சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் மற்றும் குடும்ப சங்கம நிகழ்ச்சிகளையொட்டி நடத்தப்படும் போட்டிகளின் வரிசையில், கைப்பந்து மற்றும் மாரத்தான் ஓட்டப் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அம்மன்றத்தின் செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தை முன்னிட்டு, அம்மன்றத்தின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இதில் ஆர்வமுள்ளவர்கள், குழந்தைகள், என ஏராளமானோர் பங்குபெறுவது வழக்கம். நடப்பாண்டின் வருடாந்திர பொதுக்குழு வரும் ஏப்ரம் மாதம் 12,13 தேதிகளில் நடக்கவிருப்பதை முன்னிட்டு உறுப்பினர்களுக்கான பல்வேறு போட்டிகளை நடத்தி, வென்றோருக்கு பரிசுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கைப்பந்து போட்டி:
போட்டிகளின் வரிசையில், 21.03.2014 அன்று வெள்ளிக்கிழமை 20.00 மணிக்கு, லவண்டர் மலபார் மஸ்ஜித் அருகிலுள்ள விளையாடு மைதானத்தின் உள்ளரங்கில் வைத்து கைப்பந்து போட்டி நடைபெற்றது. விளையாட்டில் பங்கெடுப்பதற்காக பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் மஃரிப் தொழுகைக்கு மலபார் மஸ்ஜிதிற்கு வந்து சேர்ந்தனர். தொழுகைக்குப் பின்னர் ஆட்டம் துவங்கியது. மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்,அஹ்மத் ஃபுஆத் அவர்கள் போட்டியைத் துவக்கி வைத்தார்.
இப்போட்டிக்கான வீரர்கள் A, B, C, D என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, அணித்தலைவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
[கீழ்க்காணும் குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
அரையிறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்புடன் காணப்பட்டது. வெற்றிவாய்ப்பைத் தட்டிச் செல்வதற்காக மாமனார் அணியான ஹாஜி பாளையம் ஹஸன் அணிக்கும், மருமகன் செய்யத் அப்துர்ரஹ்மான் அணிக்கும் கடும் போட்டி நிலவியது. பார்வையாளர்களின் உற்சாகமான ஆதரவும், கைத்தட்டலும் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியது. இறுதியில் மாமனார் அணியே வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கான தகுதியை பெற்றது.
சற்று நேர இடைவேளைக்குப் பின்னர் இறுதிப் போட்டி துவங்கியது. இதில் ஹாஜி பாளையம் ஹஸன் அணியும் ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல் அணியும் மோதின. இரு அணிகளும் சளைக்காமல் விளையாடியபோதிலும், இரண்டாவது சுற்றில் ஆட்டத்தின் போக்கு மாறவே, நிறைவில், 25 - 17 என்ற புள்ளிகள் கணக்கில் ஹாஃபிழ் ஃபஸல் இஸ்மாஈல், மன்ற துணைச் செயலாளர் கே.எம்.டி.ஷேக்னா லெப்பை அணி வெற்றிபெற்றது.
ஆட்டத்தின் நிறைவில் அனைவருக்கும் உளுந்து வடை, சட்னி, குளிர் பானங்கள் உள்ளிட்ட உணவு வகைகள் அடங்கிய சிற்றுண்டி வழங்கப்பட்டது.
மாரத்தான் ஓட்டப்போட்டி:
போட்டிகளின் வரிசையில், மாரத்தான் தொடர் ஓட்டப்போட்டி இம்மாதம் 22.03.2014 சனிக்கிழமை 18.30 மணியளவில் நிக்கோல் ஹைவே (Nicoll Highway) நெடுஞ்சாலைக்கு பின்புறத்திலுள்ள நடைபாதையில் துவங்கியது.
[கீழ்க்காணும் குழுப்படத்தைப் பெரிதாகக் காண அதன் மீது சொடுக்குக!]
இப்போட்டியை மன்ற உறுப்பினர் எஸ்.டி.ஸூஃபீ, எஸ்.டி.செய்யித் முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தை ஹாஜி எஸ்.எச்.தைக்கா தம்பி துவக்கி வைத்தார். வயது வரம்பின்றி பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்ட இப்போட்டியின் மொத்த நீளம் 4 கிலோ மீட்டர் ஆகும். இவ்வளவு தொலைவுக்கு ஓடிய பிறகும் பங்கேற்பாளர்கள் யாரும் களைப்படையாமல், இதனை பயனுள்ளதொரு பயிற்சியாகவே எடுத்துக்கொண்டனர்.
இப்போட்டியில், மஹ்மூத் மானாத்தம்பி முதலாவதாகவும், அஹ்னாஃப் இரண்டாவதாகவும், ஹுஸைன் மவ்லானா மூன்றாவதாகவும் இலக்கை வந்தடைந்தனர்.
முதியவரும் பங்கேற்பு!
தமது வயது மற்றும் உடல்நிலையை பாராமல், தானும் யாருக்கும் சளைத்தவனில்லை என்று உணர்த்தும் வகையில், எட்டாவது ஆளாக வந்து ஜித்தா செய்மீன் காக்கா ஓடி வந்து நிரூபித்தார்.
போட்டியில் ஓடினார் என்று கூறுவதை விட, ஓட்டினார் என்று கூறுமளவுக்கு - தான் இருந்த இடத்தை வழமை போல கலகலப்பாக்கிய அவரது குணமும், செயலும் ஓட்டத்தில் பங்கெடுத்தோருக்கு உற்சாக டானிக்காகவே இருந்தது.
இனி நடைபெறும் போட்டிகள் அனைத்தும், வெவ்வேறு இடங்களில் இன்ஷாஅல்லாஹ் நடத்தப்படும் என மன்றத்தின் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் தெரிவித்துள்ளார்.
போட்டிகளில் வென்றோருக்கான பரிசுகள் ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுக்குழு ஒன்றுகூடலில் வழங்கப்படும் எனும் தகவலை, மன்றத் தலைவர் ஹாஜி எம்.அஹ்மத் ஃபுஆத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செய்தி தொடர்பாளர் எம்.என்.எல்.முஹம்மத் ரஃபீக் என்ற ஹிஜாஸ் மைந்தன் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு நடத்தப்படும் போட்டிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |