இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில் வாக்களிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் பார்வையாளர் சந்தோஷ்குமார் தலைமையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் - மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் முன்னிலையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 634309 ஆண் வாக்களர்களும், 6,42,318 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும் ஆக மொத்தம் 12,76,628 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த 2009 பாராளுமன்றத் தேர்தலில் எவ்வளவு வாக்குகள் பதிவானது என்பதையும், குறைவான வாக்குப்பதிவிற்கு என்ன காரணங்கள் என்பதையும், தற்பொழுது நடைபெறவுள்ள தேர்தலில் அதிகமான வாக்குப்பதிவிற்கு தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் தேர்தல் பார்வையாளர் சந்தோஷ்குமார் கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையம், சந்தைகள், வழிபாட்டுத்தலம், இரயில் நிலையம், மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் திரையரங்குகள், விளம்பர போர்டுகள் அமைக்க வேண்டும். அனைத்து வீடுகளிலும் விழிப்புணர்வு கையேடுகளை வழங்கவும், கல்லூரி மாணவ, மாணவிகள் மூலம் விழிப்புணர்வு பேரணி மற்றும் மனித சங்கிலி மற்றும் மாரத்தான் ஒட்டம் போன்றவை அதிக அளவில் நடத்தப்பட வேண்டும்.
செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு குறும் படங்கள் வீடியோ வாகனம் மூலம் திரையிட்டு குறைவான வாக்குகள் பதிவான இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
பொதுமக்கள் தேர்தலில் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக வாக்கு மைய சீட்டில் வாக்குப் பதிவு மையங்களின் முகவரி தெளிவாக குறிப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாக்கு மைய சீட்டின் மூலம் வாக்குப்பதிவு மையத்தை எளிதாக கண்டறிவதுடன் அடையாள அட்டை மற்றும் வாக்கு மைய சீட்டை எடுத்துச் சென்று வாக்குப்பதிவு அன்று காலை 07.00 மணி முதல் 06.00 மணி வரை அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களித்து வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமை மற்றும் உரிமைகளை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.முத்து, கோவில்பட்டி சார் ஆட்சியர் விஜயகார்த்திக்கேயன், கோட்டாட்சியர்கள் நாகஜோதி, தமிழ்ராஜன், மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புருஸ், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |