தன்னைத் தாக்கியதாக, காயல்பட்டினம் நகராட்சியின் நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் (TOWN PLANNING INSPECTOR) அறிவுடைநம்பி மீது நகராட்சி
ஊழியர் முத்து குமார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் நகராட்சியின் நகரமைப்புத் திட்ட ஆய்வளராகப் பணியாற்றி வருபவர் அறிவுடைநம்பி.
இம்மாதம் 08ஆம் நாள் பின்னிரவில், 09ஆம் நாள் நள்ளிரவு 02.45 மணியளவில், நகராட்சி வளாகத்திலிருந்த முத்துக்குமார் என்ற ஊழியரை,
நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் அறிவுடைநம்பியும், சுகாதாரப் பணியாளர் சண்முகமும் சேர்ந்து, “கருப்பசாமி அல்லவா இன்று பணியில் இருக்க
வேண்டும்? நீ ஏன் வந்தாய்?” என்ற கருத்தில் கேட்டு, தகராறு செய்ததாகவும், தன்னை தகாத சொற்களால் திட்டியதாகவும், கழுத்தைப் பிடித்து தள்ளியதாகவும், அதன் காரணமாக தனது இடது மூட்டுக்குக் கீழ் காயமேற்பட்டு, தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளதோடு, நடந்தவற்றை யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் அவ்விருவர் மீதும் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் முத்துக்குமார் புகார் கொடுத்துள்ளார்.
இப்புகார் தொடர்பாக, முதல் தகவல் அறிக்கை (FIRST INFORMATION REPORT - FIR) பதிவு செய்து - ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன் விசாரித்து வருகிறார்.
காயல்பட்டினம் நகராட்சியில் நீண்டகாலமாக காலியாக இருந்த நகரமைப்புத் திட்ட ஆய்வாளர் (TPI) பொறுப்புக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான்
அறிவுடைநம்பி நியமனம் செய்யப்பட்டார். தாராபுரம் நகராட்சியில் பணிப்புரிந்த இவர், அதற்கு பிறகு சில காலமாக எந்த நகராட்சியிலும் பணிக்கு அமர்த்தப்படாமல் இருந்தார் என கூறப்படுகிறது.
காயல்பட்டினம் நகராட்சியில் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இங்கு ஊழியர் சங்கம் துவங்க இவர் முக்கிய பங்கு வகித்தார் என்றும், இவர்
சம்பந்தப்படாத பல துறைகளில் இவரின் தலையீடு இருந்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. |