இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனை காயல்பட்டினம் 13ஏ, விசாலாட்சியம்மன் கோயில் தெரு என்ற முகவரியில் அமைக்கப்பட்டுள்ளது.
அதன் திறப்பு விழா நேற்று (மார்ச் 28) 17.00 மணியளவில் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி தேர்தல் பணிமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற - ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர் கூட்டத்திற்கு, திமுக நகர அவைத்தலைவர் ஜெ.எம்.கிதர் முஹம்மத் தலைமை தாங்கினார். திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், நிர்வாகிகளான எஸ்.ஏ.காதர் ஸாஹிப், ஏ.பன்னீர் செல்வம், எம்.என்.சொளுக்கு, பூங்கொடி, எஸ்.எச்.தாஜுத்தீன், ஏ.எஸ்.ஆறுமுகம், ஆர்.எஸ்.கோபால், பி.எம்.அப்துல் காதர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். திமுக 13ஆவது வட்ட செயலாளர் ஆர்.எஸ்.கணபதி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தியதுடன், அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
கூட்டணி கட்சிகளான ஆதித்தமிழர் பேரவை சார்பில் அதன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் அருந்ததி அரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் முன்னோடித் தமிழன், மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட தலைவர் பி.மீராசா மரைக்காயர், திமுக நகர முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு, திமுக நகர செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர். தேர்தல் பணியாற்ற வேண்டிய இக்காலகட்டத்தில், உட்கட்சிப்பூசல் இருக்கக் கூடாது என்று மமக நகர தலைவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, ஐக்கிய சமாதானப் பேரவை தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் ஆஸ்டின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி நிறைவுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
தேர்தல் பணியாற்ற வேண்டிய இத்தருணத்தில், திமுகவிற்குள் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்கக் கூடாது என்று, கூட்டணிக் கட்சிகள் சொல்லுமளவுக்கு நிலையுள்ளது. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இப்பிரச்சினையையை சரிசெய்ய வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே இன்று நான் இங்கு வருகை தந்துள்ளேன்.
கட்சி என்பது ஜனநாயக அமைப்பு என்ற அடிப்படையில், கருத்து வேறுபாடுகள் தவிர்க்க இயலாததுதான். எனினும், அதைப் பூதாகரமாக்கி, தேர்தல் வெற்றிக்கு எதிராக அதன் போக்கு அமைய ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். இத்தனையையும் தாண்டி, கட்சியின் கட்டுக்கோப்புக்கு மாற்றமாக செயல்படுவோரை இனங்கண்டு ஓரங்கட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
யார் என்ன சொன்னாலும், இந்த காயல்பட்டினம் என்றும் கலைஞர்பட்டினம்தான் என்பதை, சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் தளபதி ஸ்டாலின் இங்கு வந்தபோது, வெளியிலேயே வராத இந்த ஊர் பெண்கள் கொடுத்த உற்சாக வரவேற்பை நேரில் பார்த்து அறிந்துகொண்டு, மிகுந்த மகிழ்ச்சியுடன் சென்றுள்ளார்.
இங்குள்ள வாக்கு நிலவரம் குறித்து அவர் என்னிடம் கேட்டபோது, காயல்பட்டினத்தில் 90 சதவிகித வாக்கு நம் கட்சிக்குத்தான் என்று நான் உறுதியுடன் தெரிவித்துள்ளேன். அது நிறைவேற அனைவரும் உறுதியுடன் உழைக்க வேண்டியது கடமை.
இந்தத் தேர்தலில் பரப்புரை செய்யும் ஜெயலலிதா, செல்லுமிடங்களிலெ்லாம் திமுகவையும், காங்கிரஸையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆனால் பாஜக பற்றி ஒன்றுமே சொல்வதில்லை.
திமுகவை ஊழல் செய்த கட்சி என்று விமர்சிக்கிறார். அப்படியே வைத்துக்கொள்வோம்... நீங்கள் சுத்தமா? நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு முகம் காட்ட அஞ்சி ஓடி ஒளிவது யார் என்பதை இந்த நாடு அறியும்.
ஜெயலலிதா பிரமராகக் கனவு காண்கிறார். தன்னுடன் இருந்த கட்சிகள் அனைத்தையும் வெளியில் தள்ளிவிட்டார். யாருடைய ஆதரவும் இன்றி அநாதையாக நிற்கும் நிலையிலும் அவர் நாட்டை ஆள கனவு காண்பது எப்படி என்று எனக்குத் தெரியவில்லை.
நரேந்திர மோடிக்கும், இவருக்கும் செயல்திட்டங்கள் ஒன்றே. இருவரும் ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பவர்களே. எனவே இவ்விருவர் விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கை தேவை.
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் என்.பி.ஜெகனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அமோக வெற்றிபெறச் செய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினரானால், தொகுதி மேம்பாட்டு நிதியாகக் கிடைக்கும் 5 கோடி ரூபாயையும் இந்தத் தொகுதிக்கு - குறிப்பாக இந்த ஊருக்கு எந்தெந்த வகைகளிலெல்லாம் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கிறதோ, அத்தனை வழிகளிலும் பயன்படுத்தப்படும் என நான் உறுதியளிக்கிறேன்.
இவ்வாறு திமுக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி பேசினார்.
கூட்டத்தில், ஜெயக்குமார் ரூபன், ஆனந்தசேகரன், ராஜ்மோகன் செல்வின், சொ.சு.தமிழ் இனியன், முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன், அதன் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், நகர மாணவரணி அமைப்பாளர் ஏ.ஆர்.ஷேக் முஹம்மத், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் உட்பட - திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், அங்கத்தினர் பங்கேற்றனர்.
படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |