காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்தில் இயங்கி வரும் மக்தபத்துல் மக்தூமிய்யா தீனிய்யாத் - மார்க்க அடிப்படைக் கல்விப் பிரிவு துவங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைவதையொட்டி, மாணவர்களுக்கு சன்மார்க்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
நமது அல் மக்தபத்துல் மக்தூமிய்யா, கடந்த 01.03.2013 அன்று இறையருளால் துவங்கப்பட்டது. மாணவர்களுக்கு மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் வளாகத்திலும், மாணவியருக்கு 3 இடங்களிலும் - 190 மாணவ-மாணவியரைக் கொண்டு, 1 மணி நேர பாடவேளையுடன் தனித்தனியே தீனிய்யாத் வகுப்புகள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே – அல்ஹம்துலில்லாஹ்!
ஓராண்டு நிறைவையொட்டி, மாணவ-மாணவியருக்கு சன்மார்க்கப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. 08.03.2014, 09.03.2014 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், காயல்பட்டினம் குறுக்கத் தெருவிலுள்ள முஹ்ஸனாத் பெண்கள் தைக்காவில் மாணவியருக்கும், 21.03.2014, 22.03.2014 வெள்ளி, சனிக்கிழமை மாலையில் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் மாணவர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றன.
20.04.2014 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மஃரிப் வரை மக்தபின் முதலாமாண்டு நிறைவு விழா நடைபெறவுள்ளது. அதில், நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
இவ்விழாவில், பல்வேறு ஊர்களிலிருந்தும் சிறப்பழைப்பாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அனைத்து நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் திரளாகக் கலந்து, மாணவர்களை உற்சாகப்படுத்துவதுடன், அவர்களது கல்வி வளர்ச்சிக்காக துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |