இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அரசு நிர்ணயித்துள்ள படி ரூபாய் 70 லட்சம் தொகைக்கு மேல் செலவழித்தால், 3 ஆண்டுகளுக்கு வேட்பாளராகப் போட்டியிட தடை விதிக்கப்படும் என, தூத்துக்குடி தொகுதியின் தேர்தல் செலவின பார்வையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்திற்கு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளராக சுஷாந்த் குமார், வஸீமுர்ரஹ்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்த அவர்களது முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் - மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ம.ரவிக்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் தெரிவித்ததாவது:-
>>> மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூபாய் 70 லட்சம் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்பவர்கள் வரும் 3 ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிட இயலாது.
>>> எந்த ஆவணங்களும் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பொருட்கள், மதுபானங்கள், 50 ஆயிரம் ரூபாய் தொகைக்கு மேற்பட்ட பணம் போன்றவை வாகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
>>> கடல் வழியாக தங்கம், பணம், போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றனவா என்பதை, கடலோர காவல்படை, கடற்பரை, காவல்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
>>> பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
>>> மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் இரவு 10.00 மணிக்கு மேல் திறந்திருக்கக் கூடாது. மதுபானங்களை மொத்தமாக யாருக்கும் விற்பனை செய்யவும் கூடாது.
இவ்வாறு தேர்தல் செலவு கணக்கு பார்வையாளர்கள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மா.துரை, துணை காவல் கண்காணிப்பாளர் (தேர்தல்) கந்தசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புரூஸ், கடலோர காவல்படை மக்கள் தொடர்பு அலுவலர் ராஜன், கலால் உதவி ஆணையர் விஜயா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) முனியசாமி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சேகர், வருமான வரித்துறை அலுவலர் அருள் ஜோஸப், கடலோர காவல்படை ஆய்வாளர் ரமேஷ் குமார், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சி.குமார் உட்பட பல்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |