் 25, 26, 27 நாட்களில் (செவ்வாய், புதன், வியாழன்) காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில், அலுவலக நேரங்களில் இருப்பர் குடிநீர் மாதிரிகளைப் பெற்றுக்கொண்டு, ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளனர்.
பெறப்படும் குடிநீர் மாதிரிகளின் தோற்றம், மணம், கலங்கல், Ph., காரம், கடினம் உள்ளிட்ட 16 தன்மைகளின் இருப்பு ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில், இப்பகுதியுடைய நீராதாரத்தின் பொது அறிக்கை அரசுக்கு சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு, மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெறப்படும் ஆய்வறிக்கைகள் அடிப்படையில், மக்கள் நலனுக்கான செயல்திட்டம் உருவாக்கி செயல்படுத்தப்படும் என அவர் கூறினார்.
அவருடன், உதவி அலுவலர் மணியும் வந்திருந்தார். காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்தி ராஜ், பொறியாளர் சிவக்குமார், குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார், நகர்மன்ற உறுப்பினர்களான பி.எம்.எஸ்.சாரா உம்மாள், எம்.ஜஹாங்கீர், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், இ.எம்.சாமி ஆகியோரும், பொதுமக்கள் சிலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் கூறியதாவது:-
பொதுமக்கள் நலனுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் மிக முக்கியமானதும், இக்காலத்திற்கு அவசியம் தேவைப்படுவதுமாகும்.
வெவ்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்து, அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிப்பதன் மூலம், நம் பகுதியின் குடிநீர் தரத்தின் அடிப்படையில் மக்கள் நல செயல்திட்டங்கள் வடிவமைக்கப்படவுள்ளன.
காயல்பட்டினத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் மாதிரிகளைச் சேகரிப்பதற்காக, அனைத்து வார்டு உறுப்பினர்களிடமும் தலா 15 சோதனைப் புட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தம் பகுதி நகர்மன்ற உறுப்பினரைத் தொடர்புகொண்டு, தத்தம் பகுதிகளின் குடிநீர் மாதிரிகளை சேகரித்திட ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு நகர்மன்றத் தலைவர் கூறினார். |