நகருக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவைக் கணிக்கிட அளவு கருவி பொருத்த - கடந்த ஆண்டு ஏப்ரல்
மாதம் நகர்மன்றத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டது. 3.2 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான அளவு கருவி பொருத்தும் பணிக்கு இருவரிடம் ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டது. இருவரில் குறைந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கிய RESI ENGINEERING என்ற மதுரை நிறுவனத்திற்கு வேலை ஆணை வழங்கப்பட்டது.
வேலை ஆணை வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பணி துவக்கப்படாமல் இருந்தது. பொருட்கள் கிடைப்பதில் கால தாமதம் ஆவதால் - பணிகளைத் துவக்கவில்லை என ஒப்பந்ததாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் பிப்ரவரி மாதம் நடுவில் - இக்கருவி காயல்பட்டினம் நகராட்சி வந்தடைந்தது.
அதன் பிறகு - அதற்கு என தேர்வு செய்யப்பட்டு, காயல்பட்டினம் புறவழிச் சாலையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ள இடத்தில் இக்கருவி பொருத்தும் பணிகள் நடைபெற்றன.
பணிகள் நிறைவுற்ற பின் - கருவி பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. அதில் - தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், மேல ஆத்தூர் நீர்தேக்கத்தில் இருந்து வழங்குவதாகக் கூறும் 21 லட்ச லிட்டர் அளவில் இருந்து குறைந்தே குடிநீர் பெறப்படுவதாக நகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து காயல்பட்டணம்.காம் நகராட்சியின் ஆணையர் - ம.காந்திராஜிடம் வினவியபோது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குறிப்பிடும் அளவை விட 3 - 3.5 லட்சம் லிட்டர் அளவு குறைந்தே தண்ணீர் வருவதாக கருவி காண்பிப்பதாக அவர் தெரிவித்தார்.
காயல்பட்டணம்.காம் - மேல ஆத்தூரில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் பாலசுப்ரமணிமிடம் இதுகுறித்து விசாரித்தது. கருவியைப் பொருத்தியவுடன் - நகராட்சி தரப்பில் 13 லட்சம் லிட்டர் தண்ணீர்தான் வருவதாகக் கூறப்பட்டது என்றும், நகராட்சி அலுவலர்கள் ஆத்தூரில் உள்ள நீர்த்தேக்கத்திற்கு வந்தபோது - அவர்களிடம் அங்குள்ள கருவி காண்பிக்கப்பட்டதாகவும், அக்கருவியோ 21 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படுவதைக் காண்பிப்பதாகவும் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
தற்போது சுமார் 17 லட்சம் லிட்டர் தண்ணீர் வருவதாக நகராட்சி தரப்பில் கூறப்படுவதாகவும், தங்கள் தரப்பில் 21 லட்சம் லிட்டர் வழங்கப்படுவதாகவும், சில நாட்களாக - அணையில் தண்ணீர் அளவு குறைந்து வருவதால் - 50,000 லிட்டர் குறைத்து 20.5 லட்சம் லிட்டர் வழங்கப்படுவதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.
3.5 லட்சம் லிட்டர் அளவில் வேறுபாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இதனை ஆய்வு செய்ய தூத்துக்குடி நகராட்சியில் உள்ள மொபைல் கருவி ஒன்று மூலம் பரிசோதனை செய்யலாம் என்று தான் பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் இந்தக் கருவி நிறுவப்பட்டது. இருப்பினும் - தொடர்ந்து குடிநீர் விநியோகம் குறித்து பிரச்சனை தொடர்வது வேடிக்கையாக உள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் தொடரும் குடிநீர் பிரச்சனை மூன்று கேள்விகளை எழுப்புகிறது.
இத்தனை நாட்களாக குறைந்த அளவே குடிநீர் - ஆத்தூரில் இருந்து வழங்கப்பட்டு வந்தால், பெறப்படாத தண்ணீருக்கா காயல்பட்டினம் நகராட்சி பணம் செலுத்தி வந்தது? இதனால் யாருக்கு லாபம்?
மேல ஆத்தூரில் இருந்து அனுப்பப்படும் தண்ணீர் இடையில் மாயமாக மறைகிறதா? ஆம் எனில் - யார் அதற்குக் காரணம்?
மேல ஆத்தூரில் உள்ள கருவியிலோ, அல்லது காயல்பட்டினம் நகராட்சி அண்மையில் பொருத்தப்பட்ட கருவியிலோ பிரச்சனை உள்ளதா? ஆம் எனில் எந்தக் கருவியில் பிரச்சனை உள்ளது என்பதை எப்படி கண்டுப்பிடிப்பது? |