திமுக தலைவர் கருணாநிதிக்கு தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே கவலை என்றும், இந்த நாடு, அதன் மக்கள் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை என்றும், காயல்பட்டினத்தில் இன்றிரவு நடைபெற்ற அதிமுக தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியியில், வழக்குரைஞர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி போட்டியிடுகிறார்.
அவருக்கு ஆதரவு திரட்டுமுகமாக, இன்று (ஏப்ரல் 05 சனிக்கிழமை) 19.00 மணியளவில், காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதிமுக கூட்டணி கட்சிகளான சமத்துவ மக்கள் கட்சியின் நகர தலைவர் அப்துல் அஜீஸ், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர தலைவர் ஷம்சுத்தீன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ.முகைதீன் தலைமை தாங்கி, நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஜெயலலிதா பேரவை தூத்துக்குடி மாவட்ட இணைச் செயலாளர் மு.இராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் பி.ஆர்.மனோகரன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
இக்கூட்டத்தில், திரைப்பட தயாரிப்பாளரும், அதிமுக பேச்சாளருமான இப்றாஹீம் ராவுத்தர், திரைப்பட இயக்குநர் லியாகத் அலி கான், அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளரும் - தமிழக சுற்றுலாத்துறை அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
சிறுபான்மையினருக்கு - குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஜெயலலிதா வழங்கிய திட்டங்களாக பலவற்றைப் பட்டியலிட்டுப் பேசிய அவர்கள், திமுக தலைவர் கருணாநிதி தானே சிறுபான்மையினருக்குப் பாதுகாவலன் என்று தனக்குத் தானே கூறிக்கொண்டு, மக்களை ஏமாற்றிப் பதவி சுகத்தை அனுபவித்து வருவதாகவும், அவருக்கு நாட்டு மக்களை விட தான் பெற்ற மக்கள் மீதுதான் அக்கறை என்றும், அதற்காகவே தன் வாழ்நாளை செலவழிப்பவர் என்றும் குற்றஞ்சாட்டிப் பேசினர்.
அம்மன் டி. நாராயணன், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், நிர்வாகிகளான எஸ்.எம்.அப்துல் காதர், எஸ்.எம்.ஜின்னா, என்.அருணாச்சலகனி, காயல் மவ்லானா, எம்.சமுத்திரக் கனி, பி.அந்தோணி, என்.எம்.அகமது, கப்பல் சேக் சுலைமான், எஸ்.புரட்சி சங்கர், எஸ்.என்.முஹம்மத் அலீ, ஜி.சேகர், ஜெ.ஜின்னா, கே.பழனித்தேவர், நகர்மன்ற உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி உட்பட பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கட்சியின் நகர அவைத்தலைவர் என்.பி.முத்து நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை, நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதர் தலைமையில் கட்சியினர் செய்திருந்தனர்.
அதிமுக தேர்தல் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 22:49 / 05.04.2014] |