சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையொட்டி நடத்தப்படும் போட்டிகளின் வரிசையில், பவுலிங், க்ரிக்கெட் மற்றும் பாட்மிண்டன் ஆகிய போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, அம்மன்றத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகள், என ஏராளமானோர் பங்குபெறுவது வழக்கம். நடப்பாண்டின் வருடாந்திர பொதுக்குழு வரும் ஏப்ரம் மாதம் 12,13 தேதிகளில் நடக்கவிருப்பதை முன்னிட்டு உறுப்பினர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி, வென்றோருக்கு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பவுலிங் போட்டி:
போட்டிகளின் வரிசையில், 15.03.2014 அன்று சனிக்கிழமை 19.00 மணிக்கு, பவுலிங் போட்டி - சிங்கப்பூர் மெரினா ஸ்கொயர் மாலில் நடைபெற்றது. மன்ற துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் லெப்பை போட்டியைத் துவக்கி வைத்தார்.
மன்ற உறுப்பினர்கள் 5 அணிகளாக போட்டியில் பங்கேற்றனர். நிறைவில் எம்.என்.முஹம்மத் லெப்பை அணி முதலிடத்தையும், ஜெ.எஸ்.தவ்ஹீத் அணி இரண்டாமிடத்தையும் பெற்றன.
க்ரிக்கெட் போட்டி:
க்ரிக்கெட் போட்டி 22.03.2014 சனிக்கிழமை 19.00 மணியளவில் நிக்கோல் ஹைவே (Nicoll Highway) நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்றது. ‘நகைச்சுவை நாயகர்’ ஜித்தா செய்மீன் போட்டியைத் துவக்கி வைத்தார்.
உறுப்பினர்கள், ஏ, பி பிரிவுகளில் தலா 4 அணிகளாகப் பிரிந்து, மொத்தம் 8 அணிகளாக விளையாடினர். இறுதிப்போட்டியில், ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் அணி, வி.என்.எஸ்.முஹ்ஸின் தம்பி அணியை வென்றது.
பாட்மிண்டன் போட்டி:
பாட்மிண்டன் - இறகுப் பந்துப் போட்டி 24.03.2014 சனிக்கிழமை 20.00 மணியளவில், ஃபேரர் பார்க் அருகிலுள்ள பெக்கியோ சமூக நலக்கூடத்தின் உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘நகைச்சுவை நாயகர்’ ஜித்தா செய்மீன் போட்டியைத் துவக்கி வைத்தார்.
உறுப்பினர்கள், ஏ, பி பிரிவுகளில் தலா 4 அணிகளாகப் பிரிந்து, மொத்தம் 8 அணிகளாக விளையாடினர்.
இறுதிப்போட்டியில், எஸ்.எச்.உதுமான், எம்.ஆர்.ஏ.ஷேக் அப்துல் காதிர் ஸூஃபீ, பி.எம்.ஏ.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரைக் கொண்ட அணி, கே.டி.ஷாஹுல் ஹமீத் மற்றும் அஹ்னாஃப் உள்ளிட்டோரைக் கொண்ட அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
போட்டிகளில் வென்றோருக்கான பரிசுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுக்குழு ஒன்றுகூடலில் வழங்கப்படும் எனும் தகவலை, மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |