“காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற ஊர்களில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி வாக்குறுதி அளிக்கிறது... இதர கட்சிகள் இப்படி பகிரங்கமாக வாக்குறுதியளிக்க இயலுமா?” என, ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட தேர்தல் பரப்புரையின்போது கேள்வியெழுப்பப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூகப் போராளியுமான ம.புஷ்பராயன் போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, காயல்பட்டினத்தை உள்ளடக்கிய – திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குள், நாளை (மார்ச் 27) முழுக்க ஆம் ஆத்மி கட்சியின் சார்பில், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை, அமலி நகர், ஜீவா நகர், திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது.
காயல்பட்டினம் வந்த பரப்புரைக் குழுவினர், கடையக்குடி (கொம்புத்துறை), கற்புடையார்பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதிகளில் பரப்புரையை முடித்துக்கொண்டு, 20.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடல், பின்னர் பேருந்து நிலையம் அருகில், பின்னர் சதுக்கைத் தெரு பெரிய சதுக்கை ஆகிய பகுதிகளில் பரப்புரை செய்தனர்.
அக்கட்சியின் தூத்துக்குடி தொகுதி தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சுபாஷ் பர்னாந்து பரப்புரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் புற்றுநோய் தாக்கம் அளவுக்கு அதிகமாக உள்ளதாக அறியப்பட்டுள்ளதாகவும், அதற்கு முக்கிய காரணமாக அஞ்சப்படும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் ம.புஷ்பராயன் வெற்றிபெற்றால், களமிறங்கிப் போராடும் என்றும், அதை ஒளிவு மறைவின்றி தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளதாகவும் அவர் பேசினார்.
இதுபோன்று திமுகவோ, அதிமுகவோ, இதர கட்சிகளோ பகிரங்கமாக பொதுமக்களிடம் கூறி வாக்கு கேட்க ஆயத்தமா என்று கேள்வியெழுப்பிய அவர், தேவைப்படும்போதெல்லாம் அத்தொழிற்சாலையின் விருந்தினர் மாளிகையில் தங்கி சொகுசு கண்டு வரும் இக்கட்சிகளின் தலைவர்களும், அதன் அங்கத்தினரும் ஒருபோதும் இது குறித்து வாய் திறக்க மாட்டார்கள் என்று கூறினார்.
கிழக்கு கடற்கரை சாலை குறித்துப் பேசிய அவர், எந்த வழியாக இச்சாலை வரவேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறதோ - அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் விரும்பினால், ஏற்கனவே திட்டமிடப்பட்ட படி - புன்னைக்காயல், காயல்பட்டினம் வழித்தடத்தில் இச்சாலை அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இடிந்தகரையிலிருந்து ஆண்டனி, தூத்துக்குடியிலிருந்து ஜெயந்திராஜ், அருளப்பன், ஸ்டீஃபன் ஆகியோரும், காயல்பட்டினத்திலிருந்து எஸ்.அப்துல் வாஹித், அமீர் சுல்தான், மாஷாஅல்லாஹ் தாவூத், ‘தமிழன்’ முத்து இஸ்மாஈல், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், எம்.ஜி.செய்யித் இப்றாஹீம், வெள்ளி முஹம்மத் அலீ உள்ளிட்ட ஆம் ஆத்மி கட்சியின் அபிமானிகளும் இப்பரப்புரையில் உடனிருந்தனர்.
பரப்புரையின்போது, ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு கோரும் பிரசுரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
தகவல் உதவி:
ஆம் ஆத்மி கட்சியின் சார்பில்...
M.N.அஹ்மத் ஸாஹிப்
படங்களுள் உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[ஒரு படம் இணைக்கப்பட்டது @ 09:11 / 28.03.2014] |