இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம் >>
திருச்சியில் திமுக-வின் 10-வது மாநில மாநாடு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய இரு தேதிகள் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று (பிப்ரவரி 16) - நிறைவு உரை நிகழ்த்திய, அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும், மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம் என அழைப்பு விடுத்தார்
திருச்சியில் திமுக 10-வது மாநில மாநாட்டில் அவர் ஆற்றிய நிறைவுரை:
திமுக கூட்டணியில் யார் யார் இடம் பெற வேண்டும் என கூட்டணிக் கட்சித் தலைவர்கள்கூட என்னிடம் கேட்டனர். அண்ணா கண்ட கனவான சேது
சமுத்திரத் திட்டத்தை ஆதரிப்போரும், மதவாதத்தை எதிர்க்க வேண்டும் என நினைப்பவர்களும் திமுக கூட்டணிக்கு வரலாம்.
மதவாத அரசு உருவாக இடமளிக்க மாட்டோம் என உறுதி எடுப்பவர்கள் தோழமை கட்சிகளாக வரலாம். சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும்
ஆதரவளிப்பவர்கள் இந்த அணியில் இடம்பெறுவார்கள். இந்த அணியில் அவர்களும் இணைவார்களானால், இந்த அணி பேரணியாக மாறும்.
ஜெயலலிதா அரசால் ஏற்பட்டுள்ள பிணி தீர, ஜனநாயகம் தழைக்க, சமூக நீதி பாதுகாக்கப்பட, மதசார்பற்ற அணியை உருவாக்க உள்ளோம் என்பது
உண்மை, அது வெற்றி பெறப் போகிறது என்பதும் உண்மை. தோழமைக் கட்சியினருடன் இணைந்து அதற்கான வியூகத்தை வகுத்து தேர்தல்
பணியாற்றுவோம்.
சேதுசமுத்திரத் திட்டம் அண்ணாவின் கனவுத் திட்டம். இதை நிறைவேற்றக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வாய்தா கேட்டதன் காரணமாக
இத்திட்டம் தொடங்க முடியாமல், ரூ.1000 கோடிக்கு மேல் செலவழிக்க மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தாலும் கூட, அதை நிறைவேற்றக் கூடாது
அழுத்தம் திருத்தமாக ஜெயலலிதா இருப்பதின் நோக்கம் என்ன?.
அண்ணா அறிவித்தத் திட்டம், அண்ணா பெயரால் உள்ள கட்சியாலேயே நிராகரிக்கப் படுகிறது.
திமுக அறிவித்த திட்டம் என்பதால், அதை நிறைவேற் றாமல் தடுக்கிறார் ஜெயலலிதா. சேதுசமுத்திரத் திட்டம் நிறை வேறினால் தமிழகம்
வாணிபத்தில் முன்னேறும்.
தமிழகத்தை வளம் கொழிக்கச் செய்யக் கூடிய திட்டம் அது. இன்னும் இயற்கை வளங்களை அதிகரிக்கும்.
சமச்சீர் கல்வித் திட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எழும்பூர் டிபிஐ வளாகத்துக்கு மாற்றும் முடிவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில்
நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளானவர் ஜெயலலிதா.
சொத்துக் குவிப்பு வழக்கில்…
குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர், இந்த நீதிபதி கூடாது, இந்த நீதிபதி தான் வேண்டும் என சொன்னது உண்டா? அது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு
வழக்கில் நடந்தது. மனுப் போட்டும், வாய்தா வாங்கியுமே 10, 15 ஆண்டுகளாக வழக்கை இழுத்துக் கொண்டே போகிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்குகளை இழுத்தடிக்க, வாய்தா வாங்க பல்வேறு முயற்சிகளை செய்து கொண்டிருக்கும் ஜெயலலிதா தான் நீதி, நியாயம் எனப்
பேசிக் கொண்டிருக்கிறார்.
வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்குகளை பல ஆண்டுகளுக்கு இழுத்தடித்து நீதிமன்ற மாண்புகளையே மதிக்காத ஜெயலலிதா இன்று நீதி,
நியாயம் பேசுகிறார்.
திமுக திட்டங்கள் முடக்கம்
ஜனநாயக விரோத, மக்கள் விரோத ஆட்சி தான் தமிழகத்தில் நடைபெறுகிறது. இங்கு நடைபெறுவது ஆட்சி அல்ல, காட்சி. அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டத் திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தி விட்டார்கள்.
மக்கள் நலனுக்கான எதையும் ஜெயலலிதா செய்ய வில்லை. இப்படிப்பட்ட ஜெயலலிதாவா தமிழகத்தை முன்னேற்றப் போகிறார். இவராலா தமிழகம்
முன்னேறப் போகிறது?”
இவ்வாறு மு.கருணாநிதி உரை நிகழ்த்தினார்.
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் முழு விபரம் >>
தகவல்:
தி இந்து
புகைப்படங்கள்:
முரசொலி |