திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள - பார்வையற்ற மாணவருக்கு, காயல்பட்டினம் மஹான் ஸாஹிப் அப்பா தைக்காவில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெறப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த மோக்கோ எம்.ஏ.ஜமால் முஹம்மத் என்பவரின் மகன் ஜெ.எம்.செய்யித் ஐதுரூஸ் புகாரீ. இவர் பார்வையற்ற மாணவர்.
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் - மறைந்த டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர் அவர்களிடம் இவர் திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தார். அவருக்கு, ஹாஃபிழுல் குர்ஆன் பட்டமளிக்கும் விழா 27.03.2014 வியாழக்கிழமை பின்னிரவில், ஸாஹிப் அப்பா தைக்காவில் வழமை போல நடைபெறும் ராத்திப் மஜ்லிஸைத் தொடர்ந்து பட்டமளிப்பு விழா நடைபெற்றது. குத்பிய்யா மன்ஸில் நிறுவனர் அஷ்ஷெய்க் ஜலீல் முஹ்யித்தீன் காதிரீ, விழாவிற்குத் தலைமை தாங்கி, மாணவர் ஜெ.எம்.செய்யித் ஐதுரூஸ் புகாரீக்கு ஹாஃபிழுல் குர்ஆன் பட்டம் வழங்கி, வாழ்த்திப் பிரார்த்தித்தார்.
காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, அஹ்மத் நெய்னார் பள்ளியின் நிர்வாகி மவ்லவீ கத்தீபு கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ,செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ உட்பட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு, சாதனை மாணவரை வாழ்த்தி துஆ செய்தனர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |