காயல்பட்டினம் கடற்கரையில், நகராட்சியின் முறையான எந்த அனுமதியும் பெறாமல் இயங்கும் கடைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடற்கரை ‘அழகுபடுத்த’ப்படுவதற்கு முன்பு வரை, வேர்க்கடலை மட்டுமே சிலரால் விற்கப்பட்டு வந்தது. பின்னர் சுண்டல், பளிங்குக் குவளையில் தேனீர் என பலர் விற்பனை செய்யத் துவங்கினர். இவையனைத்தும், வீடுகளிலேயே ஆயத்தம் செய்து, சொந்தப் பாத்திரங்களில் கொண்டு வந்து, அலைந்து திரிந்து விற்கப்பட்டதால், பொதுமக்களுக்கு இடையூறோ, சட்டச் சிக்கல்களோ இருக்கவில்லை.
நாளடைவில், பளிங்குக் குவளைகள் மறைந்து, காகிதக் கோப்பைகளும். ப்ளாஸ்டிக் கோப்பைகளும் புழக்கத்தில் வந்தன. இதனால் கடற்கரையில் தேவையற்ற குப்பைகள் சேகரமாகத் துவங்கின.
கடந்த சில ஆண்டுகளாக கறிகஞ்சி, வடை பதார்த்தங்களை விற்கிறோம் என்ற பெயரில், கடற்கரையின் மாசற்ற மணற்பரப்பில் அடுப்பு வைத்து எரித்து, தற்போது மணற்பரப்பு முழுக்க அடுப்புக்கரிகள் படர, கடற்கரையின் வடபுற மணற்பகுதி கருநிறத்துடனும், அமர்வோரின் கீழாடைகளை நாசம் செய்வதாகவும் திகழ்ந்து வருகிறது.
பற்றாக்குறைக்கு, இம்மாதம் 23ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலையில், கடற்கரை நுழைவாயிலின் இரு முனைகளிலும் பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் துணிக்கடை, பொம்மைச் சாமான்கள் கடை, கபாப் இறைச்சிக் கடை, சுண்டல், ஜாங்கிரி, பாப்கார்ன் என 6 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அக்கடைகளில் சூழ்ந்த வாடிக்கையாளர்கள் காரணமாக நுழைவாயில் வழியே பொதுமக்கள் கடந்து செல்ல மிகவும் அவதிப்பட்டனர்.
இன்று (மார்ச் 31 திங்கட்கிழமை) மாலையில் மீண்டும் துணிக்கடையும், பொம்மைக் கடையும் கடற்கரை நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது.
மக்கள் நெரிச்சலுக்கும், ஆண் - பெண் கலப்பிற்கும் அடிப்படையாகவுள்ள இந்தக் கடைகள் அமைப்பதற்கு நகராட்சி அனுமதி கொடுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க, மக்கள் பிரச்சினை எழுப்பினாலே தவிர - அனுமதியின்றி பரத்தப்படும் இதுபோன்ற கடைகள் மீது நகராட்சி நிர்வாகம் இதுவரை முறையான நடவடிக்கை எடுத்ததாகவும் தெரியவில்லை.
கடற்கரை நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |