இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடப்பு ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 24 வியாழக்கிழமையன்று (நாளை) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மார்ச் 05ஆம் நாளன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேர்தல் பரப்புரைகள் இம்மாதம் 22 அன்று 18.00 மணியுடன் நிறைவடைந்தது.
ஏப்ரல் 24 வியாழக்கிழமை (இன்று) தேர்தல் நாளாகும். வாக்குப்பதிவு இன்று 07.00 மணிக்குத் துவங்கி, 18.00 மணிக்கு முடிவுறும்.
காயல்பட்டினத்தின் அனைத்து வாக்குச் சாவடிகளிலும், இன்று காலையில் வாக்குப்பதிவு நேரம் துவங்கியதிலிருந்தே பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
இன்று காலையில் மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், அவரது கணவர் ஷேக் அப்துல் காதிர் ஆகியோர் சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தனர்.
காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவருமான வாவு எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான், அக்கல்லூரியின் செயலாளர் வாவு எம்.எம்.முஃதஸிம், துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்ட பிரமுகர்கள், சென்ட்ரல் மேனிலைப்பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு செய்தனர்.
தீவுத் தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மகளிர் மேனிலைப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி உள்ளிட்ட வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செய்தனர்.
இன்று தேர்தல் நாளை முன்னிட்டு, காயல்பட்டினம் பிரதான வீதி, கூலக்கடை பஜார், எல்.கே.லெப்பைத்தம்பி சாலை உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் ஒரு சில கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
பொதுவாக தேர்தல் நாளின்போது, அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தமது வாக்குச்சாவடி எல்லைகளை நெருங்கியவாறு கூட்டங்கூட்டமாக நின்று வருங்காலப் பிரதமர் குறித்து விவாதிப்பது வழமை. ஆனால், தேர்தல் ஆணையத்தின் வழமைக்கு மாற்றமான கெடுபிடி காரணமாக, இன்று அதுபோன்ற காட்சிகளைக் காணவே இயலவில்லை. பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று கருதப்படும் பகுதிகளில் கூட அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 13 லட்சத்து, 8 ஆயிரத்து 296 வாக்காளர்கள் உள்ளனர். இன்று
09.00 மணி நிலவரப்படி, 1 லட்சத்து 48 ஆயிரத்து 333 பேரும் (11.34 சதவிகிதம்),
11.00 மணி நிலவரப்படி, 3 லட்சத்து 97 ஆயிரத்து 534 பேரும் (30.39 சதவிகிதம்),
13.00 மணி நிலவரப்படி 5 லட்சத்து 86 ஆயிரத்து 738 பேரும் (44.8 சதவிகிதம்)
வாக்களித்துள்ளனர்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
காயல்பட்டினத்திலுள்ள வாக்குச்சாவடிகள், வாக்குச்சாவடிக்குட்பட்ட தெருக்கள், வாக்குச் சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் நிரந்தரமாக உள்ளது. அப்பக்கத்தைக் காண இங்கே சொடுக்குக!
நடப்பு நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |