உலக காயல் நல மன்றங்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் - செலவுகளைக் குறைத்து, “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியை - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து தொடர்ந்து நடத்திடுவதென இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை:-
உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான நமது இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம், இறையருளால் – இம்மாதம் 21ஆம் நாள் வெள்ளிக்கிழமை 19.45 மணிக்கு, இக்ராஃ அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மது அபூபக்கர் தலைமை வகிக்க, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மது இக்பால், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எம்.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத் தலைவரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கூட்ட ஒழுங்குமுறைகள் குறித்து, இக்ராஃ இணைச்செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் சிற்றுரையாற்றினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
இக்ராஃவின் கடந்த செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து இக்ராஃ செயலாளர் விளக்கிப் பேசினார்.அதனைத் தொடர்ந்து கடந்த செயற்குழுக் கூட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற - இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து செயலாளர் பின்வருமாறு விளக்கினார்:-
கல்வி உதவித்தொகை:
நடப்பு 2013-2014 கல்வியாண்டில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 48 மாணவ-மாணவியருக்கு - திட்டமிட்ட படி டிசம்பர் மாத இறுதிக்குள் கல்வி உதவித்தொகை வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.
கல்வி ஒளிபரப்பு:
நடப்பு கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வெழுதும் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ-மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டும் - பாடவாரியான கல்வி ஒளிபரப்பு நிகழ்ச்சி உள்ளூர் தொலைக்காட்சி அலைவரிசைகள் மூலம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்புக்கான ஒளிபரப்பு 18.02.2014 இல் துவங்கி, 28.02.2014 வரையில் - முஹ்யித்தீன் டிவியில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பிற்கான ஒளிபரப்பு 19.03.2014 துவங்கி 23.03.2014 வரையில் - முஹ்யித்தீன் டிவியின் அனுசரணையில் மீடியா டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
சாதனை மாணவர்:
இக்ராஃவின் மூலம் கல்வி உதவித்தொகை பெற்று, சென்னை வியாசர்பாடியிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் எம்.எஸ்.ஸி. கணிதம் பயின்று வரும் - காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்த மாணவர் எம்.எஸ்.முஹம்மத் ஹஸன் யாஸீன் லண்டனில் மேற்படிப்பு பயில்வதற்காக தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் சென்றுள்ள செய்தியை, புதிய தலைமுறை மற்றும் உள்ளூர் இணையதளங்களில் செய்தியாக வெளியிடப்பட்ட தகவல் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர்கள் / ஆயுட்கால உறுப்பினர்கள்:
இக்ராஃவின் புதிய உறுப்பினர்களாவதற்கு நடப்பு கூட்ட தேதி வரை 35 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவற்றையும் சேர்த்து இதுவரை மொத்தம் 444 உறுப்பினர்கள் உள்ளதாகவும், அவர்களுள் 106 பேர் ஒரேயொரு முறை ரூபாய் 15 ஆயிரம் செலுத்தும் ஆயுட்கால உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு, அவர்களில் காயல் நல மன்றங்கள் மூலமாக இணைக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரங்கள் மற்றும் அவர்களைப் பெற்றுத் தந்த அமைப்புகளின் விபரப் பட்டியல் கூட்டத்தில் விவரிக்கப்பட்டது.
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியை இணைந்து நடத்துவது குறித்த கா.ந.மன்றங்களின் கருத்துக்கள்:
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியை - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இக்ராஃவும் இணைந்து நடத்துவது குறித்து, கடந்த செயற்குழுக் கூட்டத்தில் - இக்ராஃ தலைவரும், ஜித்தா காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஜி குளம் அஹ்மத் முஹ்யித்தீன் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து, உலக காயல் நல மன்றங்களிடம் இதுகுறித்து கருத்து கேட்க தீர்மானிக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில், கேட்டுப் பெறப்பட்டுள்ள கருத்துக்கள் கூட்டத்தில் வாசிக்கப்பட்டன.
பெறப்பட்ட கருத்துக்களில், தொடர்ந்து நடத்தலாம் என 3 மன்றங்களும், தேவையில்லை அல்லது வேறு நிகழ்ச்சிகளை நடத்தலாம் என 3 மன்றங்களும், பெரும்பான்மை மன்றங்களின் கருத்துக்களுடன் ஒத்துழைப்பதாக ஒரு மன்றமும் தெரிவித்த கருத்துக்கள் கூட்டத்தில் பரிமாறப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சியை இக்ராஃவுடன் இணைந்து நடத்தும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் அதிகாரப்பூர்வ கருத்தை, அவ்வமைப்பின் சார்பில் எஸ்.கே.ஸாலிஹ் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்நிகழ்ச்சி மூலம் ஏற்படும் பலன்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நீண்ட கருத்துப்பரிமாற்றங்கள் செய்யப்பட்ட பின், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புடன் இணைந்து இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திடவும், இதனால் இக்ராஃவுக்கு கைப்பிடித்தம் வராத அளவுக்கு செலவினங்களில் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்திடவும், மாணவர்களுக்கு தேவையான இன்னும் பல முக்கிய கல்வி நிகழ்ச்சிகளை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
கா.ந.மன்ற அங்கத்தினர் ஊர் வரும்போது இக்ராவுக்கு தெரிவிக்கக் கோரல்:
இக்ராஃவால் நடத்தப்படும் கூட்டங்களில் தான் ஊரிலிருந்தும் அழைக்கப்படாததாக சிலர் கூறக் கேட்டதாக, ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால் கூட்டத்தில் கூறியதுடன், உலக காயல் நல மன்றங்களின் நிர்வாகத்தில் அங்கம் வகிக்கும் காயலர்கள் - காயல்பட்டினம் வரும்போது அத்தகவலை இக்ராஃவுக்கு தெரிவிக்கக் கோரலாம் என்றார். ஆண்டுக்கு ஒருமுறை இதுகுறித்து இக்ராஃ சார்பில் அறிக்கையை செய்தியாக வெளியிடலாம் என ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம் கூறினார். அதன் படி செய்ய முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கல்வி ஒளிபரப்புக்கு ஒத்துழைத்தோருக்கு நன்றி:
நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பிற்கான கல்வி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதுடன், 10ஆம் வகுப்பிற்கான ஒளிபரப்பிற்கு தன் செலவில் மீடியா டிவி மூலம் ஏற்பாடு செய்த முஹ்யித்தீன் டிவி நிர்வாகத்தினருக்கும், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஆசிரியர் எம்.ஏ.புகாரீ அவர்களுக்கும், பாடவாரியாக நிகழ்ச்சிகளை நடத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - புதிய உறுப்பினர்களின் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல்:
இக்ராஃவில் புதிய உறுப்பினர்களாவதற்கு - நடப்பு கூட்ட தேதி வரை பெறப்பட்டுள்ள 35 விண்ணப்பங்களுக்கு இக்கூட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
தீர்மானம் 3 - சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை நிகழ்ச்சியை இணைந்து நடத்தல்:
“சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியை வழமைபோல இக்ராஃ மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் இணைந்து தொடர்ந்து நடத்திடவும், இதனால் இக்ராஃவுக்கு கைப்பிடித்தம் வராத அளவில் செலவினங்களை முறைப்படுத்தவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - ஊர் வரும் வெளிநாட்டு காயலர்கள் தகவல் தெரிவிக்கக் கோரல்:
விடுமுறையில் காயல்பட்டினம் வரும், காயல் நல மன்ற நிர்வாகிகள் தமது வரவு குறித்து முற்கூட்டியே இக்ராஃவுக்கு தெரிவிக்க வேண்டுகோள் விடுப்பது என்றும், அதனடிப்படையில் - அவ்வப்போது நடைபெறும் கூட்டங்களில் சிறப்பழைப்பாளர்களாகப் பங்கேற்க வழமை போல அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இக்ராஃ பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் நன்றி கூற, துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இரவு 10:30 மணியளவில் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், இக்ராஃ செயற்குழு உறுப்பினர்கள் தவிர - தம்மாம் காயல் நற்பணி மன்ற முன்னாள் துணைத்தலைவர் ஹாஜி எம்.ஐ.மெஹர் அலீ, ஜித்தா காயல் நற்பணி மன்ற இணைச்செயலாளர் ஹாஜி சட்னி எஸ்.ஏ . செய்யித் மீரான், தம்மாம் காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.எம்.செய்யித் இஸ்மாஈல், பஹ்ரைன் காயல் நல மன்றத்தைச் சேர்ந்த (பக்வா) ஹாஜி வேனா ஜாஹிர் ஹுஸைன், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நிர்வாகி கண்டி ஸிராஜ் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு, இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம்
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |