காயல்பட்டினம் நகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றிய ரோஜா சுய உதவிக் குழுவினர் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இன்று காலை 09.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சிக்குச் சென்று பார்த்தபோது, தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் சாதாரண உடையில் இருந்தனர்.
அவர்களுள் சிலரிடம் இதுகுறித்து வினவியபோது, காயல்பட்டினம் நகராட்சியில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களான அவர்களைப் பணி நீக்கம் செய்யுமாறு - சென்னையிலுள்ள மாநில நகராட்சி நிர்வாக இயக்குநரகத்திலிருந்து உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், எனவே இன்று (ஏப்ரல் 02) முதல் தற்காலிகப் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டாம் எனவும் ஆணையர் தெரிவித்ததாகவும், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் தற்காலிகப் பணியாளர்களிடம் கூறியுள்ளதாக அவர்கள் கூறினர்.
சுமார் 8 வருட காலமாக இந்த நகராட்சியில் பணியாற்றி வரும் தங்களை திடீரென வேலை நீக்கம் செய்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது என அவர்கள் மேலும் கூறினர்.
இது ஒருபுறமிருக்க, பொதுமக்களில் சிலர் நகராட்சி வளாகத்திற்கு முன் வந்து, நகராட்சியின் துப்புரவுப் பணிக்கான (திடக்கழிவு மேலாண்மை) வாகனங்களை, நகராட்சியில் ஓட்டுநர் தரத்திலுள்ள ஊழியர் மட்டுமே எடுக்க வேண்டும் எனவும், மற்றவர்கள் யாரும் அதை இயக்க அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறி வாக்குவாதம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |