காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 23ஆம் நாளன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும், வீட்டுக்கு ஒருவர் என குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் கலந்துகொள்ளுமாறும் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் - நகரின் அனைத்து அரசியல் கட்சியிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு, பணிகளும் துவங்கிய நிலையில் இடைநிறுத்தம் செய்யப்பட்டதைக் கண்டித்தும், நிலுவைப் பணிகளை விரைந்து முடிக்கவும் கோரும் போராட்ட விளக்கப் பொதுக்கூட்டம், இம்மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 08.15 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
முஸ்லிம் லீக் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதினார். நிகழ்ச்சிகளை நெறிப்படுத்திய - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
எஸ்.கே.ஸாலிஹ் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்), ஆர்.எஸ்.கோபால் (திமுக), அப்துல் அஜீஸ் (சமத்துவ மக்கள் கட்சி), என்.டி.ஸலாஹுத்தீன் (அஹ்மத் நெய்னார் பள்ளி), எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ (காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை), ஜெயக்குமார் (உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு), எஸ்.கே.செய்யித் இப்றாஹீம், இ.எம்.சாமி (காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்), ஏ.எஸ்.ஜமால் முஹம்மத் (காங்கிரஸ்), காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் (மதிமுக), பண்டாரம் (பாஜக), எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் (அதிமுக), என்.எம்.எச்.முஹம்மத் முஹ்யித்தீன் (ஜலாலிய்யா சங்கம்), மு.த.ஜெய்னுத்தீன் (திமுக), எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர்), பன்னீர் செல்வம் (மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), எல்.எஸ்.அன்வர் (அதிமுக), மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ (ஐக்கிய சமாதானப் பேரவை) ஆகியோர் கருத்துரையாற்றினர்.
திருநெல்வேலி, காயல்பட்டினம், குரும்பூர் ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூபாய் 1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டு, காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் பணிகளும் துவக்கப்பட்ட நிலையில் அரைகுறையாக நிறுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிப் பேசிய அவர்கள், ரயில் நிலையத்தின் வருமான அளவை வெகுவாகக் குறைத்து, காலப்போக்கில் இந்த ரயில் நிலையமே இல்லாத நிலையை உருவாக்க ரயில்வே துறை அதிகாரிகள் திட்டமிட்டு செயலாற்றி வருவதாகவும்,, காயல்பட்டினம் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து இந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்துவோர் அனைவருமே தொடர்ந்து பாதிப்பிற்குள்ளவாதாகவும் கூறினர்.
பிப்ரவரி 18 அன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெறுமென நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகளின் சார்பில் அறிவிக்கப்பட்ட பின்னர், பிப்ரவரி 05ஆம் தேதியன்று திருச்செந்தூர் வட்டாட்சியர் அழைத்துப் பேசியதாகவும், பிப்ரவரி 11 அன்று மறுகூட்டம் நடத்தி, ரயில்வே துறை அதிகாரிகளிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றுத் தருவதாகவும் அவர் கூறியதாகவும், ஆனால் மறுகூட்டம் நடத்தப்படாததால், திட்டமிட்ட படி போராட்டத்தை நடத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்திப் பேசினர்.
நிறைவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-
இந்தக் கூட்டத்தில் விருப்பு - வெறுப்பு, கொள்கை வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, முஸ்லிம் லீக் - பாஜக, திமுக - அதிமுக, காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் என அனைத்துக் கட்சிகளுமே ஒன்றிணைந்ததிலிருந்து, இப்போராட்டத்தின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்த உறுதியும், ஒன்றுபட்ட உணர்வும் வருங்காலங்களில் ஊர் பிரச்சினைகளில் தொடர வேண்டும் என்ற அவாவை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி, அப்போது மத்திய ரயில்வே இணையமைச்சராக இருந்த இ.அஹ்மது ஸாஹிப் நமதூருக்கு வருகை தந்தார். காயல்பட்டினம் ரயில்வே நிலையத்தைப் பார்வையிட்ட பின், ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஊர் மக்கள் சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டு, ரயில்வே நிலைய மேம்பாட்டுப் பணிகள் பற்றிய கோரிக்கைகளை முன்வைத்ததும், அதை நிறைவேற்றித் தருவதாக வாக்களித்து - சொன்னபடியே அதற்கான உத்தரவையும் அவர் பிறப்பித்தார்.
இதனால், காயல்பட்டினம் ரயில் நிலையத்திற்கு மட்டுமின்றி, செய்துங்கநல்லூர் வரையிலான ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்றன. காயல்பட்டினம் ரயில் நிலையத்தைப் பொருத்த வரை,- 24 பெட்டிகள் நிற்குமளவுக்கு நடைமேடை நீளத்தை அதிகரித்து உயர்த்துதல், மேற்கூரையமைத்தல், அணுகுசாலை அமைத்தல், குடிநீர் - மின் விளக்கு - சுகாதார வசதிகளைச் செய்தல் ஆகிய பணிகளுக்காக 70 லட்ச ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, டெண்டர் விடப்பட்டது.
அந்த டெண்டரை எடுத்த திருச்சி வின்சென்ட் நிறுவனம் - சில பணிகளை மட்டும் செய்துவிட்டு, மற்ற பணிகளை அப்படியே நிறுத்திவிட்டது. இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை கோட்டத்துடன் பலமுறை முயற்சி மேற்கொண்டும் பலன் கிடைக்காததால், 26.05.2012 அன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதன் பின்னரும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் வேறு வழியின்றி, மறியல் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
எதிர்வரும் பிப்ரவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்கு, நமதூர் ரயில் நிலையத்திற்கு வரும் திருச்செந்தூர் - பழனி பயணியர் ரயிலை மறிக்கவுள்ளோம். இதற்காக, அன்று காலை 09.00 மணிக்கு அனைவரும் வள்ளல் சீதக்காதி திடலுக்கு வருகை தர வேண்டும். வீட்டுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் - 12 ஆயிரம் வீடுகளைக் கொண்ட காயல்பட்டினத்திலிருந்து குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேராவது திரள வேண்டும். நம்மைக் கைது செய்தாலும், அடைப்பதற்கு இடமில்லை என்ற வகையில், ரயில் நிலையத்திலேயே நம்மை வைக்க வேண்டும்.
இந்தப் போராட்டம் ஒரு ஊரின் போராட்டமாக மட்டுமின்றி, சர்வதேச அளவுக்கு நடத்தப்படும் போராட்டமாக - வெளிநாடு, வெளியூர்களில் வாழுகின்ற காயல் வாசிகள் அனைவரும் 23.02.2014 அன்று காயல்பட்டினத்தில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம்... அப்போராட்டத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள் என்று, மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களுக்கும், சென்னையிலுள்ள தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் மின்னஞ்சல் மூலம் மனுக்களை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ அனைவருக்கும் நன்றி கூறி, துஆவுடன் கூட்டத்தை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.K.ஸாலிஹ்
(தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் - இ.யூ.முஸ்லிம் லீக்)
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
இதுகுறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |