ஆதரவாளர்கள் புடைசூழ, ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ம.புஷ்பராயன் இன்று (மார்ச் 29) வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றி வரும் ம.புஷ்பராயன் கடந்த 3 ஆண்டுகளாக இடிந்தகரையில் தங்கியிருந்த அவர், அந்த ஊரை விட்டும் வெளியேறினால் - காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. எனினும், இடிந்தகரையிலிருந்து இடையூறுகள் எதுவுமின்றி - ஆம் ஆத்மி அபிமானிகளுடன் புறப்பட்ட அவர், திருச்செந்தூர், வீரபாண்டியன்பட்டினம், காயல்பட்டினம், ஆத்தூர் வழியாக தூத்துக்குடியிலுள்ள ஆம் ஆத்மி தேர்தல் பணிமனையைச் சென்றடைந்தார்.
காயல்பட்டினம் வந்த வேட்பாளருக்கு, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி முனையில், ஆம் ஆத்மி ஆதரவாளரான அமீர் சுல்தான் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், காயல்பட்டினத்திலிருந்து ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் சில வாகனங்களில் வேட்பாளருடன் இணைந்து சென்றனர்.
அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், அவர் செய்தியாளர்களிடையே தனது கருத்துக்களைப் பதிவு செய்ததோடு, அவர்களது கேள்விகளுக்கு விளக்கமும் அளித்தார். (செய்தியாளர் சந்திப்பு செய்தி தனியாக வெளியிடப்படும்.)
பின்னர், தூத்துக்குடி பனியமாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர், அங்கிருந்து ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் புடை சூழ பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றார்.
இன்று 14.30 மணியளவில், தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புரூஸ், நேர்முக உதவியாளர் (பொது) ஆறுமுகம், தேர்தல் வட்டாட்சியர் நெல்லை நாயகம் ஆகியோர், தேர்தலுக்கான மக்கள் தொடர்பாளரும், மாவட்ட வருவாய் அதிகாரியுமான முத்து முன்னிலையில், ஆம் ஆத்மி வேட்பாளர் ம.புஷ்பராயனின் வேட்பு மனு விபரங்களை சரிபார்த்து ஒப்புதலளித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, ம.புஷ்பராயன் தனது வேட்புமனுவை வழங்க - மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் அதனைப் பெற்றுக்கொண்டார்.
ஆம் ஆத்மி கட்சியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் சுபாஷ் பர்னாந்து, அதன் அங்கத்தினரான ஜோஸப் (தூத்துக்குடி), எஸ்.அப்துல் வாஹித் (காயல்பட்டினம்), எம்.என்.அஹ்மத் ஸாஹிப் (காயல்பட்டினம்) ஆகியோர் உடனிருந்தனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |