இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடப்பு ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 வியாழக்கிழமையன்று (நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் பரப்புரைகள் இம்மாதம் 22 அன்று 18.00 மணியுடன் நிறைவடைந்தது.
ஏப்ரல் 24 வியாழக்கிழமை (இன்று) தேர்தல் நாளாகும். வாக்குப்பதிவு இன்று 07.00 மணிக்குத் துவங்கி, 18.00 மணிக்கு முடிவுறும்.
காயல்பட்டினத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இன்று காலையில் வாக்குப்பதிவு நேரம் துவங்கியதிலிருந்தே பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். சென்ட்ரல் மேனிலைப்பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடிகளில், ஆண்களும், பெண்களும் தனித்தனி நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துச் செல்கின்றனர்.
சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், முதியவர் ஒருவர் உறவினர் துணையுடன் வாக்களித்துவிட்டு திரும்பிய காட்சி:-
தன் தாயுடன் வாக்குச் சாவடிக்குச் சென்ற குழந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில், அதன் கை விரலில் தேர்தல் அலுவலரால் அடையாள மையிடப்பட்டுள்ள காட்சி:-
முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வாக்குச்சாவடியில், திராவிட முன்னேற்றக் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர், அதன் காயல்பட்டினம் கிளை முன்னாள் செயலாளர் எம்.என்.சொளுக்கு ஆகியோர் வாக்களித்துச் சென்றனர்.
தெருவோரங்களில் ஆங்காங்கே கூடி நின்று பேசிக்கொண்டிருந்தோரை, தேர்தல் பாதுகாப்பு சுற்றுப்பணியில் ஈடுபட்டுள்ள காவலர்கள் கலைந்து செல்ல உத்தரவிட்டு வருகின்றனர்.
நகரில், எவ்வித சண்டை, சச்சரவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில், காலை 09.00 மணி நிலவரப்படி, 11 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
காயல்பட்டினத்திலுள்ள வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள், வாக்குச் சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நிரந்தரமாக உள்ளது. அப்பக்கத்தைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |