காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் - மூன்று வாரப்பயணமாக மார்ச் 15 அன்று, அமெரிக்க அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில், அமெரிக்கா சென்றடைந்தார். நகர்மன்றத் தலைவர் - அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில், பல்வேறு நிகழ்ச்சிகளில்
கலந்துக்கொள்கிறார்.
INTERNATIONAL VISITOR LEADERSHIP PROGRAM என்ற திட்டத்தின் கீழ், DIVERSITY IN THE
US FOR MINORITY YOUTH LEADERS என்ற தலைப்பிலான இந்த பயணத்தில் அவருடன், தமிழகத்தை சேர்ந்த மேலும் நான்கு சிறுபான்மை சமுதாய
சமூக ஆர்வலர்கள் - ஜென்னத்துல் குபுரா (Women's Integrated National Development - WIND அறக்கட்டளை), ஜைபுநிஷா (நிர்வாக
அறங்காவலர் மற்றும் தலைவர், மனிதம் அறக்கட்டளை), ஆளூர் முஹம்மது ஷாநவாஸ் (இஸ்லாமியர் உரிமைகள் ஆர்வலர் / குறும்பட
தயாரிப்பாளர்), ஷாபி முஹம்மது (உறுப்பினர் மற்றும் ஆலோசகர், ஜென்னதுல் பிர்தௌஸ் பள்ளிவாசல் மற்றும் மதரசா) - ஆகியோர்
சென்றுள்ளனர்.
இந்த குழுவினரின் அமெரிக்க நிகழ்ச்சிகள் - மார்ச் 17, திங்களன்று, அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டி.சி.யில், அதிகாரப்பூர்வமாக துவங்கின. வாஷிங்டன் டி.சி. நகரில் இருந்து - குழுவினர், பால்டிமோர் நகருக்கு மார்ச் 20 அன்று சென்றனர். பால்டிமோர் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், மிசிகன் மாநிலத்தின்
டெட்ராய்ட் நகரினை மார்ச் 22 சனிக்கிழமையன்று மாலை சென்றடைந்தனர்.
டெட்ராய்ட் நகரில் தங்கள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, குழுவினர், வாஷிங்டன் மாநிலத்தின் சியாட்டல் நகரினை மார்ச் 26 புதன்கிழமையன்று
மாலை சென்றடைந்தனர்.
சியாட்டல் நகரில் குழுவினருக்கு மார்ச் 27 (வியாழன்), மார்ச் 28 (வெள்ளி) ஆகிய இரு தேதிகளுக்கு
நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருந்தது. மார்ச் 29 (சனி) ஓய்வு தினமாகும்.
மார்ச் 28 வெள்ளியன்று குழுவினருக்கு - மூன்று நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முதல் நிகழ்ச்சி - ONE AMERICA என்ற தொண்டு நிறுவனத்தின்
அலுவலகத்தில் - காலை 10 மணி முதல் 11:30 மணி வரை நடந்தது. இதில் - இவ்வமைப்பின் கிழக்கு ஆப்ரிக்கா ஏற்பாட்டாளர், முஹம்மத் யூசுப்
(Mohamud Yussef, East African Organizer), சமீபத்தில் - இவ்வமைப்பால் துவக்கப்பட்ட அமெரிக்காவில் குடியேறும் முஸ்லிம்களுக்கு எதிரான
பாரபட்சங்களை நிறுத்த எடுக்கப்படும் முயற்சிகள் குறித்தும், வாஷிங்டன் மாநிலத்தில் - அரசு பொது கொள்கைகள் உருவாகும் போது, அதில்
நியாயமான முறையில் தாக்கங்களை ஏற்படுத்த எவ்வாறு இவ்வமைப்பு செயல்படுகிறது என்பது குறித்து அவர், குழுவினருக்கு விளக்கினார்.
ONE AMERICA தொண்டு நிறுவனம் - அமெரிக்கா மீது செப்டம்பர் 11, 2011 அன்று
நடந்த தாக்குதலை தொடர்ந்து HATE FREE ZONE என்ற பெயரில் துவக்கப்பட்ட நிறுவனமாகும். இந்த அமைப்பை பூர்விக இந்தியரான பிரமிளா ஜெயபால் என்பவர்
துவக்கினார். முதலில் - அரபு மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும், தெற்கு ஆசிய நாடுகளை சார்ந்த மக்களுக்கும் எதிராக நடந்த வெறுப்பு
குற்றங்கள் சம்பந்தமான மீதான நடவடிக்கைகள் மேற்கொண்டது. பிற்காலத்தில் - இதர இன மக்களுக்கு ஆதராவாக போராடிட இவ்வமைப்பு
துவங்கியது.
முதல் நிகழ்ச்சி நிறைவுற்றதும் குழுவினர் - ஜும்மா தொழுகைக்காக இத்ரீஸ் பள்ளி சென்றனர்.
அங்கு தொழுகை நேரம் மதியம் 1:30 என்பதால், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தொழுகையை நிறைவு
செய்தார்கள். இந்த பள்ளி - கிருஸ்துவ தேவாலையம் ஆகும். வெள்ளிக்கிழமை மட்டும் அதன் நிர்வாகிகள், தொழுகைக்காக அவ்விடத்தை இஸ்லாமியர்களுக்கு
வழங்குகிறார்கள்.
இத்ரீஸ் பள்ளி
வெள்ளிக்கிழமைகளில் பள்ளியாக பயன்படுத்தப்படும் கிருஸ்துவ தேவாலயம்
ஜும்மா தொழுகை தொடர்ந்து, மதிய உணவிற்கு பின் குழுவினர், தங்கள்
அடுத்த சந்திப்பிற்காக - Bill & Melinda Gates Foundation அமைப்பின்
வருகையாளர் மையத்திற்கு (VISITOR CENTER) சென்றனர்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸ் உடைய மனைவி மெலிண்டா கேட்ஸ். இவர்கள் இருவரின் பெயரில் - Bill & Melinda
Gates Foundation அமைப்பு, 2000ம் ஆண்டு - William H. Gates Foundation மற்றும் Gates Learning Foundation ஆகிய இரு தொண்டு
நிறுவனங்களை ஒருங்கிணைத்து, ஒரே அமைப்பாக மாற்றப்பட்டது.
இந்த அமைப்பு - உலக சுகாதாரம், உலக வளர்ச்சி, அமெரிக்க திட்டங்கள் மற்றும் உலக திட்டங்கள்/பரப்புரை என்ற நான்கு முக்கிய அம்சங்கள்
அடிப்படையில் திட்டங்களை வடிவமைப்பு செயல்புரிகிறது. இந்தியா உட்பட சில நாடுகளிலும் கிளைகள் அமைத்துள்ள இந்த தொண்டு நிறுவனம் -
போலியோ நோயை கட்டுப்படுத்த பெரிய அளவில் பொருள் உதவி செய்துள்ளது. தற்போது - கழிவறை வசதிகள் செய்து கொடுப்பதில் -
அரசுகளுடனும், தனியார் அமைப்புகளுடன் இணைந்து செயல்புரிந்து வருகிறது. இந்த அமைப்பிற்கான நிதி உதவியை - பில் கேட்ஸ் மற்றும் அவரின்
மனைவி, தங்களின் வருமானத்தில் செய்து வருகிறார்கள்.சமீபத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான வாரன் பப்ஃபே (Warren Buffett) - தனது
பொருளாதாரத்தில் பெரும் பங்கை, இந்த அமைப்பின் தொண்டுப்பணிகளுக்கு வழங்கிட முன்வந்தார்.
பில் கேட்ஸ் முயற்சியில் - இம்மூவரும் - உலகின் பெரிய செல்வந்தர்கள், தங்களின் மொத்த சொத்து மதிப்பில் குறைந்தது 50 சதவீதத்தை, தொண்டுப்பணிகளுக்கு ஒதுக்கிட ஆர்வமூட்டும்
முயற்சிகளை - The Giving Pledge என்ற திட்டம் மூலம் செய்து வருகின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
அங்கு - அவ்வமைப்பின் கல்வியாளர் டேவிடா இங்க்ரம் (Davida Ingram, Educator, Gates Foundation Visitor Center) இவ்வமைப்பின்
பணிகள் குறித்து குழுவினருக்கு விளக்கினார். இம்மையத்தில் - இவ்வமைப்பின் உலகளிவிலான பணிகள் குறித்த விளக்க படங்கள்,
மாதிரிகள், கணினி காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
மாலை நிகழ்ச்சிகள் 3:30 மணியளவில் நிறைவுற்றன. அடுத்த நிகழ்ச்சி இரவு 7:30 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்ததால், இடைப்பட்ட நேரத்தில்
குழுவினர் - சியாட்டல் நகரின் அடையாள சின்னமான - ஸ்பேஸ் நீடல் கோபுரம் காண குழுவினர் சென்றனர். இந்த கோபுரம் 1962ம் ஆண்டு சியாட்டல் நகரில்
நடந்த WORLD FAIR கண்காட்சியை முன்னிட்டு, கட்டப்பட்டதாகும். 185 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரம் உச்சியில், சுழலும் உணவு விடுதி
உள்ளது. இந்த கோபுரத்தில் இருந்து சியாட்டல் நகர் முழுவதும் மட்டுமன்றி, அருகில் உள்ள மலை, தீவுகள் ஆகியவைகளையும் காண
முடியும்.
குழுவினரின் இறுதி நிகழ்ச்சி - அவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ROOTS (RISING OUT OF THE SHADOWS) என்ற அமைப்பு, சியாட்டல் நகரில் உள்ள வீடு இல்லாத இளைஞர்களுக்கு - இரவில் தங்க பாதுகாப்பான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கிறது. சுகாதாரமான முறையிலும் பராமரிக்கப்படும் இந்த இரவு இல்லத்தில், 40 பேர் வரை தங்கலாம். அதற்கு மேல் யாரேனும் தங்க விரும்பினால், இரவு 8 மணியளவில் அவர்கள் இந்த நிலையத்திற்கு வரவேண்டும். குலுக்கல் முறையில் 5 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் தங்குவதற்கு - அவர்களுக்கு தினமும் சுத்தமான படுக்கை அமைத்து கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு நல்ல தரமான இரவு உணவும் வழங்கப்படுகிறது. காலையில் உணவு அருந்திவிட்டு, அவர்கள் இந்நிலையத்தை விட்டு சென்று விடுகிறார்கள். இங்கு வந்து தங்குபவர்கள் பலர் - பல வாழ்க்கை பின்னணியை கொண்டவர்களாக உள்ளார்கள். வீட்டில் பிரச்சனை காரணமாக - வீட்டைவிட்டு வெளிவந்து - ஒரு சிலர் இங்கு வந்து தங்குகிறார்கள். சிலருக்கு வேறு உறவினர் கிடையாது. சிலர் வேலையில் இருக்கிறார்கள், சிலர் இல்லை.
இந்தியாவில் இருந்து சென்றிருந்த குழுவினர் - இரவு 8 மணி முதல் 11 மணி வரை - அங்கு தொண்டுப்பணி ஆற்றினர். சில தன்னார்வலர்கள் - தினசரி இங்கு வந்து பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு தினமான மார்ச் 29 அன்று குழுவினர் - சியாட்டல் நகரில் கண்ணாடி அருங்காட்சியகம், பைக் மார்க்கெட் போன்ற முக்கிய இடங்களை
கண்டுகளித்தனர்.
கண்ணாடி அருங்காட்சியகம் (MUSEUM OF GLASS) - சியாட்டல் நகரின் தகோமா
பகுதியில், 75,000 சதுர அடியில் அமைந்துள்ளது. கண்ணாடி துறைக்கு என்றே அர்பணிக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், 2002ம் ஆண்டு
துவக்கப்பட்டது.
துவக்கப்பட்ட காலத்தில் இருந்து கண்ணாடி துறை வல்லுனர்களை ஊக்குவிக்கவும், அது குறித்த கல்வியறிவை வழங்கவும், படைப்பு திறனை
வெளிக்கொண்டு வரவும் - இந்த அருங்காட்சியகம் பல்வேறு நிகழ்சிகளை நடத்தி வருகிறது. இங்கு - கண்ணாடி மூலம் வித விதமான பொருட்களை
உருவாக்குவதை நேரடியாக காண அரங்கம் ஒன்றும் உள்ளது.
சியாட்டல் நகரில் மிகப்பிரபலமான சந்தை - பைக் மார்க்கெட் (PIKE MARKET) ஆகும். 1907ம் ஆண்டு இந்த சந்தை - நகர உள்ளாட்சி மன்ற
அதிகாரிகளால் துவக்கப்பட்டது. முதலில் - விவசாயிகள் தங்கள் பொருட்களை நேரடியாக - வாடிக்கையாளர்களுக்கு விற்க இந்த சந்தையை
பயன்படுத்தினர். 7 ஏக்கர் பரப்பளவில் உள்ள சந்தை காலப்போக்கில் பெரிதாகி - சியாட்டல் நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக -
நூற்றுக்கணக்கான் கடைகளுடன் காட்சி தருகிறது. தொடர்ச்சியாக இயங்கி வரும் அமெரிக்காவின் பழமைவாய்ந்த சந்தை இது என்றும்
கூறப்படுகிறது.
உலகின் பல நாடுகளில் கிளைகள் கொண்டுள்ள ஸ்டார்பக்ஸ் (STARBUCKS) காபி நிறுவனம், தனது முதல் கடையை இங்கு தான் - 1971ம் ஆண்டு
துவக்கியது. இந்தியாவில் இருந்து சென்றுள்ள குழுவினர், இந்த பகுதிக்கும் சென்றனர்.
தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik
இத்தொடரின் முந்தைய செய்தியை காண இங்கு அழுத்தவும்
|