சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் காயலர்கள் இருவர் டாக்டர் பட்டம் பெற்றுள்ளனர். விரிவான விபரம்:-
மர்ஹூம் முஹம்மத் இப்றாஹீமின் மகன்வழிப் பேரனும், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த தாஹா ஹாஜியின் மகள்வழிப் பேரனும், மர்ஹூம் தங்கம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் - நஃபீஸா தம்பதியின் மகனுமான டி.எம்.இப்றாஹீம் தாஹா,
மர்ஹூம் எல்.சி.எம்.அப்துல் காதிரின் மகன்வழிப் பேத்தியும், ஹிஜாஸ் நூஹுவின் மகள்வழிப் பேத்தியும், காயல்பட்டினம் அம்பல மரைக்கார் தெருவைச் சேர்ந்த எம்.ஏ.சி.முஹம்மத் இப்றாஹீம் - எம்.என்.எல்.அய்னுல் ஹினாயா தம்பதியின் மகளுமான எம்.ஐ.ஃபாத்திமா ஷாஹின்
ஆகியோர், சென்னையிலுள்ள ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பு பயின்று முடித்துள்ளனர். இம்மாதம் 02ஆம் நாள் புதன்கிழமை 18.00 மணியளவில், கல்லூரி வளாகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகிக்க, அதன் துணை முதல்வர் மேரி லில்லி, சென்னை எம்.ஜி.ஆர். மருத்துவக் கல்லூரியின் இயக்குநரும், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீனுமான கீதா லட்சுமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மாணவ-மாணவியருக்கு மருத்துவர் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் மாணவ-மாணவியரின் குடும்பத்தினருடன், காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (கே.சி.ஜி.சி.) அமைப்பின் செயலாளர் எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம், காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் டி.முஹம்மத் கிஸார், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.இஸ்மாஈல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மாணவர் டி.எம்.இப்றாஹீம் தாஹா, மாணவி எம்.ஐ.ஃபாத்திமா ஷாஹின் ஆகியோர் - 2007-2008 கல்வியாண்டில், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 1200க்கு முறையே 1168, 1157 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். அதற்காக, தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கம் இணைந்து நடத்திய “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2008” நிகழ்ச்சியின்போது, பாராட்டி பரிசும் வழங்கப்பட்டதும், இவ்விருவரும் - காயல்பட்டினத்தின் துவக்க கால மருத்துவரான டாக்டர் எம்.ஏ.அபுல்ஹஸனின் நெருங்கிய உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகவல் & படங்கள்: சிங்கப்பூரிலிருந்து... ஹிஜாஸ் மைந்தன் மற்றும் M.S.இஸ்மாஈல் (ஹாங்காங்) |