இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இத்தேர்தலையொட்டி பொதுக்கூட்டம், பேரணி நடத்தவும், பரப்புரை வாகனத்திற்கு அனுமதி பெறவும் வரைமுறைகளை - தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ம.ரவிகுமார் பின்வருமாறு அறிவித்துள்ளார்:-
தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரைக்காக வாகனங்கள் பயன்படுத்த அனுமதி பெறல், பொதுக்கூட்டங்கள் - உள்ளரங்குக் கூட்டங்கள் நடத்தல், தேர்தல் பணிமனை அமைப்பதற்கு அனுமதி பெறல், பரப்புரை அனுமதி கோரல் மற்றும் இதர அனுமதி கோரி வரப்பெறும் மனுக்கள், 01.04.2014 முதல், தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒற்றைச் சாளர முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலரால் அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போது, வாகன அனுமதி உள்ளிட்ட அனைத்து வகையான அனுமதிகளும் மீண்டும் அந்தந்த - உதவி தேர்தல் நடத்தும் அலுவலகத்திலேயே வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாகன அனுமதியைப் பொருத்த வரையில், ஆர்.சி. புத்தகம், இன்ஷ்யூரன்ஸ் சான்று, வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றின் நகல்களை மட்டும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, வாகன அனுமதி பெற்றுக்கொள்ளலாம். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், குறிப்பிட்ட வாகனங்களின் பேரில் வாகன பராமரிப்பு ஆய்வாளர் சான்று ஏதேனும் கோரினால் மட்டும் சமர்ப்பித்தல் போதுமானதாகும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும் வாகன அனுமதி, பாராளுமன்றத் தொகுதி முழுமைக்கும் செல்லத்தக்கதாகும்.
ஊர்வலம் நடத்த அனுமதி கோரும்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஊர்வலம் தொடருமேயானால், அவ்வகையான அனுமதி தேர்தல் நடத்தும் அலுவரால் / மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும். ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் இறங்குதள அனுமதி, தேர்தல் நடத்தும் அலுவலரால் / மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |