காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரினை மார்ச் 26 புதன்கிழமையன்று
மாலை சென்றடைந்தனர்.
சியாட்டல் நகரில் குழுவினருக்கு மார்ச் 27 (வியாழன்), மார்ச் 28 (வெள்ளி) ஆகிய இரு தேதிகளுக்கு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தது. மார்ச் 29 (சனி) ஓய்வு தினமாகும்.
மார்ச் 27 வியாழனன்று குழுவினருக்கு - மூன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல் நிகழ்ச்சி காலை 10:15 மணி முதல், 11:55 வரை - சியாட்டல்
நகரில் உள்ள Chief Sealth International High School என்ற
சர்வதேச பள்ளிக்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த பள்ளிக்கூடம் - 1957ம் ஆண்டு துவக்கப்பட்டது. பல இனங்களை சார்ந்த மாணவர்கள் படிக்கும் இப்பள்ளி, உலகப்பார்வை கொண்ட
பாடத்திட்டங்கள் (சீன மொழி, வெளிநாட்டுக்கு மாணவர் சென்றுவர வாய்ப்பு போன்று) வழங்குகிறது.
இப்பள்ளியில் மார்ச் 22 - 28 வரை உலக குடிநீர் வாரம் கடைபிடிக்கப்பட்டது. அதன் பின்னணியில் பல நிகழ்ச்சிகள்
இப்பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. நான்காவது ஆண்டாக நடைபெறும் இந்த உலக குடிநீர் வாரம் நிகழ்ச்சியில், இவ்வாண்டின் முக்கிய கருவாக -
பிளாஸ்டிக் மாசு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பள்ளிக்கூடம் வந்த குழுவினருக்கு - மாணவர்களின் காட்சி பொருட்கள் காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து - குழுவினர், உயர்நிலைப்பள்ளி மாணவர்களை - அவர்கள் வகுப்பறையில் சந்தித்தனர். மாணவர்களுடன் கருத்து பரிமாற்றம்
தொடர்ந்தது.
மாணவர்கள் மத்தியில் பேசிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் - அவர்களை உற்சாகப்படுத்தினார். இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவு
செய்துள்ளதாவது:
இந்தியாவில் உள்ள குடிநீர் பிரச்சனை குறித்து அவர்களிடம் விளக்கினேன். தமிழக அரசு 2003இல் கட்டாயமாக்கிய மழை நீர் சேகரிப்பு திட்டம் குறித்து
மாணவர்களிடம் எடுத்துக்கூறினேன். இதே குடிநீர் பிரச்சனை தான் பல வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கிறது என்றும், குடிநீர் பிரச்சனைக்கு ஒரு
நிரந்தர தீர்வினை உலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்றும், அதற்கான தீர்வினை கண்டுபிடித்து நோபல் பரிசு வெல்லக்கூடிய மாணவர்கள்
இவ்வறையிலும் இருக்கலாம் என்றும் மாணவர்களுக்கு அறிவுரை கூறினேன்.
மாணவர்களுக்கு தாள்கள் வழங்கி - அவர்கள் பார்வையில் உலக குடிநீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு உள்ளது என எழுத சொன்னேன். அவர்களும்
ஆர்வமாக சில கருத்துக்களை எழுதி தந்தார்கள்.
இப்பள்ளிக்கூடத்தில் உலக விஷயங்கள் குறித்து வகுப்பு எடுக்கும் நோவா
செய்க்னர் (Noah Zeichner) என்ற ஆசிரியர் குழுவினருக்கு - பள்ளிக்கூடம் குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும், உலக விஷயங்கள் எவ்வாறு
மாணவர்களுக்கு விளக்கப்படுகிறது என்றும், குடிநீர் வாரம் குறித்தும் - விபரங்கள் வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களுடன் குழுப்படம் எடுக்கப்பட்டது.
குழுவினரின் அடுத்த நிகழ்ச்சி - மதியம் 12:30 மணிக்கு - SEATTLE TILTH என்ற அமைப்பின் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1977ம் ஆண்டு இவ்வமைப்பு துவக்கப்பட்டது. இந்த
அமைப்பு - இயற்கை வளங்களை பாதுகாக்கவும், சமமான, தொடர்ந்து பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் உணவு உற்பத்தியினை - வளர்க
முயற்சிகள் செய்கிறது.
இந்த அமைப்பின் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டன் ரோவர் (Kristen Roewer, Program Coordinator) - இந்த அமைப்பின் பல்வேறு செயல்திட்டங்களை, குழுவினரிடம் விளக்கினார். குறிப்பாக - இந்த அமைப்பின், Seattle Youth Garden Works (SYGW) என்ற திட்டம் குறித்து விளக்கினார். இந்த திட்டம் மூலம் - 16 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களுக்கு - இயற்கை முறையில் விளையும் காய்கறிகள் வளர்த்திட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வீடு இல்லாமலோ, அல்லது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இந்த இளைஞர்கள் - பாதி நேரம் தோட்டத்திலும், மீதி நேரத்தை கல்வி பெறுவதிலும் செலவிடுகின்றனர்.
குழுவினரின் மார்ச் 27 தேதிய இறுதி நிகழ்ச்சி - சியாட்டல் சிட்டி ஹால்
வளாகத்தில், City of Seattle Native American Employees (CANOES) என்ற
அமைப்பின் பிரதிநிதி நிகோல் வில்லிஸ் உடன் நடைபெற்றது. இந்த அமைப்பு - பழங்குடி இந்தியர் ஊழியர்கள் மத்தியில், தொடர்பு ஏற்படுத்தி -
அவர்களின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது.
நிகோல் வில்லிஸ் (Nicole Willis, Tribal Relations Liaison) - அமைப்பின் செயல்பாடு குறித்தும், அமெரிக்க இந்தியர்கள் (பழங்குடி)
வாழ்வுமுறை குறித்தும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் குழுவினரிடம் தெரிவித்தார்.
500 ஆண்டுகளுக்கு முன் - பூர்விக குடிமக்களாக இருந்த அமெரிக்க-இந்தியர்கள், தற்போது சிறுபான்மையில் உள்ளனர். அமெரிக்கா முழுவதும் -
50 லட்சம் பழங்குடி இந்தியர்கள் உள்ளனர். இது மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 1.7 சதவீதம். சியாட்டல் நகர் அமைந்துள்ள வாஷிங்டன்
மாநில மக்கள் தொகையில் சுமார் 1.5 சதவீதம் மக்கள் - பழங்குடி அமெரிக்க இந்தியர்கள் ஆவர்.
மாலை 4 மணியுடன் - மார்ச் 27 தேதிய - நிகழ்ச்சிகள் முடிவுற்றது.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|