இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிக்க 4 பார்வையாளர்கள் வரவுள்ளதாக, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எதிர்வரும் 24.04.2014 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, நடைபெறும் நிகழ்வுகளைக் கண்காணிக்கவும், வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், வாக்காளர்களின் செலவின விபரங்களைக் கண்காணிக்கவும், 4 தேர்தல் பார்வையாளர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனர்.
இதில், விழிப்புணர்வு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சந்தோஷ்குமார் மார்ச் 26ஆம் நாளன்று (இன்று) தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
செலவினத் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள வஸீம் ரஹ்மான் மற்றும் சுஸ்காந்த் குமார் ஆகியோர் இம்மாதம் 29ஆம் நாளன்று வருகை தருகின்றனர்.
பொது தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் கிருஷ்ணகுப்தா, வரும் 05.04.2014 அன்று தூத்துக்குடிக்கு வருகை தருகிறார்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |