டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்ததையடுத்து KEPA அவசர செயற்குழுவில், அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டியினர், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தைக் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாண்டு காலமாக நிலம், நீர், காற்றில் தனது அமிலக் கழிவைக் கலந்து மாசு ஏற்படுத்தி வருகிறது - காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை.
இத்தொழிற்சாலை தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட அரசு அனுமதியை எதிர்பார்த்திருப்பது ஒரு புறமிருக்க, ஆலையைச் சுற்றியுள்ள மக்களின் அச்சத்தைப் போக்கும் வரை அனுமதியளிக்கக் கூடாது என, காயல்பட்டினம் அனைத்து தரப்பு மக்களின் சார்பில் - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA பல வழிகளிலும் அரசை வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், அமிலக் கழிவைக் கொண்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வரும் டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA)வின் அவசர செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 03ஆம் நாள் வியாழக்கிழமை 20.30 மணிக்கு, அதன் தலைவர் எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் தலைமையில், துணைத்தலைவர் என்.எஸ்.இ.மஹ்மூது ஆகியோர் முன்னிலையின், KEPA அலுவலகத்தில் நடைபெற்றது.
பொருளாளர் ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா கூட்ட அறிமுகவுரையாற்றினார்.
தொடர்ந்து, டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது குறித்தும், அமைப்பின் சார்பில் மேற்கொண்டு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நீண்ட நேரம் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. நிறைவில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - மத்திய அமைச்சகத்திற்கு கண்டனம்:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட, சுற்றுவட்டாரப் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தீர்மானம் 2 - பொதுப்பிரசுரம் வெளியீடு:
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலை, தனது உற்பத்தியை இரு மடங்காக உயர்த்திட, சுற்றுவட்டாரப் பொதுமக்களின் பலத்த எதிர்ப்புகளையும் மீறி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து, பொதுப்பிரசுரம் அச்சிட்டு, நகரின் அனைத்துப் பொதுமக்களுக்கும் வினியோகிக்க இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டம்:
டி.சி.டபிள்யு. ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதியளித்துள்ளதையடுத்து, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக, நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள், நகர்மன்ற அங்கத்தினர் கலந்தாலோசனைக் கூட்டத்தை விரைவாகக் கூட்ட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின், KEPA செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் - 22.30 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |