இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில், நேற்று (மார்ச் 28 வெள்ளிக்கிழமை) 19.00 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில், பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மமக மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.ஜோஸப் நொலாஸ்கோ, மாவட்டச் செயலாளர் எச்.பீரப்பா உட்பட, மமக மற்றும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மமக நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், மமக மாவட்ட தலைவர் எஸ்.ஆஸாத், திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்ஸாரீ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
மமக அடிக்கடி அணி மாறுவதாக விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. மமக பயணிக்கும் குதிரை மாறுமே தவிர அதன் கொள்கை ஒருபோதும் மாறாது. சமுதாய நலன் கருதி, முக்கியமான கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து, அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்தோம். அதுகுறித்து சட்டசபையில் மமக உறுப்பினர்கள் 11 முறை பேசியும் உள்ளனர். இருந்தும் முதல்வர் ஜெயலலிதா அது விஷயத்தில் தொடர்ந்து மவுனமே காத்தார்.
நாட்டிலுள்ள முக்கிய ஊடகங்களின் முதலாளிகள் விலைபோய்விட்டதால், நாட்டில் மோடி அலை வீசுவதாக - பல மாதங்களுக்கு முன்பிலிருந்தே ஊடகங்கள் இல்லாத ஒன்றை பூதாகரமாக சித்தரிக்கத் துவங்கிவிட்டன. ஒவ்வொரு நாளும் மோடி நின்றது, நடந்தது என அனைத்தும் செய்தித்தாள்களின் பக்கங்களையும், தொலைக்காட்சிகளின் நேரங்களையும் ஆக்கிரமித்தன.
ஆனால், அது பொய்யான சித்தரிப்பு என்பது இன்று ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் மூலம் நாட்டுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தை மின்மிகை மாநிலமாகக் கூறுகிறார்கள். பல லட்சம் மக்கள் அங்கு புதிதாக மின் இணைப்பு பெற்றிட காத்துக் கொண்டிருக்கும் நிலையில், அதற்குக் கொடுக்காமல் - மாநிலத்தில் உபரியாக மின் உற்பத்தியாவதாகக் கூறி பெரும்பகுதி மின்சாரத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறார் மோடி.
நம் மாநிலங்களைப் போல அங்கு மக்களுக்குச் சொந்தமான நிலத்தில் கூட நினைத்தவுடன் கிணறு தோண்டவோ, நிலத்தடி நீரை நம் தேவைக்கு எடுக்கவோ முடியாது. இதன் விளைவாக. இந்தியாவிலேயே அதிகளவில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக குஜராத் பெயர் பெற்றுள்ளது.
மோடியைப் பாராட்டுபவர்கள் யார் என்பதை இனங்கண்டு கொண்டாலே அவர் யார் என்பதை இலகுவாக விளங்கிக்கொள்ள இயலும். அவரைப் பாராட்டுவோர் டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற பனமுதலைகள். சாதாரண மக்கள் அவர் மீது என்ன மனநிலையிலிருக்கிறார்கள் என்பது இன்று ஊடகங்களால் மறைக்கப்பட்ட நிலையிலும், அரவிந்த் கெஜ்ரிவால் அதை நாட்டு மக்களுக்குப் போட்டு உடைத்திருக்கிறார். அதற்காக அவரைப் பாராட்டலாம். மோடி இந்த நாட்டில் ஒருவருக்குப் பயப்படுகிறார் என்றால் அது கெஜ்ரிவாலுக்குத்தான்.
இத்தனையையும் தாண்டி மோடி பிரதமரானால், இந்த நாட்டில் அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய சட்டம் அவர்களின் எண்ணங்களுக்கேற்ப திருத்தப்படும். மண்டல் கமிஷன் பரிந்துரைகள், சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு, முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் வாழ்வுரிமை உள்ளிட்டவை இல்லாமலாக்கப்படும்.
தலைவர்களின் தவறான அனுகுமுறை காரணமாக, இந்தத் தேர்தலுடன் மதிமுக, பாமக போன்ற சில கட்சிகள் காணாமல் போகும்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பாஜக இன்று தனது பரப்புரைகளில் தூக்கிப் பிடிக்கிறது. வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக ரத்த வெறி கலவரங்கள் நடைபெற்ற நேரத்தில், தமிழகத்திலும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, “அது நடக்க விட மாட்டேன்” என்று முஸ்லிம்களுக்கு அரணாக நின்று திட்டவட்டமாக அறிவித்தவர் தேவர் அய்யா அவர்கள்.
சுவாமி விவேகானந்தர் - அவர் ஒரு பிராமணரல்ல என்பதற்காகவே - போற்றப்படத் தகுதியிருந்தும் பிராமணர்களால் ஒதுக்கப்பட்டார் என்பது இந்த நாட்டின் வரலாறு.
மொத்தத்தில் இந்த நாட்டில் மதச்சார்பற்ற கூட்டணியே ஆட்சியமைக்க வேண்டும். அதற்கு, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் என்.பி.ஜெகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அவரை லட்சக்கணக்கான வாக்குகள் வேறுபாட்டில் அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும் என உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். மமக திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் எம்.ஹஸன் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் முரசு தமிழப்பன், தமுமுக மாநில வர்த்தகரணி செயலாளர் எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் (எல்.கே.எஸ்.), மமக மாவட்ட துணைச் செயலாளர் முர்ஷித் முஹ்ஸின் உட்பட, மமக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கூட்ட ஏற்பாடுகளை, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
முன்னதாக, காயல்பட்டினம் வருகை தந்த மமக மாநில பொதுச்செயலாளர் தமீமுன் அன்ஸாரியை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் சால்வை அணிவித்து வரவேற்றார்.
முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |