இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியின் கீழ் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் இம்மாதம் 10ஆம் நாளன்று வெளியிடப்பட்டது. அப்பட்டியலின் படி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளராக - அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமியின் மகன் என்.பி.ஜெகன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில், திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இம்மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை 16.00 மணியளவில், காயல்பட்டினம் 13ஏ, விசாலாட்சியம்மன் கோயில் தெரு என்ற முகவரியில் நடைபெறுகிறது.
கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கவும், கருத்துரையாற்றவும் உள்ள இக்கூட்டத்தில், திமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி மற்றும் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் என்.பி.ஜெகன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.
கூட்ட ஏற்பாடுகளை, திமுக காயல்பட்டினம் நகர கிளை செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன் தலைமையில் குழுவினர் செய்து வருகின்றனர்.
திமுகவின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |